சி.லோகராஜா

விரிவுரையாளர்,

மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரி

இலங்கையின் பொதுக் கல்வி ஒரு முக்கியமான மாற்றக் கட்டத்தை நோக்கிச் செல்கிறது. புதிய கல்விச் சீர்திருத்தத்தின் முதல் கட்டம் 2026 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டபோதும், திட்டமிட்டபடி அனைத்து நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் நடைமுறைக்கு வரவில்லை. தரம் 1-இல் மாற்றம் தொடங்கப்பட்ட நிலையில், தரம் 6-இல் அறிமுகப்படுத்தப்படவிருந்த சீர்திருத்தம் 2027 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த ஒத்திவைப்பு ஒரு கால அட்டவணை மாற்றம் மட்டுமல்ல. ஒரு தேசியகல்விச் சீர்திருத்தத்தை அறிவிப்பதற்கும் அதை வகுப்பறையில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கும் இடையில் உள்ள இடைவெளியை அது வெளிப்படுத்தியது.

அதனால், 2027 ஆம் ஆண்டில் தரம் 2 மற்றும் தரம் 6 ஆகியவற்றை நோக்கி அடுத்த கட்டம் நகரும் நிலையில் எழும் முக்கியமான கேள்வி இதுதான்:

2026-இன் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு, இலங்கை புதிய கல்விச் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டத்திற்கு உண்மையிலேயே தயாராகியுள்ளதா?

புதிய கல்விச் சீர்திருத்தத்தில் மாற்றியமைக்கப்படுவது கலைத்திட்டம் மட்டுமா?

புதிய கல்விச் சீர்திருத்தம் வெறும் பாடப்புத்தக மாற்றமாக முன்வைக்கப்படவில்லை. கலைத்திட்டம், ஆசிரியர் அபிவிருத்தி, கணிப்பீடு, கல்வி நிர்வாகம், உட்கட்டமைப்பு மற்றும் பங்குதாரர் பங்கேற்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான மாற்ற முயற்சியாக அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படை நோக்கம், தகவல்களை மனப்பாடம் செய்து பரீட்சையில் உயர் புள்ளிகளை பெறும் முறையிலிருந்து விலகி, சிந்தனைத் திறன், பிரச்சினை தீர்த்தல், செயற்பாட்டு கற்றல் மற்றும் வாழ்க்கைத் திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கல்வி முறையை உருவாக்குவதாகும்.

இந்த நோக்கம் பொருத்தமானதுதான். ஆனால் கல்விச் சீர்திருத்தங்களின் வெற்றி அவற்றின் கொள்கை ஆவணங்களில் தீர்மானிக்கப்படுவதில்லை. அவை ஆசிரியரின் கைகளில் எவ்வாறு வகுப்பறை அனுபவமாக மாறுகின்றன என்பதில்தான் அவற்றின் உண்மையான வெற்றி உள்ளது.

2026-இன் தடுமாற்றம்: ஏன் தரம் 6 ஒத்திவைக்கப்பட்டது?

2026 ஆம் ஆண்டு தரம் 1 மற்றும் தரம் 6 ஆகிய இரு நிலைகளிலும் புதிய மாற்றங்களை ஆரம்பிப்பதற்கான முக்கியமான ஆண்டாகத் திட்டமிடப்பட்டது. ஆனால் தரம் 6 சீர்திருத்தம் திட்டமிட்டபடி நடைமுறைக்கு வரவில்லை.

இதற்கான காரணங்களாகக் கற்றல் மொடியுல்கள் தயாரிப்பில் ஏற்பட்ட சிக்கல்கள், ஆசிரியர் பயிற்சியில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் தொழில்நுட்பத் தயார்நிலை தொடர்பான பிரச்சினைகள் குறிப்பிடப்பட்டன.

இந்த மூன்று காரணங்களும் தனித்தனியான சிக்கல்கள் அல்ல. அவை ஒரே அடிப்படையான பிரச்சினையைச் சுட்டிக்காட்டுகின்றன:

சீர்திருத்தத்திற்கான முழுமையான தயார்நிலை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதே அந்த அடிப்படைப் பிரச்சினை ஆகும்.

கற்றல் வளங்கள் தயாராக இல்லாவிட்டால் ஆசிரியர் பயிற்சி முழுமையடையாது. ஆசிரியர் தயாராக இல்லாவிட்டால் புதிய கற்றல் முறையை நடைமுறைப்படுத்த முடியாது. அதற்குத் தேவையான வசதிகள் இல்லாவிட்டால், கலைத்திட்ட மாற்றம் காகிதத்தில் மட்டுமே இருந்து விடும்.

இதுவே 2026 வெளிப்படுத்திய மிக முக்கியமான உண்மை.

2026 தரம் 1 நடைமுறை அனுபவம்: ஒரு பெற்றோரின் நேரடி அவதானிப்பு

கற்றல் மொடியுல்கள் கிடைக்கப்பெறுவதில் தாமதம்

2026 ஆம் ஆண்டில் புதிய கல்விச் சீர்திருத்தம் தரம் 1-இல் நடைமுறைப்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட சில சவால்களை, ஒரு பெற்றோராக நேரடியாக அவதானிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எனது மகள் கல்வி கற்கும் நகர்ப்புறத்தில் அமைந்துள்ள ஒரு பிரபல்யமான பாடசாலையில்கூட, முதலாம் தவணைக்குரிய சில கற்றல் மொடியுல்கள் இரண்டாம் தவணை ஆரம்பித்த பின்னரும் மாணவர்களுக்கு வழங்கப்படாத நிலை காணப்பட்டது.

இது எனது தனிப்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அவதானிப்பாக இருந்தாலும், ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. ஒப்பீட்டளவில் வளங்களும் நிர்வாக வசதிகளும் அதிகமாக உள்ளதாகக் கருதப்படும் ஒரு பாடசாலையில்கூட கற்றல் வளங்கள் உரிய காலத்தில் மாணவர்களைச் சென்றடையவில்லை என்றால், வளக்குறைவான மற்றும் தொலைதூரப் பாடசாலைகளின் நிலை எவ்வாறு இருந்திருக்கலாம்?

பயிற்சி பெறாத ஆசிரியர்கள் தரம் 1-க்கு பொறுப்பாக்கப்பட்டமை

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக போதுமான பயிற்சி பெறாத ஆசிரியர்களும் தரம் 1 வகுப்புகளுக்குப் பொறுப்பாக்கப்பட்டிருந்ததை அறிய முடிந்தது. இது புதிய சீர்திருத்தத்தின் ஆசிரியர் தயார்நிலை தொடர்பான மற்றொரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. புதிய பாடத்திட்டம் மற்றும் கற்றல் அணுகுமுறையை நடைமுறைப்படுத்த வேண்டிய ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சி வழங்கப்படாமல் இருந்தால், சீர்திருத்தத்தின் நோக்கங்கள் வகுப்பறை மட்டத்தில் எவ்வாறு முழுமையாக அடையப்படும்?

இந்த அனுபவம் ஒரு பாடசாலையின் நிலையை மட்டும் கொண்டு முழு நாட்டின் கல்வி அமைப்பைப் பற்றி முடிவு செய்வதற்கான ஆதாரமாகக் கருதப்பட முடியாது. இருப்பினும், புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே கற்றல் வளங்களின் காலமுறை விநியோகம் மற்றும் ஆசிரியர் தயார்நிலை போன்ற அடிப்படை விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

எனவே, 2026 ஆம் ஆண்டின் தரம் 1 நடைமுறை அனுபவம், 2027 ஆம் ஆண்டில் தரம் 2 மற்றும் தரம் 6 ஆகிய நிலைகளில் சீர்திருத்தத்தை விரிவுபடுத்துவதற்கு முன் கவனமாக ஆராயப்பட வேண்டிய ஒரு நடைமுறைப் பாடமாக அமைகிறது. குறிப்பாக, கற்றல் வளங்கள் உரிய காலத்தில் மாணவர்களைச் சென்றடைவது மற்றும் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் ஆசிரியர்கள் தேவையான பயிற்சியுடன் தயாராக இருப்பது ஆகிய இரண்டு அடிப்படை அம்சங்களும் முன்கூட்டியே உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

பெற்றோரின் மீது அதிகரிக்கும் கற்றல் வளச் சுமை

2026 ஆம் ஆண்டில் தரம் 1-இல் புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, ஒரு பெற்றோராக நான் கவனித்த மற்றொரு முக்கியமான விடயம், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்குத் தேவையான வளங்களைத் தயாரிப்பதில் பெற்றோரின் மீது ஏற்பட்ட பொருளாதார மற்றும் நேரச் சுமையாகும்.

பல்வேறு கற்றல் செயற்பாடுகளுக்காக அட்டைகள், படங்கள், மாதிரிகள், அச்சுப் பிரதிகள் மற்றும் பிற கற்றல் பொருட்களைப் பெற்றோர் தயாரிக்க வேண்டிய நிலை உருவாகும்போது, அதற்கான செலவு தவிர்க்க முடியாததாகிறது. குறிப்பாக, ஒரு செயற்பாட்டிற்காகத் தேவையான பொருட்களை வாங்குதல், அவற்றைத் தேடுதல், தயாரித்தல் மற்றும் குழந்தையுடன் இணைந்து பணிபுரிதல் ஆகியவை பெற்றோரிடமிருந்து கணிசமான நேரத்தையும் உழைப்பையும் கோருகின்றன.

வசதியான பொருளாதார நிலையையும் போதுமான நேரத்தையும் கொண்ட பெற்றோருக்கு இது ஒரு கூடுதல் கற்றல் ஆதரவாக இருக்கலாம். ஆனால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், தினக்கூலி தொழிலாளர்கள், நீண்ட நேரம் பணிபுரியும் பெற்றோர் அல்லது பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு இதே தேவைகள் கூடுதல் சுமையாக மாறக்கூடும்.

இங்கே எழும் அடிப்படைக் கேள்வி மிகவும் முக்கியமானது:

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கற்றல் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான பொருளாதார வசதியும் நேரமும் அனைத்து பெற்றோருக்கும் சமமாக உள்ளதா?

ஒரு குழந்தையின் கற்றல் அனுபவத்தின் தரம், அவரது பெற்றோரின் பொருளாதார நிலை அல்லது வீட்டில் அவருக்காக ஒதுக்கக்கூடிய நேரத்தைப் பொறுத்து மாறத் தொடங்கினால், கல்விச் சீர்திருத்தம் எதிர்பார்க்கும் சமத்துவ இலக்கே கேள்விக்குறியாகலாம்.

இதனால், புதிய கற்றல் முறைகளை வடிவமைக்கும்போது மாணவர்களின் தேவைகளை மட்டும் கருத்தில் கொள்வது போதாது. அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பெற்றோர்கள் ஏற்க வேண்டிய செலவு, நேரம் மற்றும் வளச் சுமையையும் கல்விக் கொள்கை உருவாக்குநர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கற்றலுக்குத் தேவையான அடிப்படை வளங்களைப் பெற்றோர்களின் பொருளாதாரத் திறனைப் பொறுத்து விடுவதற்குப் பதிலாக, பாடசாலைகள் மற்றும் கல்வி அதிகாரிகள் தேவையான கற்றல் வளங்களை வழங்குவதற்கான முறையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இல்லையெனில், மாணவர் மையக் கற்றலை நோக்கி உருவாக்கப்படும் சீர்திருத்தம், நடைமுறையில் பெற்றோர் வளத்தைச் சார்ந்த கற்றல் முறையாக மாறும் அபாயம் உள்ளது.

எனவே, 2027 ஆம் ஆண்டில் தரம் 2 மற்றும் தரம் 6 ஆகிய நிலைகளில் சீர்திருத்தத்தை விரிவுபடுத்துவதற்கு முன், ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காணப்பட வேண்டும்:

“இந்த புதிய கற்றல் முறையை ஒரு வசதியான குடும்பம் மட்டுமல்லாமல், சாதாரண பொருளாதார நிலையில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் நடைமுறையில் தாங்கிக் கொள்ள முடியுமா?”

ஒத்திவைப்பு: திட்டமிடல் குறைபாடா அல்லது பொறுப்பான முடிவா?

தரம் 6 சீர்திருத்தத்தின் ஒத்திவைப்பை முற்றிலும் தோல்வியாகக் கருத முடியாது.

ஒருபுறம், திட்டமிட்ட நடைமுறைப்படுத்தலுக்கு முன்னர் கற்றல் வளங்கள், ஆசிரியர் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகள் முழுமையாகத் தயாராகவில்லை என்றால், அது திட்டமிடலில் இருந்த குறைபாட்டைக் காட்டுகிறது.

மறுபுறம், தயார்நிலை இல்லாத நிலையில் அவசரமாகச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் அதன் பாதிப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.

எனவே, ஒத்திவைப்பு ஒரு பின்னடைவு என்றாலும், அது தவறான தயார்நிலையுடன் முன்னேறுவதைத் தவிர்த்த ஒரு பொறுப்பான தீர்மானமாகவும் பார்க்கப்படலாம்.

ஆனால் அதற்குப் பிறகு முக்கியமான கேள்வி எழுகிறது:

ஒத்திவைப்புக்குக் காரணமான பிரச்சினைகள் 2027-க்கு முன் உண்மையில் தீர்க்கப்பட்டுள்ளனவா?

இந்தக் கேள்விக்கான பதில்தான் அடுத்த கட்டத்தின் வெற்றியை நிர்ணயிக்கும்.

சீர்திருத்தத்தின் மூன்று அடிப்படைத் தூண்கள்

2026-இன் அனுபவத்தைப் பார்த்தால், 2027 சீர்திருத்தத்தின் வெற்றி மூன்று முக்கியமான துறைகளின் தயார்நிலையுடன் நேரடியாகத் தொடர்புடையதாகத் தெரிகிறது:

1. தரமான கற்றல் வளங்கள்

2. தயாரான ஆசிரியர்கள்

3. பொருத்தமான பாடசாலைச் சூழல்

இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று பலவீனமாக இருந்தாலும், முழுச் சீர்திருத்தமும் பாதிக்கப்படும்.

தரமான கற்றல் வளங்கள்

புதிய கல்வி அணுகுமுறையில் பயன்படுத்தப்படும் மொடியுல்கள் மற்றும் பிற கற்றல் வளங்கள் வெறும் அச்சிடப்பட்ட ஆவணங்களாக இருக்க முடியாது.

அவை:

  • மாணவரின் வயதிற்கும் கற்றல் மட்டத்திற்கும் பொருத்தமானதாகவும்;
  • மொழி மற்றும் உள்ளடக்க ரீதியாகத் துல்லியமானதாகவும்;
  • செயற்பாட்டு கற்றலை ஊக்குவிப்பதாகவும்;
  • ஆசிரியர் பயன்படுத்தக்கூடியதாகவும்

இருக்க வேண்டும்.

கற்றல் வளங்களை உருவாக்குவது ஒரு நிர்வாகப் பணியாக அல்லாமல், கல்வியியல் தர உறுதிப்படுத்தல் செயல்முறையாகப் பார்க்கப்பட வேண்டும்.

2026-இல் ஏற்பட்ட அனுபவத்திற்குப் பிறகு, 2027-இல் பயன்படுத்தப்படவுள்ள கற்றல் வளங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே பல கட்டங்களில் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தயாரான ஆசிரியர்கள்

எந்த கல்விச் சீர்திருத்தத்தின் வெற்றியையும் இறுதியில் தீர்மானிப்பவர் ஆசிரியர்தான்.

புதிய பாடத்திட்டத்தை ஆசிரியரிடம் வழங்குவது மட்டும் போதாது. புதிய கற்றல் தத்துவம், செயற்பாட்டு முறைகள் மற்றும் மதிப்பீட்டு நடைமுறைகளை ஆசிரியர் புரிந்துகொண்டு, அவற்றை வகுப்பறையில் பயன்படுத்தக்கூடிய திறனைப் பெற வேண்டும்.

இங்கே ஆசிரியர் பயிற்சி ஒரு கருத்தரங்காக முடிவடையக் கூடாது.

அதற்கு:

  • தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாடு;
  • பாடசாலை மட்ட வழிகாட்டல்;
  • நடைமுறை ஆதரவு;
  • அனுபவப் பகிர்வு;
  • பின்னூட்டல்

தேவை.

இல்லையெனில், புதிய கலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பழைய கற்பித்தல் முறையே தொடரும் அபாயம் உள்ளது

பொருத்தமான பாடசாலைச் சூழல்

புதிய கல்வி அணுகுமுறை மாணவர் மைய மற்றும் செயற்பாட்டு கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால் அத்தகைய கற்றலுக்கு பொருத்தமான வகுப்பறை மற்றும் வளங்கள் தேவை.

இலங்கையின் அனைத்து பாடசாலைகளும் ஒரே அளவிலான வசதிகளைக் கொண்டவை அல்ல என்பது யதார்த்தம்.

வகுப்பறை இடம், கற்றல் உபகரணங்கள், டிஜிட்டல் வசதிகள் மற்றும் இணைய அணுகல் போன்ற துறைகளில் உள்ள வேறுபாடுகள் சீர்திருத்தத்தின் விளைவிலும் வேறுபாட்டை ஏற்படுத்தலாம்.

இதனால், ஒரே கலைத்திட்டத்தை அனைத்து பாடசாலைகளுக்கும் வழங்குவது மட்டும் போதுமானதல்ல. அதை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வளங்களையும் சமமாக வழங்க வேண்டும்.

இல்லையெனில், கல்வி இடைவெளியைக் குறைக்க வேண்டிய சீர்திருத்தமே பாடசாலைகளுக்கு இடையிலான வேறுபாட்டை அதிகரிக்கக்கூடும்.

மதிப்பீட்டு மாற்றம்: புதிய சிந்தனைக்கு புதிய நடைமுறை தேவை

புதிய கல்வி அணுகுமுறை பரீட்சை மைய மதிப்பீட்டிலிருந்து விலகி, தொடர்ச்சியான மற்றும் திறன் அடிப்படையிலான கணிப்பீட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

இது மாணவரின் முழுமையான கற்றல் முன்னேற்றத்தைப் புரிந்துகொள்ள உதவும் மாற்றமாக இருக்கலாம்.

ஆனால் நடைமுறையில் ஆசிரியர்களுக்கு அதிகமான மாணவர்கள், நேரக் குறைபாடு மற்றும் பதிவு செய்ய வேண்டிய பணிச்சுமை போன்ற சவால்கள் உள்ளன.

எனவே, புதிய கணிப்பீட்டு முறையுடன்:

  • தெளிவான வழிகாட்டுதல்கள்;
  • ஒரே தரநிலைகள்;
  • எளிமையான கணிப்பீட்டுக் கருவிகள்;
  • ஆசிரியர்களுக்கான நடைமுறைப் பயிற்சி

வழங்கப்பட வேண்டும்.

கணிப்பீடு மாணவரின் கற்றலை மேம்படுத்துவதற்கான கருவியாக இருக்க வேண்டும்; ஆசிரியரின் நிர்வாகச் சுமையை அதிகரிக்கும் செயல்முறையாக அல்ல.

நம்பிக்கை மற்றும் பங்கேற்பு: சீர்திருத்தத்தின் முக்கிய கூறை மறந்துவிடக் கூடாது

கல்விச் சீர்திருத்தத்தை ஒரு அமைச்சகத்தின் அல்லது அரசாங்கத்தின் திட்டமாக மட்டும் பார்க்க முடியாது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் சமூகத்தின் நம்பிக்கையும் பங்கேற்பும் இல்லாமல் பெரிய அளவிலான கல்வி மாற்றத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது.

இந்த உண்மையைப் புரிந்துகொள்ள, புதிய கல்விச் சீர்திருத்தத்துடன் தொடர்புடைய பாடசாலை நேர அட்டவணை மாற்ற முன்மொழிவைச் சுற்றி ஏற்பட்ட சர்ச்சையை ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஆசிரியர் சங்கங்களின் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களுக்குப் பின்னர் அந்த முன்மொழிவு கைவிடப்பட்டது. இந்த நிகழ்வு, ஆசிரியர்களின் அன்றாடப் பணியையும் மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளையும் நேரடியாகப் பாதிக்கும் மாற்றங்கள் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், தொடர்புடைய பங்குதாரர்களுடன் போதுமான கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

இங்கே கேள்வி, பாடசாலை நேர அட்டவணையை மாற்றுவது சரியா அல்லது தவறா என்பதுடன் மட்டும் தொடர்புடையதல்ல. அதைவிட முக்கியமான கேள்வி, அத்தகைய மாற்றம் முன்வைக்கப்படுவதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதி அமைப்புகளின் கருத்துக்கள் போதுமான அளவில் பெறப்பட்டனவா? என்பதாகும்.

ஆசிரியர்களை ஒரு புதிய கொள்கையை நடைமுறைப்படுத்தும் நிர்வாகக் கருவிகளாக மட்டும் கருத முடியாது. அவர்கள் கல்விச் சீர்திருத்தத்தின் முக்கியமான பங்குதாரர்கள். அவர்களின் வகுப்பறை அனுபவம், பணிச்சுமை மற்றும் நடைமுறைச் சவால்கள் சீர்திருத்தத் திட்டமிடலின் ஆரம்ப நிலையிலேயே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

அதேபோன்று, புதிய கற்றல் முறைகள் மற்றும் மதிப்பீட்டு மாற்றங்கள் குறித்து பெற்றோருக்கும் தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், புரிதலின்மையும் தவறான தகவல்களும் மாற்றத்தின் மீது தேவையற்ற அச்சத்தை உருவாக்கலாம்.

எனவே, பொது விழிப்புணர்வும் பங்குதாரர் கலந்தாலோசனையும் சீர்திருத்தத்தின் பிந்தைய நடவடிக்கைகளாக இருக்கக் கூடாது. மாற்றம் வடிவமைக்கப்படும் ஆரம்ப நிலையிலிருந்தே ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்புகளின் கருத்துக்களையும் அனுபவங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

சீர்திருத்தம் வெற்றிபெற வேண்டுமெனில், மாற்றத்தை முதலில் அறிவித்து பின்னர் எதிர்ப்புகளைச் சமாளிப்பதை விட, நம்பிக்கையையும் பங்கேற்பையும் முன்கூட்டியே உருவாக்குவதே சிறந்த அணுகுமுறையாகும்.

2027: அடுத்த கட்டமா அல்லது அடுத்த சோதனையா?

2027 ஆம் ஆண்டில் தரம் 1-இல் ஆரம்பிக்கப்பட்ட மாற்றம் தரம் 2-க்கு நகரும் நிலையில், 2026-இல் ஒத்திவைக்கப்பட்ட தரம் 6 சீர்திருத்தமும் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதனால் 2027 ஒரு முக்கியமான சோதனைக் கட்டமாக அமைகிறது.

2026-இன் அனுபவம் மீண்டும் நிகழாமல் இருக்க, பின்வரும் கேள்விகளுக்கு நடைமுறைப்படுத்தலுக்கு முன்னரே தெளிவான பதில்கள் இருக்க வேண்டும்:

  • கற்றல் வளங்கள் முழுமையாகத் தயாரா?
  • ஆசிரியர்கள் தேவையான பயிற்சியைப் பெற்றுள்ளனரா?
  • அனைத்து பாடசாலைகளுக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கின்றனவா?
  • புதிய மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் தயாரா?
  • ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாற்றத்தைப் புரிந்துகொண்டுள்ளனரா?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமல் சீர்திருத்தம் முன்னேறினால், 2026-இல் ஏற்பட்ட தடுமாற்றங்கள் வேறு வடிவில் மீண்டும் தோன்றலாம்.

இலங்கை உண்மையிலேயே தயாரா?

2026-இன் அனுபவம் இலங்கையின் கல்விச் சீர்திருத்தத்திற்கு ஒரு முக்கியமான பாடத்தை வழங்கியுள்ளது:

ஒரு நல்ல கல்விக் கொள்கை மட்டும் போதாது; அதை நடைமுறைப்படுத்துவதற்கான முழுமையான அமைப்புத் தயார்நிலை அவசியம்.

புதிய கலைத்திட்டம், கற்றல் மொடியுல்கள் மற்றும் கணிப்பீட்டு முறைகள் ஆகியவை சீர்திருத்தத்தின் ஒரு பகுதி மட்டுமே.

அவற்றை வெற்றிகரமாக இணைப்பது:

  • தயாரான ஆசிரியர்கள்;
  • தரமான கற்றல் வளங்கள்;
  • சமமான வசதிகள்;
  • தெளிவான நடைமுறை வழிகாட்டல்;
  • ஆசிரியர் மற்றும் பெற்றோர் பங்கேற்பு

ஆகியவற்றின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

2026- தரம் 6 ஒத்திவைப்பு ஒரு பின்னடைவு என்றாலும், அதில் பெற்ற அனுபவங்கள், 2027-க்கு முன்னேறுவதற்கு முன் சீர்திருத்தத்தின் தயார்நிலையை மீண்டும் ஆராய ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகின்றன.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கடந்த ஆண்டில் வெளிப்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்தால், 2027 புதிய கல்விச் சீர்திருத்தத்தின் வலுவான அடுத்த கட்டமாக அமையலாம்.

ஆனால், திட்டமிட்ட கால அட்டவணையைப் பின்பற்றுவதற்காக மட்டும் போதிய தயார்நிலை இல்லாமல் முன்னேறினால், நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்படும் இந்த மாற்றமே நடைமுறையில் புதிய சிக்கல்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

எனவே, நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி, “புதிய கலைத்திட்டம் தயாரா?” என்பது மட்டுமல்ல.

“இந்த மாற்றத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த நமது கல்வி அமைப்பு தயாரா?” என்பதும்தான்.

2027 என்பது வெறும் மற்றொரு கல்வியாண்டு அல்ல. புதிய கல்விச் சீர்திருத்தம் திட்டத்திலிருந்து வெற்றிகரமான நடைமுறைக்கு நகருமா என்பதை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான ஆண்டாகும்.