சி.லோகராஜா,
விரிவுரையாளர்,
மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரி.
அறிமுகம்
ஒரு ஆசிரியரின் தொழில்முறைத் திறனைப் பற்றி பேசும்போது பாட அறிவு, கற்பித்தல் முறைகள், வகுப்பறை முகாமைத்துவம் மற்றும் கணிப்பீட்டுத் திறன்கள் ஆகியவை பொதுவாக முன்னிலைப் படுத்தப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அடிப்படைத் திறனாக தொடர்பாடல் திறன் விளங்குகிறது.
ஆசிரியரின் தொடர்பாடல் என்பது வகுப்பறையில் பாடத்தை விளக்குவதற்காகப் பேசுவதுடன் முடிவடைவதில்லை. மாணவர்களின் கருத்துக்களை கவனமாகக் கேட்பது, அவர்களின் கேள்விகளுக்கு மரியாதையுடன் பதிலளிப்பது, அவர்களின் கற்றல் சிரமங்களை அடையாளம் காண்பது, பொருத்தமான பின்னூட்டல் வழங்குவது, பெற்றோர்களுடன் இணைந்து செயல்படுவது, சக ஆசிரியர்களுடன் கருத்துகளைப் பகிர்வது, அதிபருடன் தொழில்முறையாகக் கலந்துரையாடுவது மற்றும் பாடசாலையின் அனைத்து உறுப்பினர்களுடனும் மரியாதையான உறவைப் பேணுவது ஆகிய அனைத்தும் ஆசிரியரின் தொடர்பாடலின் பகுதிகளாகும்.
இலங்கைச் சூழலில் இந்த விடயம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆசிரியர்–மாணவர் உறவில் ஆசிரியரின் அதிகாரம் மற்றும் மாணவரின் குரல் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை உருவாக்க வேண்டியுள்ளது. இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தை ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட அண்மைய qualitative study ஒன்றில், ஆசிரியரின் அதிகாரம் இரு சூழல்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இருவழித் தொடர்பாடல், மரியாதையான அணுகுமுறை, மாணவர்களின் பெயரைப் பயன்படுத்துதல் மற்றும் மாணவர்களுடன் பொதுவான நிலையை உருவாக்குதல் ஆகியவை அதிகார இடைவெளியைக் குறைத்து மாணவர் பங்கேற்பை ஊக்குவிக்க உதவுவதாகக் கண்டறியப்பட்டது (Ellawala et al., 2026).
எனவே, இன்றைய ஆசிரியருக்கு முக்கியமான கேள்வி, “நான் என்ன கற்பிக்கிறேன்?” என்பதுடன் “நான் எவ்வாறு தொடர்புகொள்கிறேன்?” என்பதுமாகும்.
1. தொடர்பாடல் என்பது பேசுவது மட்டும் அல்ல
தொடர்பாடல் என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தகவலை அனுப்புவது மட்டுமல்ல. அது கருத்து, உணர்வு, அனுபவம், எதிர்பார்ப்பு மற்றும் பொருளைப் பரிமாறிக்கொள்ளும் இருவழிச் செயற்பாடு ஆகும்.
ஆசிரியரின் தொடர்பாடலில் பின்வரும் கூறுகள் முக்கியமானவை:
- வாய்மொழித் தொடர்பாடல்
- உயிர்ப்புடன் செவிமடுத்தல் (Active Listening)
- சொல்லற்ற தொடர்பாடல் (Non-verbal Communication)
- வினா எழுப்புதல்
- பின்னூட்டல் வழங்குதல்
- உணர்வுசார் தொடர்பாடல்
- எழுத்துத் தொடர்பாடல்
- டிஜிட்டல் தொடர்பாடல்
- பெற்றோர்–ஆசிரியர் தொடர்பாடல்
- தொழில்முறை குழுத் தொடர்பாடல்.
இதனால், தொடர்பாடல் ஒரு “soft skill” மட்டுமல்ல. அது ஆசிரியரின் தொழில்முறை நடைமுறையைச் செயல்படுத்தும் அடிப்படைத் திறன் ஆகும்.
2. மாணவர்களுடன் தொடர்பாடுதல்: கற்பிப்பதை விடக் செவிமடுப்பது
சிறந்த ஆசிரியரின் முக்கியமான தொடர்பாடல் திறன்களில் ஒன்று உயிர்ப்புடன் செவிமடுத்தல் ஆகும்.
ஒரு மாணவர்,
“Sir, இந்தப் பகுதி எனக்கு புரியவில்லை.”
என்று கூறும்போது, ஆசிரியர்,
“இதை ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். கவனமாகக் கேட்டிருக்க வேண்டும்.”
என்று பதிலளிக்கலாம்.
ஆனால் மற்றொரு ஆசிரியர்,
“சரி. எந்தப் பகுதியில் சிரமம் இருக்கிறது? நீங்கள் முயற்சி செய்த விதத்தை எனக்குக் காட்டுங்கள்.”
என்று கேட்கலாம்.
இரண்டாவது பதில் மாணவருக்கு,
“என் ஆசிரியர் என்னைக் கேட்கிறார்; எனது சிரமம் முக்கியமானது”
என்ற உணர்வை உருவாக்குகிறது.
இது வெறும் மரியாதையான மொழிப் பயன்பாடு அல்ல. அது கற்றலுக்கான உளவியல் பாதுகாப்பை உருவாக்கும் தொடர்பாடல் நடைமுறையாகும்.
நடைமுறை எடுத்துக்காட்டு
ஒரு மாணவர் தொடர்ந்து வீட்டுப்பாடத்தைச் செய்யாமல் வருகிறார் எனக் கருதுவோம்.
தண்டனை மையமான அணுகுமுறை:
“நீ எப்போதும் வீட்டுப்பாடம் செய்யாமல் வருகிறாய். நாளை பெற்றோரை அழைத்து வா.”
ஆதரவு மையமான தொடர்பாடல்:
“கடந்த சில நாட்களாக வீட்டுப்பாடத்தை முடிப்பதில் உங்களுக்கு சிரமம் இருப்பதை நான் கவனித்தேன். ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? உங்களுக்கு உதவுவதற்காக நாம் என்ன செய்யலாம்?”
இரண்டாவது அணுகுமுறை ஒழுங்கை மறுப்பதல்ல. மாறாக, நடத்தைக்குப் பின்னால் இருக்கும் காரணத்தைப் புரிந்துகொண்டு தீர்வைத் தேடுகிறது.
3. இலங்கைச் சூழலில் ஆசிரியர்–மாணவர் உறவு
இலங்கைப் பாடசாலைச் சூழலில் ஆசிரியருக்கு வழங்கப்படும் மரியாதையும் அதிகாரமும் கல்வி உறவின் முக்கிய அம்சங்களாக உள்ளன. அதேவேளை, மாணவர்கள் கேள்வி கேட்கவும், தங்கள் கருத்துக்களை முன்வைக்கவும், சந்தேகங்களைத் தெரிவிக்கவும் பாதுகாப்பான சூழல் அவசியமாகிறது.
இலங்கை கல்விச் சூழல்களில் ஆசிரியர்–மாணவர் உறவில் அதிகார இடைவெளி காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது
ஆசிரியரின் அதிகாரம் மறைய வேண்டியதில்லை; ஆனால் அந்த அதிகாரம் மாணவரின் குரலை அடக்குவதற்குப் பயன்படுத்தப்படக் கூடாது.
வகுப்பறையில் இதை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம்?
“இது தவறு” என்பதற்குப் பதிலாக:
“இந்தப் பதிலுக்கு நீங்கள் எவ்வாறு வந்தீர்கள்?”
என்று கேட்கலாம்.
“அமைதியாக இருங்கள்” என்பதற்குப் பதிலாக:
“முதலில் உங்கள் நண்பரின் கருத்தைக் கேளுங்கள்; அதன் பின்னர் உங்கள் கருத்தைப் பகிருங்கள்.”
என்று கூறலாம்.
இதன் மூலம் ஆசிரியரின் வழிகாட்டும் அதிகாரமும் மாணவரின் செயற்பாட்டு பங்கேற்பும் ஒன்றாகப் பாதுகாக்கப்படுகின்றன.
4. தொடர்பாடலும் மாணவர் ஈடுபாடும்
இலங்கைச் சூழலில் மேற்கொள்ளப்பட்ட Perera (2021) ஆய்வு இந்த விவாதத்திற்கு முக்கியமான உள்ளூர் ஆதாரத்தை வழங்குகிறது.
The Open University of Sri Lanka-வைச் சேர்ந்த K. D. R. L. J. Perera, Monaragala மற்றும் Nuwara Eliya மாவட்டங்களில் உள்ள 12 அரசுப் பாடசாலைகளைச் சேர்ந்த Grade 8 மாணவர்களை உள்ளடக்கிய ஆய்வில், மாணவர்களின் motivation மற்றும் engagement-ஐப் பாதிக்கும் பாடசாலை சார் காரணிகளில் classroom relationships முக்கியமானதாகக் கண்டறிந்தார். 200 மாணவர்களிடமிருந்து அளவியல் தரவும், குறைந்த motivation கொண்ட 24 மாணவர்களிடமிருந்து qualitative interview தரவும் பெறப்பட்டன. மாணவர்கள் குறிப்பிட்ட எதிர்மறையான teacher–student relationships, போதிய encouragement இல்லாமை, un-engaging teaching மற்றும் unfriendly teaching-learning environment ஆகியவற்றை தங்கள் கற்றல் ஈடுபாட்டை பாதிக்கும் காரணிகளாகக் குறிப்பிட்டனர் (Perera, 2021).
தொடர்பாடல் → உறவு → ஈடுபாடு → கற்றல் என்ற தொடர் உருவாகலாம்.
எனவே, “மாணவர் ஏன் ஈடுபடவில்லை?” என்று கேட்பதற்கு முன்,
“அந்த மாணவருடன் நான் உருவாக்கிய கற்றல் உறவு எவ்வாறு உள்ளது?”
என்று ஆசிரியர் சிந்திக்க வேண்டும்.
கல்விச் சூழலில் உரையாடல் மையமான கற்பித்தலைப் பயன்படுத்துதல்
கல்வி Endowment Foundation (EEF) ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட Dialogic Teaching தொடர்பான பரிசோதனை ஆய்வில், மாணவர்கள் ஆசிரியரின் கேள்விகளுக்கு வெறுமனே பதிலளிப்பதைத் தாண்டி, தங்கள் கருத்துக்களை விளக்குதல், காரணம் கூறுதல், கேள்வி எழுப்புதல், கருத்துக்களை ஒப்பிடுதல் மற்றும் விவாதித்தல் போன்ற கற்றல் உரையாடல்களில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் ஆராயப்பட்டது (Jay et al., 2017). இத்தகைய அணுகுமுறை ஆசிரியர் பேசும் நேரத்தைக் குறைப்பது மட்டுமல்ல; மாணவர்கள் சிந்தித்து, பேசிக் கற்று, தங்கள் கருத்துக்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும் வகுப்பறைச் சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
இதை இலங்கைப் பாடசாலைச் சூழலில் பல்வேறு பாடங்களில் நடைமுறைப்படுத்தலாம்.
ஒரு வரலாற்றுப் பாடத்தில்:
ஆசிரியர் “இந்த வரலாற்றுச் சம்பவம் ஏன் ஏற்பட்டது?” என்று கேட்டு, ஒரு மாணவரின் பதிலை அடுத்த மாணவரிடம் “இந்தக் கருத்துடன் நீங்கள் உடன்படுகிறீர்களா? ஏன்?” என்று தொடரலாம்.
விஞ்ஞான பாடத்தில்,
“இந்தப் பரிசோதனையின் முடிவு ஏன் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம்?” என்று மாணவர்களை காரணம் கூறச் செய்யலாம்.
சமூக விஞ்ஞான பாடத்தில்,
ஒரு சமூகப் பிரச்சினையை முன்வைத்து, “இதற்கு வேறு தீர்வு இருக்க முடியுமா?” என்று குழு விவாதத்தைத் தூண்டலாம்.
கணிதப் பாடத்தில்,
சரியான விடையை மட்டும் கேட்பதற்குப் பதிலாக, “இந்த விடையை எவ்வாறு பெற்றீர்கள்?” அல்லது “இதை வேறு முறையில் தீர்க்க முடியுமா?” என்று கேட்பதன் மூலம் மாணவர்களின் சிந்தனைச் செயல்முறையை வெளிக்கொணரலாம்.
இத்தகைய வகுப்பறையில் ஆசிரியர் அறிவை வழங்குபவர் மட்டுமல்ல; கற்றல் உரையாடலை வழிநடத்துபவராகவும் செயல்படுகிறார். அதேவேளை, மாணவர்களின் ஒவ்வொரு பதிலும் உடனடியாக சரி அல்லது தவறு எனத் தீர்மானிக்காமல்,
“உங்கள் கருத்துக்கு என்ன ஆதாரம் உள்ளது?”, “உங்கள் நண்பரின் கருத்துடன் நீங்கள் எவ்வாறு ஒப்பிடுகிறீர்கள்?” போன்ற தொடர் கேள்விகள் மூலம் ஆழமான சிந்தனைக்கு வழிகாட்டலாம்.
எனவே, இலங்கைப் பாடசாலைகளில் உரையாடல் மையமான கற்பித்தலைப் பயன்படுத்துவது மாணவர்களின் செயற்பாட்டு பங்கேற்பு, காரணமறிந்து சிந்தித்தல், கருத்தை வெளிப்படுத்துதல், பிறரின் கருத்தைக் கேட்பது மற்றும் ஒத்துழைப்புடன் கற்றல் போன்ற திறன்களை வளர்ப்பதற்கான ஒரு நடைமுறை அணுகுமுறையாக அமையலாம்.
6. பெற்றோர்–ஆசிரியர் தொடர்பாடல்: குறை கூறுவதிலிருந்து கூட்டுப்பொறுப்புக்கு
மாணவர்களின் கற்றல் மற்றும் வளர்ச்சிக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படுவது முக்கியமானதாகும். Australian Education Research Organisation (AERO) வழங்கும் ஆதார அடிப்படையிலான நடைமுறை வழிகாட்டுதல் (evidence-informed practice guide), குறிப்பாக இடைநிலை மற்றும் உயர்நிலைப் பாடசாலைச் சூழலில், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான இருவழித் தொடர்பாடலை (two-way communication) வலியுறுத்துகிறது. அதாவது, ஆசிரியர் பெற்றோருக்கு மாணவரைப் பற்றிய தகவல்களை மட்டும் வழங்குவதற்குப் பதிலாக, பெற்றோரிடமிருந்தும் மாணவரின் கற்றல், ஆர்வம், சிரமங்கள் மற்றும் வீட்டுச் சூழல் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வது முக்கியமாகும். (Australian Education Research Organisation [AERO], 2024).
இக்கருத்தை இலங்கைப் பாடசாலைச் சூழலிலும் பயனுள்ளதாகப் பயன்படுத்தலாம். உதாரணமாக, ஒரு மாணவர் கணிதத்தில் தொடர்ந்து குறைந்த பெறுபேறுகளைப் பெறுகிறார் என்றால், பெற்றோரிடம் “உங்கள் பிள்ளைக்கு கணிதம் சரியாகத் தெரியவில்லை” என்று கூறுவதற்குப் பதிலாக, “உங்கள் பிள்ளை வாய்மொழிக் கணக்குகளில் நன்றாகப் பங்கேற்கிறார்; ஆனால் எழுத்து அடிப்படையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சில சிரமங்கள் காணப்படுகின்றன. வீட்டில் கணிதப் பயிற்சிக்கான நேரம் மற்றும் மாணவர் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து உங்கள் அனுபவத்தைப் பகிர முடியுமா?” என்று கேட்கலாம்.
இவ்வாறான தொடர்பாடல், பெற்றோரை ஒரு தகவல் பெறுபவராக மட்டும் அல்லாமல், மாணவரின் கற்றல் செயல்முறையில் பங்காளியாக அணுகுகிறது. இதன் மூலம் ஆசிரியருக்கு வகுப்பறையில் மாணவரைப் பற்றிய புரிதலுடன் சேர்த்து, வீட்டுச் சூழல் மற்றும் மாணவரின் பிற கற்றல் அனுபவங்களைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. எனவே, பயனுள்ள பெற்றோர்–ஆசிரியர் தொடர்பாடல் என்பது மாணவரின் குறைகளை அறிவிப்பதற்கான ஒரு வழிமுறை அல்ல; மாணவரின் கற்றல் மற்றும் வளர்ச்சிக்காக இரு தரப்பினரும் இணைந்து செயல்படும் கல்விக் கூட்டாண்மையை உருவாக்கும் செயல்முறையாகும்
7. டிஜிட்டல் தொடர்பாடல்: WhatsApp காலத்து ஆசிரியர்
இன்றைய பாடசாலைச் சூழலில் ஆசிரியர்–பெற்றோர் தொடர்பாடல் நேருக்கு நேர் சந்திப்புகளுக்கு மட்டும் மட்டுப்படுவதில்லை.
WhatsApp, SMS, email மற்றும் பிற digital platforms பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் டிஜிட்டல் தொடர்பாடலுக்கும் தொழில்முறை நெறிமுறைகள் தேவை.
ஒரு சிறந்த WhatsApp செய்தி:
“அன்புடைய பெற்றோரே,
நாளைய கணித பாட கணிப்பீட்டுக்காக மாணவர்கள் 3 மற்றும் 4ஆம் அலகுகளை மீளாய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் சிரமம் இருப்பின், மாணவர்கள் நாளை வகுப்பிற்கு முன் என்னை அணுகலாம். நன்றி.”
இது:
- தெளிவானது
- சுருக்கமானது
- மரியாதையானது
- கற்றல் நோக்கத்துடன் தொடர்புடையது.
மாணவரின் தனிப்பட்ட குறைபாடுகளை முழு WhatsApp குழுவிலும் வெளியிடுவது போன்ற நடைமுறைகளைத் தவிர்ப்பதும் முக்கியம்.
பெற்றோருடன் தொடர்பு கொள்வது பிரச்சினை ஏற்பட்டபோது மட்டும் நடைபெறக்கூடாது; மாணவரின் கற்றல் முன்னேற்றத்தைப் பற்றி தொடர்ந்து, சுருக்கமாக, நேர்மறையாகவும் குறிப்பிட்ட வகையிலும் தொடர்புகொள்வது பயனுள்ளதாக இருக்கலாம்.
9. சக ஆசிரியர்களுடன் தொடர்பாடுதல்
ஒரு பாடசாலை என்பது தனித்தனி ஆசிரியர்கள் பணியாற்றும் இடமல்ல; அது ஒரு professional learning community ஆகும்.
உதாரணமாக, ஒரு Grade 8 மாணவரின் கற்றல் சிரமத்தைப் பார்ப்போம்.
தமிழ் ஆசிரியர்:
“வாய்மொழியாக நன்றாக வெளிப்படுத்துகிறார்; எழுதுவதில் சிரமம் உள்ளது.”
ஆங்கில ஆசிரியர்:
“வாசிப்பிலும் சிரமம் இருப்பதை கவனித்துள்ளேன்.”
வகுப்பாசிரியர்:
“கடந்த மாதம் வருகையும் குறைந்துள்ளது.”
இந்த மூன்று தகவல்களும் தனித்தனியாகத் தோன்றினாலும், அவற்றை இணைத்துப் பார்க்கும்போது மாணவரின் நிலையைப் பற்றிய முழுமையான புரிதல் உருவாகிறது.
எனவே, ஆசிரியர்களுக்கிடையிலான தொடர்பாடல் என்பது நிர்வாகத் தேவையாக மட்டும் இல்லாமல் மாணவர் ஆதரவுக்கான கருவியாகவும் அமைகிறது.
10. அதிபருடன் தொழில்முறை தொடர்பாடுதல்
ஒரு ஆசிரியர் அதிபரிடம் பிரச்சினையை முன்வைக்கும் போது,
“இந்தத் திட்டம் வேலை செய்யாது.” என்று கூறுவதைவிட,
பிரச்சினை → ஆதாரம் → தாக்கம் → தீர்வுக்கான பரிந்துரை
என்ற கட்டமைப்பில் பேசுவது தொழில்முறையானது.
உதாரணமாக:
“Grade 9 மாணவர்களின் கடந்த மூன்று formative assessments-ஐ ஒப்பிட்டுப் பார்த்ததில் வாசிப்புப் புரிதலில் தொடர்ச்சியான சிரமம் இருப்பது தெரிய வருகிறது. வாரத்திற்கு ஒரு 30 நிமிட வாசிப்பு ஆதரவு அமர்வை நான்கு வாரங்களுக்கு முயற்சித்து, அதன் முடிவுகளை கணிப்பிடலாம் என்று பரிந்துரைக்கிறேன்.”
இது:
Evidence-informed professional communication.
11. பின்னூட்டலும் தொடர்பாடலும்
ஆசிரியரின் தொடர்பாடல் வகுப்பறை உரையாடலில் மட்டும் வெளிப்படுவதில்லை; மாணவர்களின் எழுத்துப் பணிகள், செயற்பாடுகள், திட்டங்கள், பரீட்சைகள் மற்றும் வாய்மொழிப் பங்கேற்புகளுக்கு வழங்கப்படும் பின்னூட்டலிலும் (feedback) அது வெளிப்படுகிறது.
Education Endowment Foundation (EEF) வெளியிட்ட Teacher Feedback to Improve Pupil Learning வழிகாட்டுதல், பின்னூட்டலின் பயனை அது எழுத்துமூலமானதா அல்லது வாய்மொழியானதா என்பதைக் காட்டிலும், அது மாணவரின் அடுத்தகட்டக் கற்றலை எவ்வாறு முன்னெடுக்கிறது என்பதன் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது (Collin & Quigley, 2021). எனவே, feedback என்பது மாணவரின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் செயலாக மட்டும் இல்லாமல், “நான் இப்போது எங்கே இருக்கிறேன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்?” என்பதை மாணவர் புரிந்துகொள்ள உதவும் கற்றல் தொடர்பாடலாக அமைய வேண்டும்.
இலங்கைப் பாடசாலைச் சூழலில் பின்னூட்டலின் முக்கியத்துவம்
இலங்கைப் பாடசாலைகளில் மதிப்பீட்டுக்குப் பின்னர் “80/100”, “B”, “Good”, “Very good”, “Weak” போன்ற மதிப்பெண்கள் அல்லது சுருக்கமான கருத்துகள் வழங்கப்படுவது பொதுவான நடைமுறையாக இருக்கலாம். இவை மாணவரின் செயல்திறனைப் பற்றிய ஒரு தகவலை வழங்கினாலும், அடுத்ததாக எவ்வாறு முன்னேறுவது என்பதைத் தெளிவுபடுத்தாமல் இருந்தால், அவற்றின் கற்றல் மதிப்பு குறைந்து விடலாம்.
உதாரணமாக, ஒரு மாணவரின் கட்டுரையில் ஆசிரியர்,
“Good.”
என்று மட்டும் எழுதினால், மாணவர் என்ன நன்றாகச் செய்தார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது.
அதற்குப் பதிலாக,
“உங்கள் கட்டுரையின் அறிமுகம் தெளிவாக உள்ளது. ஆனால் முக்கியக் கருத்துகளுக்கு ஆதாரங்கள் குறைவாக உள்ளன. அடுத்த பதிப்பில் குறைந்தது இரண்டு பொருத்தமான எடுத்துக்காட்டுகளைச் சேர்த்து, அவற்றை உங்கள் கருத்துடன் இணைத்துப் பாருங்கள்.”
என்று எழுதினால், மாணவருக்கு தனது வலிமையும் மேம்படுத்த வேண்டிய பகுதியும் அடுத்தகட்ட நடவடிக்கையும் தெளிவாகின்றன.
“தவறு” என்று சொல்வதற்குப் பதிலாக “எவ்வாறு மேம்படுத்தலாம்?” என்று வழிகாட்டுதல்
கணிதப் பாடத்தில் ஒரு மாணவர் தவறான முறையில் விடையைப் பெற்றிருந்தால்,
“Wrong answer.”
என்று மட்டும் எழுதுவதற்குப் பதிலாக,
“முதல் இரண்டு படிகளும் சரியாக உள்ளன. மூன்றாவது படியில் குறியீட்டைப் பயன்படுத்திய விதத்தை மீண்டும் சரிபார்க்கவும். அந்தப் படியைத் திருத்தி, இறுதி விடையை மீண்டும் கணக்கிடுங்கள்.”
என்று குறிப்பிடலாம்.
இங்கு ஆசிரியர் மாணவருக்கான விடையை வழங்கவில்லை. மாறாக, மாணவர் தனது தவறைக் கண்டறிந்து திருத்துவதற்கான வழியை வழங்குகிறார்.
இத்தகைய feedback மாணவர்களின் self-regulation மற்றும் சுயகற்றல் திறன்களை வளர்க்க உதவும்.
வாய்மொழிப் பின்னூட்டமும் முக்கியமானது
வகுப்பறையில் மாணவர் ஒரு பதிலை வழங்கும்போது,
“சரி.”
என்று மட்டும் கூறுவதற்குப் பதிலாக,
“உங்கள் கருத்தில் முக்கியமான ஒரு அம்சம் இருக்கிறது. அதற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு கொடுக்க முடியுமா?”
என்று ஆசிரியர் தொடரலாம்.
அதேபோல், மாணவர் தவறான பதிலை வழங்கினால்,
“இது தவறு.”
என்று உரையாடலை முடிப்பதற்குப் பதிலாக,
“இந்த முடிவுக்கு நீங்கள் எவ்வாறு வந்தீர்கள் என்பதை விளக்க முடியுமா?”
என்று கேட்கலாம்.
இதன் மூலம் feedback தீர்ப்பளிக்கும் தொடர்பாடலாக அல்லாமல், கற்றலைத் தொடரச் செய்யும் உரையாடலாக மாறுகிறது.
பெற்றோருடன் feedback-ஐ இணைத்தல்
மாணவரின் கற்றல் முன்னேற்றம் தொடர்பான feedback பெற்றோருடனான தொடர்பாடலிலும் முக்கியமானது.
உதாரணமாக,
“உங்கள் பிள்ளையின் பெறுபேறு குறைவாக உள்ளது.”
என்று மட்டும் கூறுவதற்குப் பதிலாக,
“கடந்த கணிப்பீட்டில் விஞ்ஞானக் கருத்துகளை அடையாளம் காணும் பகுதியில் நல்ல முன்னேற்றம் உள்ளது. ஆனால் விளக்கக் கேள்விகளில் இன்னும் சிரமம் காணப்படுகிறது. வீட்டில் வாரத்திற்கு இரண்டு முறை ஒரு கருத்தை தனது சொந்த வார்த்தைகளில் விளக்கச் சொல்லலாம். அடுத்த கணிப்பீட்டில் அதன் முன்னேற்றத்தைப் பார்ப்போம்.”
என்று கூறலாம்.
இது பெற்றோருக்கு குறை கூறுவதைவிட செயல்படக்கூடிய வழிகாட்டுதலை வழங்குகிறது.
ஒரு பயனுள்ள feedback-ன் மூன்று கேள்விகள்
ஆசிரியர் feedback வழங்கும்போது பின்வரும் மூன்று கேள்விகளுக்கு மாணவரிடம் பதில் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்தலாம்:
1. நான் எதைச் சிறப்பாகச் செய்துள்ளேன்?
2. நான் எதை மேம்படுத்த வேண்டும்?
3. அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்?
இதனை எளிமையாக,
வலிமை → கற்றல் இடைவெளி → அடுத்த நடவடிக்கை
என்ற மாதிரியாகப் பயன்படுத்தலாம்.
இலங்கை வகுப்பறையில் நடைமுறைப்படுத்தக்கூடிய feedback மாதிரி
ஒரு Grade 8 மாணவர் குடியியல் பாடத்தில் ஒரு குறுங்கட்டுரை எழுதியுள்ளார் எனக் கருதுவோம்.
மாணவரின் பதில்:
“சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனைவருக்கும் முக்கியமானது. மரங்களை நட வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது.”
ஆசிரியரின் feedback:
வலிமை: “சுற்றுச்சூழல் பாதுகாப்பின் இரண்டு முக்கிய நடவடிக்கைகளைச் சரியாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.”
மேம்படுத்த வேண்டியது: “ஒவ்வொரு நடவடிக்கையும் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதை விளக்கவில்லை.”
அடுத்த நடவடிக்கை: “ஒவ்வொரு கருத்திற்கும் ஒரு காரணத்தையும் ஒரு நடைமுறை எடுத்துக்காட்டையும் சேர்த்து உங்கள் பதிலை மீண்டும் எழுதுங்கள்.”
இது மாணவருக்கு வெறும் புள்ளிகளை விட அதிகமான கற்றல் தகவலை வழங்குகிறது.
Feedback-ஐ உரையாடலாக மாற்றுதல்
மிகச் சிறந்த feedback என்பது ஆசிரியர் மட்டும் வழங்கும் தகவலாக இருக்க வேண்டியதில்லை. மாணவரும் feedback-ஐப் புரிந்துகொண்டு அதற்கு பதிலளிக்க வேண்டும்.
ஆசிரியர்:
“இந்தப் பகுதியில் மேலும் ஆதாரம் தேவை.”
மாணவர்:
“எந்த வகையான ஆதாரத்தைச் சேர்க்க வேண்டும், Sir?”
ஆசிரியர்:
“உங்கள் கருத்தை ஆதரிக்கும் ஒரு உண்மைத் தகவல் அல்லது பாடத்தில் கற்ற உதாரணத்தைச் சேர்க்கலாம்.”
இவ்வாறு feedback இருவழித் தொடர்பாடலாக மாறும்போது, மாணவர் தனது கற்றலின் செயற்பாட்டு பங்காளியாகிறார்.
மாணவருக்கு புள்ளிகளை வழங்குவது மதிப்பீடு;
முன்னேறுவதற்கான வழியைக் காட்டுவது பின்னூட்டம்.
ஒரு சிறந்த ஆசிரியர்,
“எவ்வளவு புள்ளிகளை பெற்றாய்?”
என்பதில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை.
அவர்,
“நீங்கள் எதைப் புரிந்து கொண்டீர்கள்? எங்கு சிரமம் உள்ளது? அடுத்ததாக எவ்வாறு முன்னேறலாம்?”
என்ற கேள்விகளையும் எழுப்புகிறார்.
இதனால், feedback என்பது பரீட்சை முடிவுக்குப் பின்னர் வழங்கப்படும் ஒரு குறிப்பு அல்ல; அது தொடர்ச்சியான கற்றல், சுயமதிப்பீடு, முன்னேற்றம் மற்றும் ஆசிரியர்–மாணவர் தொடர்பாடலை இணைக்கும் கல்வியியல் கருவியாக அமைய வேண்டும்.
பலவீனமான பின்னூட்டல்:
- “Good.”
- “Wrong.”
- “Try again.”
மேம்படுத்தப்பட்ட பின்னூட்டல்:
“உங்கள் அறிமுகம் தெளிவாக உள்ளது. ஆனால் இரண்டாவது பத்தியில் ஆதாரம் குறைவாக உள்ளது. அடுத்த பதிப்பில் இரண்டு பொருத்தமான எடுத்துக்காட்டுகளைச் சேர்த்து, அவற்றை உங்கள் கருத்துடன் இணைத்துப் பாருங்கள்.”
இரண்டாவது feedback மாணவருக்கு:
- என்ன நன்றாக உள்ளது?
- எங்கு சிரமம் உள்ளது?
- அடுத்ததாக என்ன செய்ய வேண்டும்?
என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
EEF-ன் evidence synthesis feedback குறிப்பாக task, subject மற்றும் self-regulation ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட குறிப்பிட்ட feedback பயனுள்ளதாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
12. சொல்லற்ற தொடர்பாடல்
ஆசிரியர் கூறும் வார்த்தைகளைவிட சில நேரங்களில் அவரது குரல் தொனி, முகபாவனை, கண் தொடர்பு மற்றும் உடல் மொழி அதிகமான செய்தியை வழங்கக்கூடும்.
ஒரு மாணவர் பதில் கூறும்போது ஆசிரியர்:
- கண்களைச் சுழற்றுதல்
- சிரித்தல்
- கேலியாகப் பார்ப்பது
- கோபமான முகபாவனை காட்டுதல்
போன்றவற்றைச் செய்தால், மாணவர் மீண்டும் பதிலளிக்கத் தயங்கலாம்.
மாறாக,
- கவனமாகப் பார்ப்பது
- தலையசைத்தல்
- “தொடருங்கள்” என்று கூறுதல்
- பதிலை முழுமையாகக் கேட்பது
போன்ற சிறிய செயல்கள் மாணவரின் பங்கேற்பை ஊக்குவிக்கலாம்.
Ellawala et al. (2026) ஆய்வில் body language கூட ஆசிரியரின் அதிகாரத்தை மாணவர்கள் எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்பதுடன் தொடர்புடையதாகக் காணப்பட்டது.
13. உதவிப் பணியாளர்களுடனான தொடர்பாடல்
ஒரு பாடசாலையின் செயற்பாடு ஆசிரியர்களாலும் அதிபர்களாலும் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை.
அலுவலகப் பணியாளர்கள், நூலகப் பணியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், சுத்திகரிப்பு பணியாளர்கள் மற்றும் பிற உதவிப் பணியாளர்களும் பாடசாலைச் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள்.
ஒரு ஆசிரியர் அவர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்கிறார் என்பதையும் மாணவர்கள் கவனிக்கிறார்கள்.
எனவே,
மாணவர்களுக்கு மரியாதையை கற்பிக்க விரும்பும் ஆசிரியர், முதலில் தனது நடைமுறையில் மரியாதையை வெளிப்படுத்த வேண்டும்.
இது தொடர்பாடலைத் தாண்டி மாதிரிக் கற்றல் (modelling) ஆகவும் அமைகிறது.
14. பல்மொழி இலங்கையில் தொடர்பாடல்
இலங்கைப் பாடசாலைகள் பல்வேறு மொழி, கலாச்சார மற்றும் சமூகப் பின்னணிகளை உள்ளடக்கியவை.
எனவே, ஒரு ஆசிரியர்:
- மாணவரின் மொழித் திறனை மதிக்க வேண்டும்.
- தேவையான இடங்களில் மொழி ஆதரவு வழங்க வேண்டும்.
- மொழிப் பிழையை மாணவரை அவமானப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்தக்கூடாது.
- கருத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
- மொழி வேறுபாட்டை கற்றல் வளமாகப் பார்க்க வேண்டும்.
ஒரு மாணவர் ஆங்கிலத்தில் பதிலளிக்கத் தயங்கினால்,
“முதலில் தமிழில் விளக்குங்கள்; பின்னர் அதை ஆங்கிலத்தில் எவ்வாறு சொல்லலாம் என்று நாம் சேர்ந்து பார்ப்போம்.”
என்று கூறுவது கற்றல் வாய்ப்பை உருவாக்குகிறது.
15. தொடர்பாடல் திறனை வளர்ப்பதற்கான 10 நடைமுறை வழிகள்
1. மாணவர்களின் பெயரைப் பயன்படுத்துங்கள்
பெயரைப் பயன்படுத்துவது தனிப்பட்ட கவனத்தையும் உறவையும் உருவாக்க உதவும்.
2. கேள்விக்குப் பிறகு “wait time” வழங்குங்கள்
கேள்வி கேட்டவுடன் நீங்களே பதில் கூறாதீர்கள்.
3. தவறான பதிலை கற்றல் வாய்ப்பாக மாற்றுங்கள்
“தவறு” என்று முடிப்பதற்குப் பதிலாக, “இந்தப் பதிலுக்கு நீங்கள் எவ்வாறு வந்தீர்கள்?” என்று கேளுங்கள்.
4. திறந்த கேள்விகளைப் பயன்படுத்துங்கள்
“ஆம்/இல்லை” கேள்விகளுடன் “ஏன்?”, “எவ்வாறு?”, “வேறு வழி என்ன?” போன்ற கேள்விகளையும் பயன்படுத்துங்கள்.
5. மாணவரின் கருத்தை மீளுரைக்கவும்
“நீங்கள் கூறுவது...” என்று தொடங்கி மாணவரின் கருத்தை உறுதிப்படுத்துங்கள்.
6. நேர்மறையான பின்னூட்டலுடன் தொடங்குங்கள்
பின்னூட்டம் குறையை மட்டும் சுட்டிக்காட்டாமல் முன்னேற்றத்திற்கான வழியையும் காட்ட வேண்டும்.
7. பொதுமக்கள் முன்னிலையில் மாணவரை அவமானப் படுத்தாதீர்கள்
ஒழுக்கப் பிரச்சினையைத் தீர்ப்பதிலும் மாணவரின் கண்ணியத்தைப் பாதுகாக்கலாம்.
8. பெற்றோருடன் குறை கூறும் மொழியைத் தவிர்க்குங்கள்
“உங்கள் பிள்ளை பிரச்சினை” என்பதற்குப் பதிலாக “நாம் இணைந்து ஆதரிக்க வேண்டிய ஒரு விடயம் உள்ளது” என்று அணுகலாம்.
9. சக ஆசிரியர்களிடம் ஆலோசனை கேளுங்கள்
தொழில்முறை கற்றல் தனிப்பட்ட செயற்பாடு மட்டுமல்ல.
10. நாளின் முடிவில் ஒரு தொடர்பாடல் தருணத்தைப் பிரதிபலியுங்கள்
“இன்று நான் எந்த மாணவரின் கருத்தை உண்மையாகக் கேட்டேன்?”
என்று உங்களிடம் நீங்களே கேளுங்கள்.
16. ஒரு சிறிய மாற்றம் – பெரிய விளைவு
ஒரு ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்து,
“புத்தகத்தைத் திறந்து பக்கம் 45-ஐப் பாருங்கள்.”
என்று பாடத்தைத் தொடங்குகிறார்.
மற்றொரு ஆசிரியர் அதே வகுப்பிற்குள் நுழைந்து,
“கடந்த பாடத்தில் நாம் பார்த்த கருத்துகளில் யாருக்காவது இன்னும் கேள்வி இருக்கிறதா? இன்று அந்தக் கேள்விகளில் ஒன்றிலிருந்து தொடங்கலாமா?”
என்று கேட்கிறார்.
இருவரும் பாடத்தை கற்பிக்கிறார்கள்.
ஆனால் இரண்டாவது ஆசிரியர் கற்றலுக்கான உரையாடலுக்கான கதவைத் திறக்கிறார்.
இதுவே கற்பித்தலைத் தாண்டிய தொடர்பாடல் திறன்.
முடிவுரை
ஒரு ஆசிரியரின் தொழில்முறைத் திறன் பாட அறிவாலும் கற்பித்தல் முறைகளாலும் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. மாணவர்களை எவ்வாறு கேட்கிறார், அவர்களின் கருத்துக்களுக்கு எவ்வாறு பதிலளிக்கிறார், பெற்றோர்களுடன் எவ்வாறு இணைந்து செயல்படுகிறார், சக ஆசிரியர்களுடன் எவ்வாறு ஒத்துழைக்கிறார், அதிபருடன் எவ்வாறு தொழில்முறையாகப் பேசுகிறார், பாடசாலை சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் எவ்வாறு மதிக்கிறார் என்பவையும் அவரது தொழில்முறை அடையாளத்தின் முக்கிய கூறுகளாகும்.
இலங்கைச் சூழலை மையப்படுத்திய ஆய்வுகள் classroom relationships, teacher–student rapport, student engagement மற்றும் self-efficacy போன்ற விடயங்களுக்கிடையிலான தொடர்பை ஆராய்ந்து வருகின்றன (Perera, 2021; Athirathan, 2025).
அதேவேளை, Ellawala et al. (2026) ஆய்வு ஆசிரியரின் அதிகாரத்தையும் மாணவரின் குரலையும் சமநிலைப்படுத்துவதில் இருவழித் தொடர்பாடல் மற்றும் மரியாதையான உறவு முக்கியமானதாக இருப்பதை இலங்கை உட்பட மருத்துவக் கல்விச் சூழலில் காட்டுகிறது.
எனவே,
நல்ல ஆசிரியர் பாடத்தைத் தயார்படுத்துகிறார்.
சிறந்த ஆசிரியர் மாணவரையும் புரிந்துகொண்டு பாடத்தைத் தயார்படுத்துகிறார்.
நல்ல ஆசிரியர் பேசுகிறார்.
சிறந்த ஆசிரியர் கருத்தக்களை செவிமடுக்கிறார்.
நல்ல ஆசிரியர் வகுப்பறையை நிர்வகிக்கிறார்.
சிறந்த ஆசிரியர் கற்றல் சமூகத்தை உருவாக்குகிறார்.
இறுதியாக,
கற்பித்தல் அறிவைப் பகிர்கிறது; தொடர்பாடல் அந்த அறிவை உறவுடன் இணைக்கிறது.
அதனால்,
கற்பித்தலைத் தாண்டிய தொடர்பாடல் திறனே சிறந்த ஆசிரியரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்.
உசாத்துணைகள் — APA 7
Athirathan, S. (2025). The impact of teacher-student relationship on students’ self-efficacy: Study based on the secondary schools in Colombo Education Zone. International Journal of Research and Innovation in Social Science, 9(3S), 4125–4135. https://doi.org/10.47772/IJRISS.2025.903SEDU0290
Collin, J., & Quigley, A. (2021). Teacher feedback to improve pupil learning: Guidance report. Education Endowment Foundation.
Ellawala, A., Ledger, A., & Wickramasekara, H. (2026). Power distance within online and face-to-face medical education in Sri Lanka and the UK. Medical Education, 60(2), 127–137. https://doi.org/10.1111/medu.70025
Jay, T., Willis, B., Thomas, P., Taylor, R., Moore, N., Burnett, C., Merchant, G., & Stevens, A. (2017). Dialogic teaching: Evaluation report and executive summary. Education Endowment Foundation.
Kraft, M. A., & Rogers, T. (2015). The underutilized potential of teacher-to-parent communication: Evidence from a field experiment. Economics of Education Review, 47, 49–63. https://doi.org/10.1016/j.econedurev.2015.04.001
Perera, K. D. R. L. J. (2021). Students’ perceptions of school-related conditions impacting their motivation and engagement in learning. Open Journal of Social Sciences, 9, 353–377. https://doi.org/10.4236/jss.2021.99025
Australian Education Research Organisation. (2021, December 3; updated June 28, 2024). Engaging with families to support student learning in secondary school. https://www.edresearch.edu.au/guides-resources/practice-guides/engaging-families-support-student-learning-secondary-school


Join the discussion
Leave a comment or reply to another reader. Your email address will not be displayed.