
சி. லோகராஜா
கல்வி எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் கல்வியியலாளர்
விரிவுரையாளர், மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரி.
ஒரு பிள்ளை ஒவ்வொரு காலையும் பாடசாலைக்குள் நுழைகிறது.
அதன் தோளில் புத்தகப்பை. அதற்குள் பாடப்புத்தகங்கள். கையில் எழுதுகோல். ஆனால் அந்தப் புத்தகப்பைக்குள் யாராலும் பார்க்க முடியாத இன்னொரு சுமையும் இருக்கலாம்.
“நான் இந்தப் பாடத்தைப் புரிந்துகொள்வேனா?”
“என்னுடைய நண்பர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா?”
“நான் தோல்வியடைந்தால் என்ன ஆகும்?”
சில பிள்ளைகள் இவற்றைப் பேசுகின்றனர். சில பிள்ளைகள் சொல்லாமல் சுமக்கின்றனர். சிலர் சிரித்துக்கொண்டே மறைக்கின்றனர்.
அந்தச் சொல்லப்படாத உலகத்திற்குள் பாடசாலை எப்போது நுழைகிறது?
சிறுவர் தினத்தன்று பாடசாலை அலங்கரிக்கப்படுகிறது. மேடை தயாராகிறது. பிள்ளைகள் பாடுகின்றனர். பரிசுகள் வழங்கப்படுகின்றன. புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
அந்த நாள் முடிந்துவிடுகிறது.
ஆனால் மறுநாள் காலை அதே பிள்ளை மீண்டும் வகுப்பறைக்குள் அமர்கிறது. மீண்டும் பாடம், பரீட்சை, தவறு, போட்டி, எதிர்பார்ப்பு என பாடசாலை வாழ்க்கை தொடர்கிறது.
அப்படியானால்,
சிறுவர் தினத்தின் உண்மையான அர்த்தம் அந்த ஒரு நாளில் இருக்கிறதா? அல்லது சிறுவர் தினம் முடிந்த மறுநாளில் அந்தக் பிள்ளையைப் பாடசாலை எவ்வாறு நடத்துகிறது என்பதில்தான் இருக்கிறதா?
2026 ஆம் ஆண்டின் “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” (Strong Minds – Enriched Children) என்ற தொனிப்பொருள் இந்தக் கேள்வியைப் பாடசாலை வாசலுக்குள் கொண்டு வருகிறது.
திடமான உள்ளம் என்றால் பிரச்சினைகள் இல்லாத பிள்ளை அல்ல. பிரச்சினைகள் வந்தாலும் உதவி கேட்கத் தெரிந்த பிள்ளை; தோல்விக்குப் பிறகும் மீண்டும் முயற்சி செய்யும் பிள்ளை; தவறைத் தன் அடையாளமாகக் கருதாத பிள்ளை; தன் உணர்வுகளை வெளிப்படுத்தவும், பிறரின் உணர்வுகளை மதிக்கவும் கற்றுக்கொண்ட பிள்ளை.
அதேபோல், வளமான பிள்ளை என்பது பொருளாதார வளமுள்ள குழந்தை மட்டுமல்ல. அறிவு, சிந்தனை, உறவு, மனிதநேயம், படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கைத் திறன்களில் வளமான பிள்ளையாகவும் அது இருக்க வேண்டும்.
இத்தகைய பிள்ளையை உருவாக்குவதில் வீடு முக்கியமானது. ஆனால் பிள்ளை தனது நாளின் கணிசமான பகுதியைச் செலவிடும் பாடசாலையும் வகுப்பறையும் அதன் ஆளுமை உருவாக்கத்தில் முக்கியமான சமூகச் சூழல்களாகின்றன.
எனவே இந்த ஆண்டு சிறுவர் தினத்தில் நாம் கேட்க வேண்டிய கேள்வி:
“நாம் பிள்ளைகளுக்கு அறிவைக் கற்பிக்கிறோமா; அல்லது அவர்கள் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்லக்கூடிய திடமான மனத்தையும் உருவாக்குகிறோமா?”
பாடப்புத்தகத்திற்கு அப்பால் பிள்ளை கற்கும் பாடம்
ஒரு பிள்ளை கணிதம், மொழி, வரலாறு, விஞ்ஞானம் போன்ற பாடங்களைக் கற்கிறது. ஆனால் அதே நேரத்தில் அது இன்னொரு பாடத்தையும் கற்கிறது:
“நான் யார்?”
“என்னால் என்ன செய்ய முடியும்?”
“என் கருத்துக்கு மதிப்பு இருக்கிறதா?”
“தவறு செய்தால் என்ன நடக்கும்?”
“உதவி கேட்டால் என்னை பலவீனமானவன் என்று கருதுவார்களா?”
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பாடப்புத்தகம் நேரடியாக வழங்குவதில்லை. ஆசிரியரின் அணுகுமுறை, நண்பர்களின் உறவு, வகுப்பறைச் சூழல், மதிப்பீட்டு நடைமுறை மற்றும் பாடசாலைக் கலாசாரம் ஆகியவை இணைந்து குழந்தையின் மறைமுகக் கற்றலை (hidden curriculum) உருவாக்குகின்றன.
UNESCO, UNICEF மற்றும் WHO இணைந்து வெளியிட்ட Teaching with Care வழிகாட்டி, ஆசிரியர்கள் மனநல நிபுணர்களாக மாற வேண்டும் எனக் கூறுவதில்லை. மாறாக, பாதுகாப்பான மற்றும் உள்ளடங்கல் கற்றல் சூழலை உருவாக்குதல், நேர்நிலையான உறவுகளை வளர்த்தல், சமூக–உணர்ச்சி நல்வாழ்வை ஆதரித்தல், கவலையின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காணுதல் மற்றும் தேவையான ஆதரவு அமைப்புக்களுடன் மாணவர்களை இணைத்தல் போன்ற ஆசிரியரின் நடைமுறைப் பங்களிப்புகளை வலியுறுத்துகிறது (UNESCO, UNICEF, & WHO, 2026).
இதனால் பிள்ளையின் மனநலம் என்பது counselling room-இல் மட்டும் பேச வேண்டிய விடயம் அல்ல; அது வகுப்பறைக் கலாசாரத்திலும் வெளிப்பட வேண்டிய விடயம்.
ஒரு ஆசிரியரின் ஒரு சொல்
ஒரு மாணவன் பரீட்சையில் 32 புள்ளிகள் பெறுகிறான்.
“இன்னும் படிக்க வேண்டும்.”
என்று ஆசிரியர் கூறலாம்.
அல்லது,
“இந்த முறை 32. அடுத்த முறை 40 அடைய நாம் என்ன செய்யலாம்?”
என்று கேட்கலாம்.
இரண்டாவது அணுகுமுறை பிள்ளைக்கு ஒரு முக்கியமான செய்தியைத் தருகிறது:
“என்னுடைய தற்போதைய நிலைதான் என்னுடைய இறுதி நிலை அல்ல.”
அதேபோல், மாணவன் தவறான விடை அளிக்கும்போது:
“தவறு.”
என்று முடித்துவிடுவதற்குப் பதிலாக,
“இந்த விடையை எப்படிச் சிந்தித்து எடுத்தாய்?”
என்று கேட்கலாம்.
அப்போது தவறு → சிந்தனை → பின்னூட்டல் → திருத்தம் → மீண்டும் முயற்சி என்ற கற்றல் சுழற்சி உருவாகிறது.
இதனால் தவறு என்பது அவமானத்திற்கான காரணமாக அல்ல, கற்றலுக்கான ஆதாரமாக மாறுகிறது.
அமைதியாக இருக்கும் பிள்ளையையும் கவனிக்க வேண்டும்
ஒரு வகுப்பில் தொடர்ந்து அமைதியாக இருக்கும் மாணவன் இருக்கலாம். அவன் கை உயர்த்தாமல் இருக்கலாம்; குழுச் செயற்பாடுகளில் பங்கேற்காமல் இருக்கலாம்; இடைவேளையிலும் தனியாக இருக்கலாம்.
அவனை உடனடியாக “அமைதியான மாணவன்” என்று வகைப்படுத்திவிடுவது எளிது.
ஆனால் அந்த அமைதிக்குப் பின்னால் தோல்வி பயம், நண்பர்களின் நிராகரிப்பு, மொழிசார் சிரமம், குடும்பச் சூழல், தன்னம்பிக்கையின்மை அல்லது கற்றல் சிரமம் இருக்கலாம்.
எனவே ஆசிரியரின் கேள்வி:
“இந்தக் பிள்ளை ஏன் பேசவில்லை?”
என்பதோடு முடிவடையக்கூடாது.
அதற்கு முன்:
“இந்தக் பிள்ளை பேசுவதற்கு இந்த வகுப்பறை போதுமான பாதுகாப்பை வழங்குகிறதா?”
என்ற கேள்வியும் எழ வேண்டும்.
“ஆசிரியருக்கு - ஒரு பிள்ளை”
ஒவ்வொரு ஆசிரியரும் counsellor ஆக வேண்டியதில்லை. மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதும் ஒவ்வொரு ஆசிரியரின் பொறுப்பல்ல.
ஆனால் ஒரு பிள்ளைக்கு:
“என்னைப் பற்றி உண்மையாகக் கேட்கும் ஒரு பெரியவர் இந்தப் பாடசாலையில் இருக்கிறார்.”
என்ற உணர்வு இருக்க வேண்டும்.
இதற்காக “ஆசிரியருக்கு - ஒருபிள்ளை” என்ற இலகுவான நடைமுறையை அறிமுகப்படுத்தலாம்.
ஒவ்வொரு ஆசிரியரும் சில மாணவர்களுடன் அவ்வப்போது குறுகிய உரையாடலை மேற்கொள்ளலாம்:
“படிப்பு எப்படி செல்கிறது?”
“பாடசாலையில் உனக்கு ஏதாவது சிரமம் இருக்கிறதா?”
“நண்பர்களுடன் எல்லாம் சரியாக இருக்கிறதா?”
“நான் உனக்கு உதவக்கூடிய ஏதாவது இருக்கிறதா?”
இது counselling அல்ல.
இது உறவு உருவாக்குதல்.
தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மாணவர்களை உரிய counselling அல்லது நிபுணத்துவ ஆதரவு அமைப்புகளுடன் இணைப்பதே சரியான நடைமுறையாகும் (UNESCO, UNICEF, & WHO, 2026).
“My Strength Wall” – புள்ளிகளுக்கு அப்பால் பிள்ளையைப் பார்ப்போம்
பாடசாலை விளம்பரப் பலகைகளில் பொதுவாகப் பரீட்சை முடிவுகள், போட்டி வெற்றிகள், சான்றிதழ்கள் போன்றவை காட்சிப்படுத்தப் படுகின்றன.
அதற்கு இணையாக ஒரு புதிய முயற்சியைத் தொடங்கலாம்:
“என்னுடைய ஒரு வலிமை”(MY STRENGTH WALL)
ஒவ்வொரு மாணவரும் தன்னைப் பற்றி ஒரு நல்ல பண்பை எழுதலாம்:
“நான் பிறருக்கு உதவுவேன்.”
“நான் நன்றாகச் செவிமடுப்பேன்.”
“நான் விடாமுயற்சியுடன் இருப்பேன்.”
“எனக்கு ஓவியம் வரைவது பிடிக்கும்.”
“தோல்விக்குப் பிறகு மீண்டும் முயற்சி செய்வேன்.”
இங்கே நோக்கம் யாருடைய வலிமை சிறந்தது என்பதைத் தீர்மானிப்பது அல்ல.
“என்னிடமும் ஒரு வலிமை இருக்கிறது.”
என்ற உணர்வை ஒவ்வொரு பிள்ளையிலும் உருவாக்குவதே நோக்கம்.
சமூக–மனவெழுச்சி கற்றல் அணுகுமுறைகள் சுயவிழிப்புணர்வு, சுய முகாமைத்துவம், உறவுத் திறன்கள் மற்றும் பொறுப்புணர்வு மிக்க தீர்மானமெடுத்தல் போன்ற திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன (Education Endowment Foundation [EEF], 2025).
“Children’s Voice Hour” – நாம் பிள்ளைகள் பேசுவதைக் காட்டிலும் பிள்ளைகள் பேசுவதைக் கேட்போம்
சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒரு மணி நேரத்தை:
“இந்த ஒரு மணி நேரம் பிள்ளைகளின் குரலுக்காக” (Children’s Voice Hour)
என்று ஒதுக்கலாம்.
மாணவர்களிடம் கேட்கலாம்:
- எங்கள் பாடசாலையில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்ன?
- உங்களுக்கு சிரமமாக இருக்கும் விஷயம் என்ன?
- கற்றலை இன்னும் சிறப்பாக மாற்ற என்ன செய்யலாம்?
- பாடசாலையில் நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விடயம் என்ன?
ஆனால் கேட்பது மட்டும் போதாது.
மாணவர்கள் கூறிய கருத்துகளில் நடைமுறையில் செய்யக் கூடியவற்றைத் தேர்ந்தெடுத்து:
“நீங்கள் சொன்னீர்கள் – பாடசாலை செய்தது.”
என்ற தொடரை உருவாக்கலாம்.
பிள்ளைகளின் கருத்துகளை அவர்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் விடயங்களில் கேட்டு, அவற்றுக்கு உரிய முக்கியத்துவம் வழங்குவது பிள்ளையின் உரிமையுடன் தொடர்புடையது (United Nations Committee on the Rights of the Child, 2009).
முதல் இடத்தைத் தாண்டி – முன்னேற்றத்தைக் காண்போம்
பாடசாலை வாழ்க்கையில் வெற்றி பெரும்பாலும் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களால் வெளிப்படுத்தப்படுகிறது.
ஆனால் எல்லா முன்னேற்றங்களும் தேர்ச்சி அட்டையில் பதிவாகுவதில்லை.
முன்பைவிட நன்றாகப் பேசத் தொடங்கிய மாணவன், தொடர்ந்து முயற்சி செய்யும் மாணவி, நண்பர்களுக்கு உதவும் மாணவன், குழுச் செயற்பாட்டில் அதிகமாகப் பங்கேற்கத் தொடங்கிய மாணவர்—இவர்களின் வளர்ச்சியும் கவனிக்கப்பட வேண்டும்.
அதற்காக “முன்னேற்ற அங்கீகாரம் (Growth Recognition)” என்ற நடைமுறையைப் பாடசாலை அறிமுகப்படுத்தலாம்.
உதாரணமாக:
- சிறந்த முன்னேற்றம்
- சிறந்த முயற்சி
- சிறந்த ஒத்துழைப்பு
- பிறருக்கு உதவும் மாணவர்
- சிறந்த குழு உறுப்பினர்
- புதிய யோசனை முன்வைத்த மாணவர்
இது போட்டியை நீக்குவதற்காக அல்ல; பிள்ளையிள் வளர்ச்சியை புள்ளியை மட்டும் கொண்டு அளவிட முடியாது என்பதை உணர்த்துவதற்காக.
“இன்று நான் எப்படி இருக்கிறேன்?”
வகுப்பறையின் நுழைவுப் பகுதியில் மாணவர்களின் பார்வைக்கு எளிதில் தெரியும் வகையில் ஒரு நிரந்தர Well-being Check-in பலகையை அமைக்கலாம். அதில்
🟢 “நான் நன்றாக இருக்கிறேன்”,
🟡 “இன்று கொஞ்சம் சிரமமாக இருக்கிறது”,
🔴 “எனக்கு உதவி தேவை”
என மூன்று நிறக் குறியீடுகள் காட்சிப்படுத்தப்படலாம்.
மாணவர்கள் ஒவ்வொரு நாளும் வகுப்பறைக்குள் நுழையும் போது, தங்களுடைய அடையாளக் குறியீட்டைக் கொண்ட சிறிய பொத்தான், கிளிப் அல்லது காந்தக் குறியீட்டை தங்களுக்கு பொருத்தமான நிறத்தின் கீழ் பொருத்திவிடலாம். இதன் மூலம், ஒவ்வொரு மாணவரும் தமது அன்றைய உணர்வு நிலையை வார்த்தைகளால் விளக்க வேண்டிய அவசியமின்றி எளிமையாக வெளிப்படுத்த முடியும்.
இது மருத்துவ அல்லது உளவியல் பரிசோதனை அல்ல; மாறாக, மாணவர்களின் நல்வாழ்வில் தொடர்ந்து காணப்படும் சிரமங்களை ஆசிரியர் ஆரம்பத்திலேயே கவனித்து, தேவையானபோது தனிப்பட்ட உரையாடல் அல்லது பொருத்தமான ஆதரவை வழங்குவதற்கான ஒரு எளிய ஆரம்பகட்ட நல்வாழ்வு கண்காணிப்பு நடைமுறையாக அமையலாம்.
தேவையானபோது உரிய ஆதரவு அமைப்புகளுடன் மாணவர்களை இணைப்பதே ஆசிரியரின் பொறுப்பு; ஆசிரியர் diagnosis அல்லது specialised mental-health care வழங்க வேண்டியதில்லை (UNESCO, UNICEF, & WHO, 2026).
ஒரு பாடசாலையின் உண்மையான சிறுவர் தினச் செயல் திட்டம்
சிறுவர் தினத்தன்று ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்திவிட்டு அடுத்த நாளே பழைய நடைமுறைக்குத் திரும்புவதற்குப் பதிலாக, பாடசாலை சிறிய மாற்றங்களிலிருந்து தொடங்கலாம்.
முதல் படி – என்னுடைய ஒரு வலிமை (My Strength Wall)
மாணவர்கள் தங்களுடைய ஒரு வலிமையை அடையாளம் காணட்டும்.
இரண்டாவது படி – ஆசிரியருக்கு - ஒரு பிள்ளை
நம்பிக்கையான குறுகிய உரையாடல்களுக்கு வாய்ப்பளிக்கட்டும்.
மூன்றாவது படி – (இந்த ஒரு மணி நேரம் பிள்ளைகளின் குரலுக்காக) Children’s Voice Hour
மாணவர்களின் கருத்துகளைக் கேட்டு, நடைமுறையில் சாத்தியமானவற்றைச் செயல்படுத்தட்டும்.
நான்காவது படி – (முன்னேற்ற அங்கீகாரம்) Growth Recognition
முயற்சி, முன்னேற்றம், ஒத்துழைப்பு போன்றவற்றையும் அங்கீகரிக்கட்டும்.
ஐந்தாவது படி – தினசரி நல்வாழ்வு கண்காணிப்பு (Daily Well-being Check)
பிள்ளைகளின் அன்றாட நல்வாழ்வைக் கண்காணிக்கும் சிறிய நடைமுறையை உருவாக்கட்டும்.
ஆறாவது படி – தவறிலிருந்து கற்றலுக்கு (Mistake-to-Learning)
தவறுகளை தண்டனைக்கான காரணமாக அல்ல, கற்றலுக்கான தொடக்கமாகப் பயன்படுத்தட்டும்.
இவை அனைத்தையும் ஒரே நாளில் தொடங்க வேண்டியதில்லை. ஒரு சிறிய மாற்றத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தி, பின்னர் அடுத்த மாற்றத்தை இணைப்பதே நிலையான அணுகுமுறை.
சிறுவர் தினம் ஒரு நிகழ்ச்சி அல்ல; ஒரு பாடசாலைக் கலாசாராத்தின் கண்ணாடி
ஒரு பாடசாலையின் சிறுவர் தினத்தை மதிப்பிடும்போது:
“மேடை எவ்வளவு அழகாக இருந்தது?”
என்பதை மட்டும் கேட்காமல்,
“பிள்ளைகள் எவ்வளவு சுதந்திரமாகப் பேசினார்கள்?”
“அவர்கள் கூறிய கருத்துகளில் எத்தனை நடைமுறையாகின?”
“ஆசிரியர்கள் பிள்ளைகளின் குரலை உண்மையாகக் கேட்டார்களா?”
“சிரமத்தில் இருந்த மாணவர்கள் உரிய ஆதரவுடன் இணைக்கப்பட்டார்களா?”
என்ற கேள்விகளையும் கேட்க வேண்டும்.
ஏனெனில்,
பிள்ளைகளுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியும், பிள்ளைநேயப் பாடசாலைக் கலாசாரமும் ஒன்றல்ல.
நிகழ்ச்சி ஒரு நாளில் முடியும்; கலாசாரம் தினமும் தொடரும்.
சிறுவர் தினத்தின் உண்மையான பரிசு
சிறுவர் தினத்தில் புத்தகங்கள் வழங்கலாம். பரிசுகள் வழங்கலாம். இனிப்புகள் வழங்கலாம். விளையாட்டுகள் நடத்தலாம்.
ஆனால் ஒரு பிள்ளைக்கு பாடசாலை வழங்கக்கூடிய மதிப்புமிக்க பரிசுகள்:
பேசுவதற்கான இடம்.
தவறு செய்வதற்கான பாதுகாப்பு.
உதவி கேட்பதற்கான உரிமை.
தன் கருத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு.
தன் வலிமையை அறியும் சந்தர்ப்பம்.
மற்றவர்களால் மதிக்கப்படும் அனுபவம்.
இவை வாங்கிக் கொடுக்கக்கூடிய பொருட்கள் அல்ல.
ஆனால் ஒரு பிள்ளையின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடிய வளங்கள்.
365 நாள் சிறுவர் தினம்
சிறுவர் தினம் ஒரு நாள்.
ஆனால் பிள்ளையின் மனம் ஒரு நாளில் உருவாகுவதில்லை.
ஒரு ஆசிரியரின் பாராட்டு சில விநாடிகள் நீடிக்கலாம்; அதன் தாக்கம் பல ஆண்டுகள் வாழலாம்.
ஒரு கடுமையான வார்த்தை சில விநாடிகளில் முடிந்துவிடலாம்; அதன் தாக்கம் பிள்ளையின் தன்னம்பிக்கையில் நீண்ட காலம் இருக்கலாம்.
ஒரு நண்பனின் சிறிய உதவி ஒரு பிள்ளைக்கு:
“நானும் இவர்களைச் சார்ந்தவன்.”
என்ற உணர்வைத் தரலாம்.
எனவே கேட்க வேண்டிய கேள்வி:
“ஒக்டோபர் 1 அன்று நாம் பிள்ளைகளுக்காக என்ன செய்தோம்?”
என்பது மட்டும் அல்ல.
“ஒக்டோபர் 2 முதல் அடுத்த 364 நாட்களிலும் பிள்ளைகளுக்காக நாம் எவ்வாறு செயல்படப் போகிறோம்?”
என்பதுமாகும்.
முடிவுரை
2026 சிறுவர் தினத்தின் “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” என்ற தொனிப்பொருளை சுவரொட்டியில் எழுதிவிட்டு அடுத்த நிகழ்ச்சிக்குச் செல்வது எளிது.
ஆனால் அதை பாடசாலைக் கலாசாரமாக மாற்றுவதே உண்மையான சவால்.
ஒரு பிள்ளை “என்னால் முடியாது” என்று கூறும்போது,
“நாம் மீண்டும் முயற்சி செய்வோம்.”
என்று கூறும் ஆசிரியரில் அது தொடங்குகிறது.
ஒரு பிள்ளை அமைதியாக இருக்கும்போது,
“உனது குரலைக் கேட்க நான் தயாராக இருக்கிறேன்.”
என்று கூறும் வகுப்பறையில் அது தொடர்கிறது.
ஒரு பிள்ளை தவறு செய்யும்போது,
“இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?”
என்று கேட்கும் கலாசாராத்தில் அது வளர்கிறது.
ஒரு பிள்ளை தன்னுடைய வலிமையை அறியாமல் இருக்கும்போது,
“உன்னிடம் ஏற்கனவே இருக்கும் நல்ல திறன் இதுதான்.”
என்று காட்டும் ஆசிரியரில் அது வலுப்பெறுகிறது.
மிக முக்கியமாக,
பிள்ளைகளைப் பற்றி தீர்மானமெடுக்கும் பாடசாலை மட்டுமல்ல; பிள்ளைகளையும் கேட்டு தீர்மானமெடுக்கும் பாடசாலையே உண்மையான பிள்ளை நேயப் பாடசாலை.
பிள்ளைகளின் கருத்துகளை அவர்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் விடயங்களில் கேட்டு, அவற்றுக்கு உரிய முக்கியத்துவம் வழங்குவது பிள்ளையின் உரிமையுடன் தொடர்புடையது (United Nations Committee on the Rights of the Child, 2009).
இலங்கையில் 2026 தேசிய சிறுவர் தின வாரம் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகளின் உரிமைகள், பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை மீண்டும் சிந்திப்பதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக இது அமைகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம், மன–சமூக அழுத்தங்கள், புறக்கணிப்பு மற்றும் சமூக–பொருளாதார பாதிப்புகள் போன்ற சமகாலச் சவால்களும் அரசின் அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
எனவே இந்த ஆண்டு சிறுவர்களிடம் ஒரு கேள்வியை மட்டும் கேட்போம்:
“உங்களுக்கு என்ன வேண்டும்?”
அவர்கள் சொல்வதை உண்மையாகக் கேட்போம்.
அதில் நடைமுறையில் செய்யக்கூடிய ஒரு சிறிய மாற்றத்தையாவது பாடசாலையில் உருவாக்குவோம்.
ஏனெனில்,
சிறுவர் தினம் ஒரு நாள்.
ஆனால் பிள்ளையின் திடமான மனதை உருவாக்கும் பாடசாலை 365 நாட்களும் செயல்பட வேண்டும்.
உசாத்துணைகள் | References
Collaborative for Academic, Social, and Emotional Learning. (2026). What is the CASEL framework? CASEL.
Education Endowment Foundation. (2025). Social and emotional learning. EEF.
United Nations Committee on the Rights of the Child. (2009). General comment No. 12 (2009): The right of the child to be heard (CRC/C/GC/12). United Nations.
UNESCO, UNICEF, & World Health Organization. (2026). Teaching with care: A practical guide for teachers to support mental health and well-being in schools. World Health Organization.
World Health Organization. (2026). Making every school a health-promoting school: Implementation guidance for school health services. WHO.
Government of Sri Lanka. (2026, September 14). Declaration of a National Children’s Day Week – 2026. Cabinet Office of Sri Lanka.


Join the discussion
Leave a comment or reply to another reader. Your email address will not be displayed.