அறிமுகம்:

வாசிப்பு என்பது வெறும் பொழுதுபோக்கு நடவடிக்கை மட்டுமல்ல. அது மனிதனின் அறிவு, சிந்தனை, மனnழுச்சி, கற்பனாசக்தி, சமூக மென்திறன்களைப் வளப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். ஒரு நல்ல நூலை வாசிக்கும் போது நாம் புதிய தகவல்களை அறிந்து கொள்வதுடன், புதிய உலக வாழ்வியல் அனுபவங்களை அனுபவிக்கவும், பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும், நமது சிந்தனைகளை விரிவுபடுத்தவும் வாய்ப்பு பெறுகின்றோம். எனவே, வாசிப்பு என்பது வாழ்நாள் முழுவதும் கற்றலைத் தொடரச் செய்யும் முக்கியமான செயல்பாடாகக் கருதப்படுகிறது.

வாசிப்பின் முக்கியமான நன்மைகளில் முதன்மையானது சொற்களஞ்சிய வளர்ச்சியாகும். தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு புதிய சொற்கள், கருத்துகள் மற்றும் மொழிப் பயன்பாடுகள் அறிமுகமாகின்றன. இதன் மூலம் அவர்களின் மொழித்திறன், எண்ணக்கருகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறன் மேம்படுகின்றது. குறிப்பாக மாணவர்களின் வாசிப்புப் பழக்கம் அவர்களின் தொடர்பாடல் திறன், எழுத்துத் திறன், புரிந்துகொள்ளும் திறன் மற்றும் கற்றல் அடைவு போன்றவற்றை மேம்படுத்துவதற்கு உதவுகின்றது.

வாசிப்பு மனிதனின் பகுப்பாய்வு மற்றும் விமர்சன சிந்தனைத் திறன்களையும் வளர்க்கின்றது. ஒரு கதையை வாசிக்கும்போது கதாபாத்திரங்களின் செயல்கள், காரணங்கள், விளைவுகள் மற்றும் முடிவுகளைப் பற்றி சிந்திக்கின்றோம். தகவல் சார்ந்த நூல்களை வாசிக்கும்போது உண்மை, கருத்தேற்றங்கள், விளைவு ஆகியவற்றை வேறுபடுத்திப் பார்க்கக் கற்றுக் கொள்கின்றோம். இதனால் தர்க்கரீதியாகச் சிந்தித்தல், வினா எழுப்புதல், பல்வேறு கோணங்களில் ஒரு விடயத்தைப் அலசுவது மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் போன்ற அறிவுசார் திறன்கள் வளர்கின்றன.

வாசிப்பு உளநலத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றது. அமைதியான சூழலில் ஒரு நல்ல நூலை வாசிப்பது அன்றாடப் பணிகளிலிருந்து மனதைத் தற்காலிகமாகத் திசைதிருப்பி ஓய்வுணர்வை ஏற்படுத்தலாம். இதன் மூலம் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறைவதற்கு வாசிப்பு உதவக்கூடும். குறிப்பாக இலக்கியப் படைப்புகள் மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும், தமது உணர்வுகளைப் பற்றி சிந்திக்கவும் உதவுகின்றன. இவ்வகையில், புத்தகச்சிகிச்சை (டீiடிடழைவாநசயில) போன்ற அணுகுமுறைகள் குறிப்பிட்ட சூழல்களில் மனநல ஆரோக்கியத்திற்கான ஒரு துணைமுறையாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வாசிப்பு நினைவாற்றலையும், மூளையின் செயல்பாட்டையும் தூண்டுகின்றது. ஒரு கதையின் நிகழ்வுகள், கதாபாத்திரங்கள், எண்ணக்கருக்கள், தகவல்களை நினைவில் வைத்துக்கொண்டு தொடர்ந்து வாசிப்பது மூளையின் பல்வேறு அறிவுருவாக்கம்சார் செயல்பாடுகளில் கவனம் குவிக்கப்படுகிறது. வயது அதிகரிக்கும் காலத்திலும் அறிவுவாற்றல்சார் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுவது மூளையின் செயல்திறனைப் பேணுவதற்கு உதவக்கூடும். அதேபோன்று, தூங்குவதற்கு முன் அமைதியான வாசிப்புப் பழக்கம் சிலருக்கு மனதை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்திற்குத் தயாராக உதவலாம்.

வாசிப்பின் மற்றொரு முக்கியமான நன்மை பரிவுணர்வு, சமூகம் பற்றிய விளக்கத்தை வளர்த்தல் ஆகும். குறிப்பாக இலக்கியக் கதைகள், நாவல்கள் மற்றும் வாழ்க்கை வரலாறுகள் மூலம் பிற மனிதர்களின் அனுபவங்கள், உணர்வுகள், சவால்கள் மற்றும் வாழ்க்கைச் சூழல்களை நாம் அறிந்துகொள்கிறோம். இதன் மூலம் “மற்றவர் எவ்வாறு சிந்திப்பார்?”, “அவர் ஏன் இவ்வாறு நடந்துகொண்டார்?” போன்ற கேள்விகளை எழுப்பி, பிறரின் நோக்கைப் புரிந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும். இதனால் பரிவுணர்வு, சகிப்புத்தன்மை, மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்பு போன்ற பண்புகள் வலுப்பெறுகின்றன.

வாசிப்பு கற்பனை படைப்பாற்றலுக்கான வளமான தளமாகவும் அமைகின்றது. ஒரு கதையை வாசிக்கும்போது, எழுத்தாளர் வழங்கும் சொற்களின் அடிப்படையில் காட்சிகள், மனிதர்கள், இடங்கள் மற்றும் நிகழ்வுகளை நமது மனதில் உருவாக்குகின்றோம். இந்த மனக்காட்சிகள் கற்பனைத் திறனைத் தூண்டுகின்றன. பல்வேறு கருத்துகள் மற்றும் பார்வைகளை அறிந்துகொள்வதன் மூலம் சிந்தனை விரிவடைகின்றது. இதன் விளைவாக புதிய யோசனைகளை உருவாக்குதல், மாற்று வழிகளைச் சிந்தித்தல் மற்றும் சிக்கல்களுக்கு புதுமையான தீர்வுகளைக் கண்டறிதல் போன்ற படைப்பாற்றல் திறன்கள் வளர்கின்றன.

வாசிப்பு உடல் ஆரோக்கியத்துடனும் மறைமுகமான தொடர்பைக் கொண்டுள்ளது. அமைதியாக வாசிப்பது உடலையும் மனதையும் தளரச் செய்யும் ஓர் ஓய்வு நடவடிக்கையாக அமையலாம். மன அழுத்தம் குறைவது ஒட்டுமொத்த நலனுக்கு சாதகமாக அமையக்கூடும். எனினும், வாசிப்பு மட்டும் இதய நோய், உயர் இரத்த அழுத்தம் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கான நேரடி சிகிச்சை என்று கருதாது, வாசிப்புடன் போதிய உடற்பயிற்சி, சீரான உணவு, போதிய தூக்கம் மற்றும் மருத்துவ ஆலோசனை ஆகியவையும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமானவை.

வாசிப்பு வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான அடித்தளமாக விளங்குகின்றது. பள்ளிக் கல்வி முடிந்த பின்னரும் மனிதன் புதிய அறிவையும் திறன்களையும் தொடர்ந்து கற்றுக்கொள்ள வாசிப்பு உதவுகின்றது. தொழில்நுட்பம், அறிவியல், கல்வி, கலை, வரலாறு, சமூகம் மற்றும் பண்பாடு போன்ற பல்வேறு துறைகளைப் பற்றிய அறிவைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள வாசிப்பு வாய்ப்பளிக்கிறது. குறிப்பாக இன்றைய தகவல் யுகத்தில், தகவல்களைப் புரிந்துகொண்டு, அவற்றை மதிப்பீடு செய்து, நம்பகமான அறிவைத் தேர்ந்தெடுக்கும் திறன் ஒவ்வொருவருக்கும் அவசியமாகியுள்ளது.

இவ்வாறு பார்க்கும்போது, வாசிப்பு அறிவை மட்டும் அதிகரிப்பதில்லை. அது மொழி வளர்ச்சி, தொடர்பாடல், பகுப்பாய்வு, விமர்சன சிந்தனை, நினைவாற்றல், மனஅமைதி, பரிவுணர்வு, சகிப்புத்தன்மை, கற்பனை, படைப்பாற்றல், முரன்பாட்டுத்; தீர்வு, சமூகப் புரிதல் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் போன்ற பல்வேறு துறைகளில் மாணவரை மேம்படுத்துகின்றது. குழந்தைப் பருவத்திலேயே வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கி, வீட்டிலும் பாடசாலையிலும் நூலகத்திலும் வாசிப்புக்கான மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவது மிகவும் முக்கியமானதாகும்.

முடிவுரை:

வாசிப்பு என்பது ஒரு புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பும் செயலாக மட்டும் இல்லாமல், மாணவரின் அறிவையும் உள்ளத்தையும் மேன்மைப்படுத்தும் ஒரு செயன்முறையாகும். “வாசிப்போம் – சிந்திப்போம் – கற்போம் – வளர்வோம்” என்ற மனப்பாங்குடன் வாசிப்பை வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றும்போது, அது தனிமனித முன்னேற்றத்திற்கும், கல்வி வளர்ச்சிக்கும், உளநலத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் வலுவான அடித்தளமாக அமையும். உண்மையில், வாசிப்பு என்பது அறிவாற்றலுக்கான திறவு கோளாகவும், கற்பனைக்கான பரம்பலாகவும், வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான பாதையாகவும் விளங்குகின்றது.