சி. லோகராஜா

கல்வி எழுத்தாளர் | ஆசிரியர் கல்வியியலாளர்

விரிவுரையாளர், மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரி.

உலக ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 5ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. இலங்கையில் தேசிய ஆசிரியர் தினம் ஒக்டோபர் 6ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டு, உலக ஆசிரியர் தினம் தனித்துவமான வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. 1966 ILO/UNESCO ஆசிரியர்களின் நிலை தொடர்பான பரிந்துரையின் 60ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாக அமைகிறது

2026ஆம் ஆண்டின் தொனிப்பொருள்:

“ஆசிரியர்களுடன் துணைநிற்போம்: ஆசிரியர் தொழிலைப் பாதுகாத்தல், அதன் நிலையை உயர்த்தல், நமது எதிர்காலத்தை வடிவமைத்தல் – 60 ஆண்டுகள்.”

(Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures) என்பதாகும்.

இதன் மையச் செய்தி தெளிவானது: ஆசிரியர் தொழிலைப் பாதுகாத்தல், அதன் வாண்மைத்துவ மற்றும் சமூக நிலையை உயர்த்தல், எதிர்காலக் கல்வியை வடிவமைத்தல் ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடைய பொறுப்புகளாகும்.

1. 1966 – ஒரு வரலாற்றுத் திருப்புமுனை

1966 ஒக்டோபர் 5ஆம் திகதி பாரிஸில் நடைபெற்ற சிறப்பு அரசுகளுக்கிடையிலான மாநாட்டில் UNESCO மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) இணைந்து “Recommendation concerning the Status of Teachers” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பரிந்துரையை ஏற்றுக்கொண்டன.

இது ஆசிரியர்களின்:

  • உரிமைகள் மற்றும் பொறுப்புகள்
  • ஆரம்ப ஆசிரியர் கல்வி
  • தொடர்ச்சியான வாண்மைத்துவ மேம்பாடு
  • ஆட்சேர்ப்பு
  • வேலைவாய்ப்பு நிபந்தனைகள்
  • பணிச்சூழல்

போன்ற அம்சங்களுக்கான சர்வதேச அளவுகோலை முன்வைத்தது.

இந்தப் பரிந்துரையின் அடிப்படைக் கருத்துகளில் ஒன்று “ஆசிரியர் ஒரு வாண்மைத்துவ நிபுணர்” என்பதாகும். கற்பித்தல் என்பது பாடப்பொருளை வழங்கும் பணியாக மட்டும் இல்லாமல், சிறப்பு அறிவு, வாண்மைத்துவத் திறன்கள், தொடர்ச்சியான கற்றல் மற்றும் மாணவர்களின் கல்வி–நலனுக்கான பொறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வாண்மைத்துவப் பொது சேவையாகக் கருதப்பட்டது

2. 1966 பரிந்துரையின் முக்கியத் தூண்கள்

வாண்மைத்துவ சுதந்திரம்

மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப கற்பித்தல் முறைகள், வளங்கள் மற்றும் மதிப்பீட்டு அணுகுமுறைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஆசிரியர்களுக்கு பொருத்தமான வாண்மைத்துவ சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். கல்விக் கொள்கை, கலைத்திட்டம் மற்றும் கற்பித்தல் வளங்களின் உருவாக்கத்திலும் அவர்களின் பங்கேற்பு முக்கியமானது.

தொடர்ச்சியான வாண்மைத்துவ மேம்பாடு

ஆசிரியர் கல்வி நியமனத்துடன் முடிவடையும் செயல்முறை அல்ல. அறிவு, திறன் மற்றும் கற்பித்தல் முறைகளைத் தொடர்ந்து புதுப்பிப்பதற்கான வாய்ப்புகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

ஆசிரியர்களின் பிரதிநிதித்துவம்

கல்விக் கொள்கை மற்றும் நிர்வாகத் தீர்மானங்களில் ஆசிரியர்களின் பிரதிநிதித்துவமும் வாண்மைத்துவ அமைப்புகளின் பங்களிப்பும் முக்கியமானதாகக் கருதப்பட்டது.

நியாயமான தொழில் நிலைகள்

சம்பளம், பணிச்சுமை, வேலைப் பாதுகாப்பு, பணியிடம் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்றவை ஆசிரியர் தொழிலின் தரத்துடன் தொடர்புடையவை. எனவே ஆசிரியரின் பணிச்சூழலை மேம்படுத்துவது மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்துவதற்கும் அவசியமானது.

3. 60 ஆண்டுகாலப் பரிணாமம் – 1966 முதல் 2026 வரை

1966 – ILO/UNESCO ஆசிரியர்களின் நிலை தொடர்பான பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஆசிரியர் தொழிலுக்கான முக்கிய உலகளாவிய தரநிலை உருவானது.

1994 – உலக ஆசிரியர் தினம் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது; ஆசிரியர் தொழிலுக்கான உலகளாவிய அங்கீகாரம் வலுப்பெற்றது.

1997 – உயர்கல்வி கற்பித்தல் பணியாளர்களின் நிலை தொடர்பான UNESCO பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2008 – ஆசிரியர்களுக்கான சர்வதேச பணிக்குழுவின் முயற்சிகள் மூலம், (International Task Force on Teachers for Education 2030) 2030ஆம் ஆண்டுக்குள் தகுதியான ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட நிலைபேறான அபிவிருத்தி 4 இன் மீது (4SDG 4.c ) உலகளாவிய கவனம் வலுப்பெற்றது.

2022 – “கல்வியை மாற்றியமைத்தல் தொடர்பான உச்சி மாநாடு (Transforming Education Summit – TES)” ஆசிரியர் தொழிலை முன்னிறுத்தியது.

2024 – ஆசிரியர் தொழில் தொடர்பான ஐ.நா. பொதுச் செயலாளரின் உயர்மட்டக் குழு: ஆசிரியர் தொழிலை மறுவடிவமைப்புச் செய்வதற்கான உலகளாவிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

2025 – 1966 மற்றும் 1997 பரிந்துரைகளைப் புதுப்பிக்கும் செயல்முறை முன்னேறியது.

2026 – 1966 பரிந்துரையின் 60ஆம் ஆண்டு; ஆசிரியர் தொழிலின் நிலை, உரிமைகள், வாண்மைத்துவம் மற்றும் எதிர்காலம் மீளாய்வு செய்யப்படும் முக்கியமான தருணம்.

2027 – திருத்தப்பட்ட பரிந்துரையை ஏற்றுக்கொள்வதற்கான சிறப்பு அரசுகளுக்கிடையிலான மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.

4. ஏன் 2026இல் 1966 பரிந்துரையை மீண்டும் சிந்திக்க வேண்டும்?

1966இல் இருந்த கல்விச் சூழலும் 2026இன் கல்விச் சூழலும் அடிப்படையில் வேறுபட்டவை.

இன்றைய ஆசிரியர்:

  • டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கற்பிக்க வேண்டும்;
  • செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்;
  • பல்வேறு கற்றல் தேவைகளைக் கொண்ட மாணவர்களை உள்ளடக்க வேண்டும்;
  • காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் சூழல்களை எதிர்கொள்ள வேண்டும்;
  • சமூகப் பன்மைத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும்;
  • மாணவர்களின் சமூக–உணர்ச்சி நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும்;
  • தவறான மற்றும் தவறாக வழிநடத்தும் தகவல்களால் நிரம்பிய சூழலில் விமர்சன சிந்தனையை வளர்க்க வேண்டும்.

எனவே 1966இல் வரையறுக்கப்பட்ட ஆசிரியர் தொழிலின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாத்துக்கொண்டே, அவற்றை புதிய கல்விச் சூழலுக்கேற்ப மறுபரிசீலனை செய்வது அவசியமாகிறது.

5. உலகளாவிய ஆசிரியர் பற்றாக்குறை

ஆசிரியர் தொழிலின் எதிர்காலத்தைப் பற்றி பேசும்போது ஆசிரியர் பற்றாக்குறை முக்கியமான சவாலாக உள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி இலக்குகளை அடைவதற்கு சுமார் 44 மில்லியன் மேலதிக ஆசிரியர்கள் தேவைப்படுவதாக UNESCO மற்றும் ஆசிரியர்களுக்கான சர்வதேச பணிக்குழு (Teacher Task Force) மதிப்பிட்டுள்ளன.

இது வெறுமனே ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான பிரச்சினையல்ல. அது:

ஆட்சேர்ப்பு → ஆசிரியர் கல்வி → தொழிலில் நிலைத்திருத்தல் → பணிச்சூழல் → சம்பளம் → வாண்மைத்துவ வளர்ச்சி → சுயாதீனம் → சமூக மரியாதை

என்ற முழுமையான வாண்மைத்துவ வாழ்க்கைச் சுழற்சியுடன் தொடர்புடையது.

2024ஆம் ஆண்டின் UN High-Level Panel பரிந்துரைகள் ஆசிரியர் கண்ணியம், முதலீடு, சமத்துவம், தரமான ஆசிரியர் கல்வி, வாண்மைத்துவ மேம்பாடு, சுயாதீனம், தலைமைத்துவம் மற்றும் சமூக உரையாடல் ஆகியவற்றை முன்னிறுத்தின.

6. ஆசிரியரின் குரலும் வாண்மைத்துவ சுதந்திரமும்

கல்விக் கொள்கை உருவாக்கத்தில் ஆசிரியர்களின் பங்கேற்பு வெறுமனே ஒரு தொழிற்சங்கக் கோரிக்கையாகக் கருதப்படக்கூடாது.

வகுப்பறை நடைமுறைகளை நேரடியாக அறிந்த வாண்மைத்துவ நிபுணர்களாக ஆசிரியர்களின் அனுபவம், கல்விக் கொள்கைக்கான முக்கிய அறிவு வளமாகும்.

கலைத்திட்டம், கற்பித்தல் வளங்கள், கணிப்பீட்டு முறைகள் மற்றும் கற்றல் அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்தும்போது, சூழலுக்கேற்ப வாண்மைத்துவத் தீர்மானங்களை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு போதிய இடம் தேவைப்படுகிறது.

எனவே,

“ஆசிரியர்களுக்காக உருவாக்கப்படும் கொள்கை” என்பதிலிருந்து “ஆசிரியர்களுடன் இணைந்து உருவாக்கப்படும் கொள்கை” என்ற அணுகுமுறைக்கு நகர வேண்டும்.

7. இலங்கைச் சூழலில் 2026 தொனிப்பொருளின் பொருத்தம்

இலங்கையில் ஆசிரியர் தொழிலைப் பற்றிய விவாதம் சம்பளம் மற்றும் நியமனம் என்ற இரு விடயங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படக் கூடாது.

இதனுடன்,

  • ஆசிரியர் கல்வி
  • தொடர்ச்சியான வாண்மைத்துவ மேம்பாடு
  • வாண்மைத்துவத் தரநிலைகள்
  • தொழில்நுட்பப் பயன்பாடு
  • கலைத்திட்ட மாற்றம்
  • மதிப்பீட்டு மாற்றம்
  • உள்ளடங்கல் கல்வி
  • ஆசிரியர் நலன்புரி

ஆகியவையும் ஒருங்கிணைந்து கவனிக்கப்பட வேண்டும்.

இலங்கையின் கல்விச் சீர்திருத்த ஆவணங்களிலும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் கல்வியாளர்களின் சேவைகளை வலுப்படுத்துதல், பாடவாரியான பயிற்சிகளை முன்னெடுத்தல் போன்ற மனிதவள மேம்பாட்டு நடவடிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.

இதனால் 2026 தொனிப்பொருள் இலங்கைக்கும் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கிறது:

“ஆசிரியர்களிடம் கல்வி மாற்றத்தை எதிர்பார்க்கிறோம் என்றால், அந்த மாற்றத்தை முன்னெடுக்கத் தேவையான வாண்மைத்துவ சுதந்திரம், பயிற்சி, வளங்கள், நேரம், ஆதரவு மற்றும் மரியாதையை அவர்களுக்கு வழங்குகிறோமா?”

8. ஆசிரியர் தொழிலின் எதிர்காலம்: AI ஆசிரியரை மாற்றுமா?

2026இல் ஆசிரியர் தொழிலைப் பற்றிய எந்த கலந்துரையாடலும் செயற்கை நுண்ணறிவை (AI) தவிர்த்து முழுமையடையாது.

AI கற்றல் வளங்கள் மற்றும் வினாத்தாள்களை உருவாக்கவும், தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் வளங்களை வழங்கவும், மாணவர் விடைகளைப் பகுப்பாய்வு செய்யவும் உதவுகிறது. ஆனால் கல்வி என்பது தகவல் பரிமாற்றத்தைத் தாண்டிய மனிதச் செயல்முறையாகும்.

மாணவர்களின் மனவெழுச்சியைப் புரிந்துகொள்வது, சமூக உறவுகளை உருவாக்குவது, நெறிமுறைத் தீர்மானங்களை வழிநடத்துவது, மனிதநேயத்தை வளர்ப்பது மற்றும் சமூகப் பொறுப்புணர்வை உருவாக்குவது போன்ற பணிகளில் ஆசிரியரின் மனிதத் தொடர்பு முக்கியமானது.

எனவே எதிர்காலத்தின் முக்கியமான கேள்வி:

“AI ஆசிரியரை மாற்றுமா?” என்பதைக் காட்டிலும், “AI காலத்தில் ஆசிரியரின் வாண்மைத்துவப் பங்கு எவ்வாறு மறுவடிவமைக்கப்பட வேண்டும்?” என்பதே முக்கியமானது.

2026ஆம் ஆண்டின் பரிந்துரைத் திருத்தச் செயல்முறையிலும் டிஜிட்டல் மாற்றம், AI, ஆசிரியர் சுயாதீனம், கல்விசார் சுதந்திரம், சமத்துவம், உள்ளடக்கம் மற்றும் பாலின சமத்துவம் போன்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

9. 60 ஆண்டுகளுக்குப் பின்னர் – ஆசிரியரை மதிப்பது என்றால் என்ன?

ஆசிரியர் தினத்தில் வாழ்த்துகளைப் பகிர்வது மட்டும் ஆசிரியரை மதிப்பதாகாது. ஆசிரியரை மதிப்பது என்பது அவர் சிறப்பாகப் பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்குவதாகும்.

அதற்காக:

  • தரமான ஆசிரியர் கல்வி வழங்க வேண்டும்.
  • தொடர்ச்சியான வாண்மைத்துவ விருத்திக்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
  • நியாயமான பணிச்சுமையை உறுதி செய்ய வேண்டும்.
  • வாண்மைத்துவ சுயாதீனத்தைப் பாதுகாக்க வேண்டும்.
  • பாதுகாப்பான, கண்ணியமான பணிச்சூழலை உருவாக்க வேண்டும்.
  • கல்விக் கொள்கை உருவாக்கத்தில் ஆசிரியர்களின் குரலைக் கேட்க வேண்டும்.
  • சமூகத்தில் ஆசிரியர் தொழிலின் மதிப்பை உயர்த்த வேண்டும்.
  • தகுதியான ஆசிரியர்களைத் தொழிலில் ஈர்த்து, அவர்களைத் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.

இதுவே 60 ஆண்டுகளுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட ஆசிரியர் தொழிலின் நிலை தொடர்பான அடிப்படைக் கருத்துகளை இன்றைய சூழலில் நடைமுறைப்படுத்துவதற்கான வழியாகும்.

10. 60 ஆண்டுகள் – நிறைவு அல்ல; புதிய தொடக்கம் ஆசிரியர் தொழிலின் கண்ணாடியில் நம்மைப் பார்ப்போம்

1966 முதல் 2026 வரை – 60 ஆண்டுகள்.

இந்த 60 ஆண்டுகள் கடந்த காலத்தை நினைவுகூர்வதற்கான காலப்பகுதி மட்டுமல்ல; அடுத்த தலைமுறை ஆசிரியர்களுக்கான எதிர்காலத்தை மறுசிந்தனை செய்வதற்கான தருணம்.

1966 ILO/UNESCO பரிந்துரை சட்டரீதியாக கட்டுப்படுத்தும் சர்வதேச உடன்படிக்கை அல்ல. அது ஆசிரியர் தொழிலின் நிலை, உரிமைகள், பணிநிலை மற்றும் வாண்மைத்துவ வளர்ச்சிக்கான வழிகாட்டும் சர்வதேச தரநிலையாகும்.

ஆனால் அதன் வரலாற்றுப் பெறுமதி மிகப் பெரியது. ஆசிரியர் தொழிலின் நிலை என்பது தனிப்பட்ட நிர்வாகப் பிரச்சினை அல்ல; அது தரமான கல்வி, மனித உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்துடன் தொடர்புடைய உலகளாவிய விடயம் என்பதை அது வலியுறுத்தியது.

2026ஆம் ஆண்டு இந்தப் பார்வையை மீண்டும் முன்னிறுத்துகிறது. UNESCO தற்போது 1966 பரிந்துரையைப் புதுப்பிக்கும் செயல்முறையை முன்னெடுத்து வருகிறது; 2026–2027 காலப்பகுதியில் ஆலோசனைகள் மற்றும் வரைவு உருவாக்கப் பணிகள் தொடர்வதுடன், 2027ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட பரிந்துரையை ஏற்றுக்கொள்வதற்கான மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.

60 ஆண்டுகால ஆசிரியர் தொழிலின் பயணத்தைப் பின்னோக்கிப் பார்க்கும் இத்தருணத்தில், ஒவ்வொரு ஆசிரியரும் தமது வாண்மைத்துவப் பயணத்தையும் சுயமாகப் பரிசோதித்துப் பார்ப்பது அவசியம்.

  • நான் தொடர்ந்து கற்றுக்கொண்டு என் வாண்மைத்துவ அறிவையும் திறன்களையும் புதுப்பித்து வருகிறேனா?
  • என் மாணவர்களின் வேறுபட்ட கற்றல் தேவைகளுக்கு ஏற்ப எனது கற்பித்தலை மாற்றுகிறேனா?
  • டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் AI-ஐ பொறுப்புடனும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்தத் தயாராக இருக்கிறேனா?
  • என் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துடன் அவர்களின் சமூக–உணர்ச்சி நலனையும் கவனிக்கிறேனா?
  • கலைத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு மாற்றங்களை வெறுமனே நடைமுறைப்படுத்துகிறேனா, அல்லது அவற்றை விமர்சன ரீதியாகப் புரிந்துகொண்டு செயல்படுகிறேனா?
  • எனது அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் சக ஆசிரியர்களுடன் பகிர்ந்து கற்றுக்கொள்கிறேனா?
  • “நான் ஒரு ஆசிரியர்” என்பதைக் கடந்து, “நான் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் ஒரு வாண்மைத்துவ நிபுணர்” என்ற அடையாளத்தை வளர்த்துக்கொள்கிறேனா?

சுயபரிசோதனை என்பது குறைகளைத் தேடுவதற்கான செயல் அல்ல; இன்னும் சிறந்த ஆசிரியராக மாறுவதற்கான அடுத்த படியைத் தீர்மானிக்கும் வாண்மைத்துவப் பயணம்.

முடிவுரை

60 ஆண்டுகள் என்பது ஒரு முடிவல்ல; ஒரு புதிய தொடக்கம். கல்வியின் தரத்தை உயர்த்த விரும்பினால், ஆசிரியர் தொழிலின் தரம், நிலை மற்றும் கண்ணியத்தை உயர்த்த வேண்டும்.

இன்றைய ஆசிரியர் வெறுமனே பாடம் கற்பிப்பவர் அல்லர். அவர் கற்றலை வடிவமைப்பவர்; மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பவர்; விமர்சன சிந்தனையை உருவாக்குபவர்; சமூக மாற்றத்திற்கு வழிகாட்டுபவர்; தொழில்நுட்பத்தையும் மனிதநேயத்தையும் இணைப்பவர்; எதிர்காலக் குடிமக்களை உருவாக்குபவர்.

எனவே, “Standing with teachers” என்பது ஒரு ஆசிரியர் தின வாழ்த்துச் சொற்றொடர் மட்டுமல்ல. அது கல்விக் கொள்கை, தொழில்முறை வளர்ச்சி மற்றும் சமூகப் பொறுப்பு ஆகிய மூன்று தளங்களையும் இணைக்கும் அழைப்பாகும்.

ஆசிரியர்களை ஆதரிப்போம்.

ஆசிரியர் தொழிலைப் பாதுகாப்போம்.

ஆசிரியரின் குரலைக் கேட்போம்.

வாண்மைத்துவக் கண்ணியத்தை உயர்த்துவோம்.

எதிர்காலக் கல்வியை இணைந்து வடிவமைப்போம்.

1966–2026: ஆசிரியர் தொழிலின் 60 ஆண்டுகாலப் பயணம் — அடுத்த 60 ஆண்டுகளுக்கான புதிய பொறுப்பின் தொடக்கம்.

உசாத்துணைகள்

International Labour Organization. (1966). ILO/UNESCO Recommendation concerning the Status of Teachers, 1966. ILO – Recommendation concerning the Status of Teachers

International Labour Organization. (n.d.). Conventions, protocols and recommendations. ILO – Conventions, Protocols and Recommendations

UNESCO. (1997). Recommendation concerning the Status of Higher-Education Teaching Personnel. UNESCO – 1997 Recommendation

UNESCO. (2024). UN recommendations on the teaching profession: What you need to know. UNESCO – UN Recommendations on the Teaching Profession

UNESCO. (2024). Global report on teachers: Addressing teacher shortages and transforming the profession. UNESCO – Global Report on Teachers

UNESCO. (2026). World Teachers’ Day 2026. UNESCO – World Teachers’ Day

UNESCO. (2026). Revision of the 1966 ILO/UNESCO Recommendation concerning the Status of Teachers. UNESCO – Revision of the 1966 Recommendation

UNESCO. (2026, June 5). UNESCO revises landmark 1966 and 1997 Recommendations on the Status of Teaching Personnel. UNESCO – Revision of the 1966 and 1997 Recommendations

United Nations. (2024, February 26). UN Secretary-General’s High-Level Panel on the Teaching Profession: Recommendations. United Nations – High-Level Panel on the Teaching Profession

Ministry of Education, Higher Education and Vocational Education, Sri Lanka. (2025). Transforming general education. Sri Lanka Ministry of Education – Transforming General Education