S.Logarajah

Lecturer,

Batticaloa National College of Education

முன்னுரை

ஆசிரியர் தொழில் என்பது வெறுமனே ஒரு பாடத்தைப் போதிப்பதற்கான தொழில் அல்ல. மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி, அவர்களிடம் காணப்படும் ஆற்றல்களை வளர்த்து, அறிவு, திறன், மனப்பாங்கு மற்றும் விழுமியங்களுடன் கூடிய சமூகப் பொறுப்புள்ள பிரஜைகளை உருவாக்கும் உயரிய பணியாகும்.

இத்தகைய பொறுப்புமிக்க ஆசிரியர் தொழிலுக்குள் நுழையத் தயாராகும் பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் ஆட்சேர்ப்புச் செயன்முறையின் ஒவ்வொரு கட்டமும் முக்கியமானதாகும்.

குறிப்பாக, போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையின் அடுத்த கட்டமாகச் செயன்முறைப் பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள விண்ணப்பதாரர்கள், அதற்கான தயாரிப்பை வெறுமனே ஒரு பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் செயற்பாடாகக் கருதக்கூடாது.

2026.02.02 திகதியிட்ட ஆசிரியர் சேவை திறந்த போட்டிப் பரீட்சைக்கான வர்த்தமானி அறிவித்தலின் 10.3, 10.3.1 மற்றும் 10.3.2 ஆகிய பிரிவுகளில் செயன்முறைப் பரீட்சை தொடர்பான நடைமுறைகளும் மதிப்பீட்டு நியதிகளும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவற்றைச் சரியாகப் புரிந்துகொண்டு, தமது கற்பித்தல் திறன்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதற்கு விண்ணப்பதாரர்களுக்கு வழிகாட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலில் வர்த்தமானி அறிவித்தலைப் புரிந்துகொள்வோம்

செயன்முறைப் பரீட்சை தொடர்பாக விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் பின்வருமாறு:

  • முன்னளிப்பிற்கான நேரம் ஐந்து நிமிடங்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
  • செயன்முறைப் பரீட்சைக்காக மொத்தம் 25 புள்ளிகள் வழங்கப்படும்.
  • ஐந்து மதிப்பீட்டுக் கூறுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு மதிப்பீட்டுக் கூறுக்கும் 5 புள்ளிகள் வழங்கப்படும்.
  • ஒவ்வொரு மதிப்பீட்டுக் கூறிலும் குறைந்தது 2 புள்ளிகளைப் பெற வேண்டும்.
  • மொத்தமாகக் குறைந்தது 10 புள்ளிகளைப் பெற வேண்டும்.

இங்கு விண்ணப்பதாரர்கள் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது, மொத்தப் புள்ளிகளைப் பெறுவது மட்டுமல்லாமல், ஐந்து மதிப்பீட்டுக் கூறுகளிலும் தனித்தனியாகக் குறைந்தபட்சப் புள்ளிகளைப் பெற வேண்டியிருப்பதாகும்.

மதிப்பீட்டுக்கான ஐந்து கூறுகளும் அவற்றை வெளிப்படுத்தும் முறைகளும்

வர்த்தமானியின் 10.3.2 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பீட்டுக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பதாரர்கள் தமது முன்னளிப்பைத் தயாரிக்க வேண்டும்.

குறிக்கோள் மற்றும் பிரவேசம் (Objectives and Introduction)

இந்தக் கூறுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 2 புள்ளிகளைப் பெற வேண்டும்.

ஒரு பாடத்தை எவ்வாறு அறிமுகப்படுத்துகின்றார், பாடத்தின் நோக்கத்தை எவ்வாறு தெளிவுபடுத்துகின்றார் என்பன இங்கு கவனிக்கப்படுகின்றன.

இதற்காக விண்ணப்பதாரர்:

  • மாணவர்களின் முன் அறிவைத் தூண்டும் வகையில் பாடத்தை ஆரம்பிக்க வேண்டும்.
  • பொருத்தமான படம், பொருள், சம்பவம் அல்லது சூழ்நிலையைப் பயன்படுத்தலாம்.
  • சிந்தனையைத் தூண்டும் வினாக்களைக் கேட்க வேண்டும்.
  • புதிய பாடத்திற்கும் மாணவர்களின் அன்றாட வாழ்க்கைக்கும் தொடர்பை ஏற்படுத்த வேண்டும்.
  • பாடத்தின் கற்றல் நோக்கத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

உதாரணமாக, தரம் 8 குடியியல் கல்வியில் 'சனநாயக மக்கள் சமூகம்' என்ற அலகைக் கற்பிக்கும்போது, மக்கள் கலந்துரையாடும் அல்லது சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் படமொன்றைக் காட்டலாம்.

'இந்தப் படத்தில் என்ன நடைபெறுகின்றது?', 'ஒரு சமூகத்தில் வாழும் மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவது ஏன் முக்கியமானது?' போன்ற வினாக்களைக் கேட்பதன் மூலம் பாடத்தை அறிமுகப்படுத்தலாம்.

இதன் மூலம் விண்ணப்பதாரர் பாடத்தை நேரடியாக விளக்கத் தொடங்காமல், மாணவர்களின் சிந்தனையிலிருந்து பாடக் கருத்தை உருவாக்கும் திறனை வெளிப்படுத்த முடியும்.

ஆளுமை மற்றும் குரல் கட்டுப்பாடு (Personality and Voice Control)

இந்தக் கூறுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 2 புள்ளிகளைப் பெற வேண்டும்.

ஒரு ஆசிரியரின் ஆளுமை என்பது அவரது தோற்றத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல. தன்னம்பிக்கை, உடல்மொழி, முகபாவனை, குரலின் தெளிவு மற்றும் கற்பித்தலின்போது வெளிப்படும் இயல்பான அணுகுமுறை ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்.

விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டியவை:

  • ஒழுங்கான மற்றும் பொருத்தமான உடை அணிதல்.
  • தன்னம்பிக்கையுடன் முன்னிலையாகுதல்.
  • இயல்பான உடல்மொழியைப் பயன்படுத்துதல்.
  • தெளிவான உச்சரிப்புடன் பேசுதல்.
  • குரலின் ஏற்ற இறக்கங்களைப் பொருத்தமாகப் பயன்படுத்துதல்.
  • பதற்றமின்றி இயல்பாகக் கற்பித்தல்.

மிக வேகமாகப் பேசுவதும், ஒரே தொனியில் பேசுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

முக்கியமான கருத்துக்களை விளக்கும்போது குரலில் பொருத்தமான அழுத்தத்தைக் கொடுத்து, கேட்பவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.

தொடர்பாடலில் தெளிவு (Clarity in Communication)

இந்தக் கூறுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 2 புள்ளிகளைப் பெற வேண்டும்.

ஒரு ஆசிரியர் தமக்குத் தெரிந்த விடயங்களைத் தெளிவாகவும் மாணவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் எடுத்துரைக்க வேண்டும்.

இதற்காக:

  • இலகுவான மொழிநடையைப் பயன்படுத்துதல்.
  • கருத்துக்களை ஒழுங்கான முறையில் விளக்குதல்.
  • பொருத்தமான எடுத்துக்காட்டுகளை வழங்குதல்.
  • கேள்விகளையும் விளக்கங்களையும் தெளிவாக முன்வைத்தல்.
  • ஒரு கருத்திலிருந்து மற்றொரு கருத்துக்குத் தொடர்புபடுத்திச் செல்லுதல்.
  • தேவையற்ற நீண்ட விளக்கங்களைத் தவிர்த்தல்.

குறிப்பாக, தரம் 6, 7 அல்லது 8 மாணவர்களுக்கான பாடத்தை முன்னளிக்கும்போது, பல்கலைக்கழக விரிவுரை நடையைத் தவிர்த்து, குறித்த தர மாணவர்களின் வயது, அறிவு மற்றும் புரிந்துகொள்ளும் திறனுக்கு ஏற்ற மொழியைப் பயன்படுத்த வேண்டும்.

நேர முகாமைத்துவம் (Time Management)

இந்தக் கூறுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 2 புள்ளிகளைப் பெற வேண்டும்.

வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முன்னளிப்பு ஐந்து நிமிடங்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

இதற்காக விண்ணப்பதாரர்கள்:

  • முன்னளிப்பின் ஒவ்வொரு படிநிலைக்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும்.
  • பாட அறிமுகத்திற்காக அதிக நேரத்தைச் செலவிடக்கூடாது.
  • முக்கியமான கற்றல் செயற்பாடுகளுக்கு உரிய நேரத்தை வழங்க வேண்டும்.
  • மதிப்பீட்டிற்கும் முடிவுரைக்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும்.
  • ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் முன்னளிப்பை நிறைவு செய்ய வேண்டும்.

ஏழு நிமிட முன்னளிப்பிற்கான மாதிரி நேர ஒதுக்கீடு:

பாட அறிமுகம் : 1 நிமிடம்

முன் அறிவைத் தூண்டுதல் : 1 நிமிடம்

புதிய கருத்தை விளக்குதல் : 2 நிமிடங்கள்

சூழ்நிலை அடிப்படையிலான செயற்பாடு : 1 நிமிடம்

கற்றல் கணிப்பீடு : 1 நிமிடம்

முடிவுரை : 1 நிமிடம்

மொத்தம் : 7 நிமிடங்கள்

இது பயிற்சிக்கான மாதிரி நேரப் பகிர்வு மட்டுமே. வர்த்தமானி ஏழு நிமிடங்களைக் கட்டாயமாக்கவில்லை; குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் என்பதையே குறிப்பிடுகின்றது.

முன்னளிப்பு நுட்பமுறைகளின் பயன்பாடு (Use of Presentation Techniques)

இந்தக் கூறுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 2 புள்ளிகளைப் பெற வேண்டும்.

ஒரு பாடத்தை எவ்வாறு கற்பிக்கின்றார் என்பதையும், கற்பித்தல் நுட்பங்களை எவ்வளவு பொருத்தமாகப் பயன்படுத்துகின்றார் என்பதையும் இக்கூறு கவனத்தில் கொள்கின்றது.

விண்ணப்பதாரர்கள் பயன்படுத்தக்கூடிய நுட்பங்கள்:

  • படங்களைக் கொண்டு கற்பித்தல்.
  • வினா–விடை முறை.
  • எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குதல்.
  • சூழ்நிலை அடிப்படையிலான கற்பித்தல்.
  • பிரச்சினை அடிப்படையிலான கற்றல்.
  • பொருத்தமான கற்றல் வளங்களைப் பயன்படுத்துதல்.
  • கற்றல் அடைவுகளை மதிப்பிடுதல்.

இங்கு முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது, கற்றல் வளங்களைப் பயன்படுத்துவது மட்டுமல்ல, அவற்றின் மூலம் கற்றல் நோக்கத்தை அடையச் செய்வதாகும்.

உதாரணமாக, ஒரு படத்தைக் காட்டிவிட்டு அதன் பெயரைக் கூறுவது மட்டும் போதாது. அந்தப் படம் தொடர்பாக மாணவர்களைச் சிந்திக்கச் செய்யும் வினாக்களையும் கேட்டு, பாடக் கருத்தை உருவாக்க வேண்டும்.

பாடத்திட்டமிடல்

பாடத்திட்டமிடலை எவ்வாறு மேற்கொள்வது?

செயன்முறைப் பரீட்சைக்கு முன்னர் விண்ணப்பதாரர்கள் தமது பாடத்திட்டமிடலை முறையாகத் தயாரித்துக்கொள்ள வேண்டும். முன்னளிப்பின் போது தாம் தயாரித்த பாடத்திட்டத்தின் பிரதியை மதிப்பீட்டாளர்களிடம் சமர்ப்பிக்கலாம்

இதற்காகப் பின்வரும் ஒழுங்கைப் பின்பற்றலாம்.

1. அடிப்படைத் தகவல்கள்

விண்ணப்பதாரரின் பெயர் :

விண்ணப்ப இலக்கம் :

பாடம் : குடியியல் கல்வி

தரம் : 8

அலகு : 8.2 – சனநாயக மக்கள் சமூகம்

விடயத் தலைப்பு : கலந்துரையாடல் மூலம் சரியான தீர்வுகளை எட்டுதல்

முன்னளிப்பு நேரம் : 7 நிமிடங்கள்

கற்பித்தல் அணுகுமுறை : மாணவர் மையக் கற்பித்தல்

கற்பித்தல் முறை /நுட்பம் : கலந்தரையாடல், சூழ்நிலை அடிப்படையிலான செயற்பாடு, வினா–விடை, பட அவதானிப்பு,

2. கற்றல் பேறுகள்

  1. வழங்கப்படும் படத்தை அடிப்படையாகக் கொண்டு கலந்துரையாடலின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவர்.
  2. முன்வைக்கப்படும் பாடசாலைச் சூழ்நிலைக்குப் பொருத்தமான இரண்டு தீர்வுகளை முன்வைப்பர்.
  3. கலந்துரையாடலின்போது மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதன் அவசியத்தை ஒரு காரணத்துடன் விளக்குவர்.

3. கற்பித்தல்–கற்றல் செயற்பாடுகள்

மொத்த நேரம்: 7 நிமிடங்கள்

4. பின்னிணைப்பு

மாணவர்கள் இல்லாத நிலையில் மாதிரிக் கற்பித்தலை எவ்வாறு மேற்கொள்வது?

செயன்முறைப் பரீட்சையில் பரீட்சகர்கள் முன்னிலையில் மாதிரிக் கற்பித்தலை வழங்கும்போது விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் இதுவாகும்.

இங்கு பரீட்சகர்களுக்கு ஒரு பாடத்தை விரிவுரையாக வழங்குவது மாதிரிக் கற்பித்தலாகாது.

மாணவர்கள் வகுப்பறையில் இருப்பதைப் போன்ற சூழலைக் கருத்தில் கொண்டு, அவர்களிடம் கற்பிப்பதைப் போலவே செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

உதாரணமாக:

'மாணவர்களே! இந்தப் படத்தை நன்றாக அவதானியுங்கள். இதில் என்ன நடைபெறுகின்றது?'

என வினாவை முன்வைத்த பின்னர் சிறிது நேரம் இடைவெளி கொடுக்க வேண்டும்.

அதன் பின்னர்,

'ஆம், இந்தப் படத்தில் மக்கள் ஒன்றுகூடி தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதைக் காணலாம். இவ்வாறு ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதும் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதும் சனநாயக மக்கள் சமூகத்தின் முக்கியமான பண்புகளாகும்.'

எனக் கற்பித்தலைத் தொடரலாம்.

பரீட்சகர்களிடம் மாணவர்களின் பதில்களை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியதில்லை. எதிர்பார்க்கப்படும் மாணவர் பதில்களையும் ஆசிரியரின் பின்னூட்டத்தையும் மாதிரியாக வெளிப்படுத்த வேண்டும்.

ஒரு மாதிரி எடுத்துக்காட்டு

1. அறிமுகம் – 1 நிமிடம்

"மதிப்பிற்குரிய மதிப்பீட்டாளர்களே, உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

தரம் 8 குடியியல் கல்விப் பாடத்தில், 'சனநாயக மக்கள் சமூகம்' எனும் அலகில், 'கலந்துரையாடல் மூலம் சரியான தீர்வுகளை எட்டுதல்' என்ற விடயத் தலைப்பில், கலந்துரையாடல் முறையைப் பயன்படுத்தி, படங்களைக் காட்சிப்படுத்தல் வினாக்கேட்டல் ஆகிய நுட்பங்களைப் பயன்படுத்தி எனது மாதிரிக் கற்பித்தலை இப்போது முன்னெடுக்கவுள்ளேன்.

"மாணவர்களே, அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!

இன்று நாம் குடியியல் கல்விப் பாடத்தில் சனநாயக மக்கள் சமூகம் என்ற அலகின் ஒரு முக்கியமான விடயத்தைக் கற்றுக்கொள்ளப் போகின்றோம்.

முதலில் இந்தப் படத்தைப் பாருங்கள். படத்தில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள்?

(சிறிது நேரம் இடைவெளி விடுதல்)

ஆம்! அவர்கள் ஒன்றுகூடி ஒரு விடயம் தொடர்பாகத் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கின்றார்கள். இதனை நாம் கலந்துரையாடல் என்கிறோம்.

இன்று நாம் கலந்துரையாடலின் மூலம் எவ்வாறு சரியான தீர்வுகளை எட்டலாம் என்பதைப் புரிந்துகொள்வோம்."

2. முன் அறிவைத் தூண்டுதல் – 1 நிமிடம்

"மாணவர்களே!

நமது வகுப்பறையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதனை எவ்வாறு தீர்ப்பீர்கள்?

(சிறிது நேரம் இடைவெளி விடுதல்)

ஆம்! ஆசிரியருடனும் சக மாணவர்களுடனும் கலந்துரையாடி, ஒவ்வொருவருடைய கருத்துக்களையும் கேட்டறிந்து, ஒரு தீர்வுக்கு வரலாம்.

அப்படியானால், ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது நமது கருத்தை மட்டும் தெரிவிப்பது போதுமா?

(இடைவெளி)

இல்லை. மற்றவர்களின் கருத்துக்களையும் நாம் செவிமடுக்க வேண்டும்."

3. புதிய கருத்தை விளக்குதல் – 2 நிமிடங்கள்

"மாணவர்களே!

கலந்துரையாடல் என்பது ஒரு விடயம் தொடர்பாக இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு பேசுவதாகும்.

ஒரு சிறந்த கலந்துரையாடலில் நாம் பின்வரும் விடயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

முதலாவது, நமது கருத்துக்களைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

இரண்டாவது, மற்றவர்கள் கூறும் கருத்துக்களையும் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

மூன்றாவது, பிறருடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

நான்காவது, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட முயற்சிக்க வேண்டும்.

இதன் மூலம் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள முடியும்.

இதுவே சனநாயக மக்கள் சமூகத்தில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான பண்பாகும்."

4. சூழ்நிலை அடிப்படையிலான செயற்பாடு – 1 நிமிடம்

"இப்போது ஒரு சிறிய சூழ்நிலையைப் பார்ப்போம்.

நமது வகுப்பறையில் சில மாணவர்கள் வகுப்பறையைச் சுத்தமாக வைத்திருப்பது அனைவரினதும் பொறுப்பு எனக் கூறுகின்றார்கள். ஆனால், வேறு சில மாணவர்கள் அது துப்புரவுப் பணியாளர்களின் பொறுப்பு எனக் கூறுகின்றார்கள்.

இந்தக் கருத்து வேறுபாட்டை எவ்வாறு தீர்க்கலாம்?

(சிறிது நேரம் இடைவெளி விடுதல்)

ஆம்! ஒவ்வொருவரும் தமது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களையும் கவனமாகக் கேட்க வேண்டும்.

வகுப்பறையைச் சுத்தமாக வைத்திருப்பது அனைவரினதும் பொறுப்பு என்பதை ஏற்றுக்கொண்டு, மாணவர்கள் தங்களுக்குரிய பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டு செயற்படலாம்.

இவ்வாறு கலந்துரையாடலின் மூலம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட முடியும்."

5. கற்றல் அடைவைச் சரிபார்த்தல் – 1 நிமிடம்

"மாணவர்களே! நாம் இன்று கற்றுக்கொண்ட விடயங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

முதலாவது கேள்வி: கலந்துரையாடலின்போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய இரண்டு முக்கியமான பண்புகளைக் கூறுங்கள்.

(இடைவெளி)

ஆம்! பிறருடைய கருத்துக்களைக் கவனமாகக் கேட்டல், அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல்.

இரண்டாவது கேள்வி: கலந்துரையாடலின் மூலம் நாம் எத்தகைய தீர்வை எட்ட வேண்டும்?

(இடைவெளி)

சரியாகக் கூறினீர்கள்! அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட வேண்டும்."

6. முடிவுரை – 1 நிமிடம்

"மாணவர்களே!

இன்றைய பாடத்தின் மூலம் கலந்துரையாடல் என்பது வெறுமனே பேசுவது மட்டுமல்ல; பிறருடைய கருத்துக்களைக் கேட்டு, அவற்றுக்கு மதிப்பளித்து, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்டும் ஒரு செயன்முறை என்பதை அறிந்துகொண்டோம்.

எனவே, நமது வகுப்பறையிலும் பாடசாலையிலும் அன்றாட வாழ்க்கையிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது அவற்றை அமைதியான கலந்துரையாடலின் மூலம் தீர்த்துக்கொள்ள முயற்சிப்போம்.

இதன் மூலம் பொறுப்புள்ள பிரஜைகளாகச் செயற்படுவோம்.

நன்றி!

இன்றைய பாடம் நிறைவுபெறுகின்றது."

மதிப்பீட்டாளர் முன்னிலையில் உரையை வழங்கும்போது கவனிக்க வேண்டியவை

  1. தொடக்கம்: முகத்தில் இயல்பான புன்னகையுடன், தெளிவான குரலில் வாழ்த்துக் கூறுங்கள்.
  2. படத்தைப் பயன்படுத்துதல்: படத்தைக் காட்டிய பின்னர் உடனடியாகப் பதிலைச் சொல்லாமல் சில விநாடிகள் காத்திருங்கள்.
  3. மாணவர் துலங்கல்: மாணவர்கள் பதிலளிப்பதுபோல் சிறிய இடைவெளி விட்டு, எதிர்பார்க்கப்படும் பதிலைத் தொடர்ந்து இயல்பாகக் கூறுங்கள்.
  4. குரல் ஏற்ற இறக்கம்: முக்கியமான சொற்களான கருத்துப் பகிர்வு, பிறர் கருத்துக்கு மதிப்பளித்தல், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வு ஆகியவற்றை அழுத்தமாகக் கூறுங்கள்.
  5. நேர முகாமைத்துவம்: ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவு செய்யுங்கள்.
  6. முடிவு: கற்றுக்கொண்ட கருத்தை அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி நிறைவு செய்யுங்கள்.

கற்றல் வளங்களைப் பயன்படுத்துவதில் கவனிக்க வேண்டியவை

கற்றல் வளங்கள் பாடத்தின் நோக்கத்தை அடைய உதவுபவையாக இருக்க வேண்டும்.

ஒரு படத்தைப் பயன்படுத்தினால் அதனை ஏன் பயன்படுத்துகின்றோம், அதிலிருந்து மாணவர்கள் எதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பன தெளிவாக இருக்க வேண்டும்.

படங்களின் கீழே விடையை அல்லது கருத்தை முன்கூட்டியே எழுதிக் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் படத்தை அவதானித்து, சிந்தித்து, தமது கருத்துக்களை முன்வைக்கக்கூடிய வாய்ப்பை வழங்க வேண்டும்.

மேலும், பாடத்திட்டத்தின் இறுதியில் பின்னிணைப்பாகப் பயன்படுத்தப்படும் படங்கள் அல்லது கற்றல் வளங்களை இணைப்பது ஆவணத்தின் ஒழுங்கையும் தெளிவையும் மேம்படுத்தும்.

விண்ணப்பதாரர்கள் தவிர்க்க வேண்டிய குறைபாடுகள்

செயன்முறைப் பரீட்சைக்குத் தயாராகும்போது பின்வரும் குறைபாடுகளைத் தவிர்க்க வேண்டும்.

  1. பாடத்திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் முன்னளிப்பைத் தயாரித்தல்.
  2. கற்றல் பேறுகளுடன் தொடர்பில்லாத விடயங்களை உள்ளடக்குதல்.
  3. கற்றல் நோக்கங்களைத் தெளிவாக அமைக்காமை.
  4. பாட அறிமுகத்தில் அதிக நேரத்தைச் செலவிடுதல்.
  5. கற்றல் வளங்களைப் பயன்படுத்தியும் அவற்றைச் சரியான முறையில் கற்பித்தலுடன் தொடர்புபடுத்தாமை.
  6. மாணவர்களின் சிந்தனையைத் தூண்டாத வினாக்களை மட்டும் பயன்படுத்துதல்.
  7. கணிப்பீட்டுக்கும் முடிவுரைக்கும் நேரம் ஒதுக்காமை.
  8. மனப்பாடம் செய்த உரையை மட்டும் ஒப்புவித்தல்.
  9. குரல் கட்டுப்பாடு மற்றும் உடல்மொழியில் கவனம் செலுத்தாமை.
  10. ஐந்து நிமிடங்களுக்குக் குறைவாக முன்னளிப்பை நிறைவு செய்தல்.

விண்ணப்பதாரர்களுக்கான சுயமதிப்பீட்டுப் பட்டியல்

தமது முன்னளிப்பை ஒத்திகை செய்யும்போது பின்வரும் வினாக்களைத் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ளலாம்.

  • எனது பாட அறிமுகம் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கின்றதா?
  • எனது கற்றல் நோக்கங்கள் தெளிவாக உள்ளனவா?
  • பாடத்தை மாணவர்களின் முன் அறிவுடன் தொடர்புபடுத்தியுள்ளேனா?
  • பொருத்தமான கற்றல் வளங்களைப் பயன்படுத்தியுள்ளேனா?
  • எனது விளக்கங்கள் தெளிவாக உள்ளனவா?
  • மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வினாக்களைப் பயன்படுத்தியுள்ளேனா?
  • கற்றல் நோக்கங்களை அடைந்தார்களா என்பதை மதிப்பிடும் செயற்பாடு உள்ளதா?
  • எனது குரல், உடல்மொழி மற்றும் ஆளுமை பொருத்தமாக உள்ளனவா?
  • ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் முன்னளிப்பை நிறைவு செய்ய முடியுமா?
  • ஐந்து மதிப்பீட்டுக் கூறுகளையும் எனது முன்னளிப்பில் வெளிப்படுத்தியுள்ளேனா?

நிறைவுரை

பட்டதாரி ஆசிரியர் செயன்முறைப் பரீட்சை என்பது விண்ணப்பதாரர் தமது பாட அறிவை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பம் மட்டுமல்ல. அவர் எத்தகைய ஆசிரியராக வகுப்பறையில் செயற்படுவார் என்பதையும் வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாகும்.

வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து மதிப்பீட்டுக் கூறுகளையும் நன்கு புரிந்துகொண்டு, அதற்கேற்ப தமது பாடத்திட்டமிடலையும் முன்னளிப்பையும் தயாரித்துக்கொள்வது ஒவ்வொரு விண்ணப்பதாரரினதும் பொறுப்பாகும்.

ஒரு நல்ல ஆசிரியர் அதிகமான தகவல்களை வழங்குபவர் மட்டுமல்லர். மாணவர்களைச் சிந்திக்கச் செய்து, அவர்களே அறிவைக் கட்டியெழுப்புவதற்கு வழிகாட்டுபவரே சிறந்த ஆசிரியர்.

எனவே, இந்தச் செயன்முறைப் பரீட்சையை வெறுமனே ஒரு நியமனத்திற்கான தடையாகக் கருதாமல், தமது கற்பித்தல் திறன்களைச் செம்மைப்படுத்திக்கொள்ளும் ஒரு பயிற்சி வாய்ப்பாகவும் கருதுவோம்.

பரீட்சையில் வெற்றி பெறுவது எமது உடனடி இலக்கு. ஆனால், மாணவர்களின் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் சிறந்த ஆசிரியராக உருவாவதே எமது உயரிய இலக்காக இருக்க வேண்டும்.

ஆசிரியர் தொழிலுக்குள் நுழையத் தயாராகும் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் எமது வாழ்த்துகள்.