
சி. லோகராஜா
கல்வியியல் எழுத்தாளர்
விரிவுரையாளர் மற்றும் ஆசிரிய கல்வியியலாளர்
அறிமுகம்
இலங்கையின் கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் ஒரு முக்கியமான கட்டமாக 2027ஆம் ஆண்டில் தரம் 6 இற்கான புதிய பாடத்திட்ட அறிமுகம் அமைகிறது. இந்த மாற்றம் பாடப்புத்தகங்களின் உள்ளடக்கத்தை மாற்றுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. கற்றல்–கற்பித்தல் செயன்முறைகள், கற்றல் பேறுகள், மாணவர் பங்கேற்பு, கணிப்பீடு மற்றும் ஆசிரியரின் வாண்மைத்துவப் பொறுப்புகள் ஆகியவற்றிலும் புதிய சிந்தனைகளையும் அணுகுமுறைகளையும் வலியுறுத்துகிறது.
இந்தப் பின்னணியில், ஆசிரியர்கள் புதிய கலைத்திட்டத்தைப் புரிந்துகொள்வதுடன், அதற்கேற்ற வகையில் பாடங்களைத் திட்டமிடுவதற்கான திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, புதிய பாடத்திட்டமிடல் மாதிரி ஆசிரியரின் பாடத்திட்டமிடல் செயற்பாட்டை எவ்வாறு ஒழுங்கமைக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியமாகும்.
புதிய பாடத்திட்டமிடல் படிவத்தில் 1.0 முதல் 11.0 வரை பதினொரு முக்கியப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இவை தனித்தனியான நிரப்பப்பட வேண்டிய பகுதிகள் மட்டுமல்ல. ஒரு பாடத்தின் தொடக்கத்திலிருந்து அதன் நிறைவு வரையிலான கற்றல் அனுபவத்தைத் திட்டமிடுவதற்கும், மதிப்பிடுவதற்கும், மேம்படுத்துவதற்குமான ஒன்றோடொன்று தொடர்புடைய கூறுகளாகும்.
இக்கட்டுரை புதிய பாடத்திட்டமிடல் மாதிரியின் ஒவ்வொரு பகுதியையும் விளக்குவதுடன், தரம் 6 குடியியல் கல்வியில் இடம்பெறும் 6.1 – எமது பாடசாலை என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்ட வகுப்பறை எடுத்துக்காட்டுகளையும் முன்வைக்கிறது.
1.0 அடிப்படைத் தகவல் – பாடத்திட்டமிடலுக்கான அடித்தளம்
புதிய பாடத்திட்டமிடல் படிவத்தின் முதல் பகுதி அடிப்படைத் தகவல்களைக் கொண்டுள்ளது. ஒரு பாடம் தொடர்பான அடையாளத் தகவல்களை ஒழுங்காகப் பதிவு செய்வதே இதன் நோக்கமாகும்.
இப்பகுதியில் பின்வரும் விவரங்கள் இடம்பெறுகின்றன:
1.1 திகதி
பாடம் கற்பிக்கப்படும் திகதி
1.2 காலம்
பாடத்திற்காக ஒதுக்கப்பட்ட நேரம்
1.3 பாடம்
கற்பிக்கப்படும் பாடத்தின் பெயர்
1.4 தரம்
கற்பிக்கப்படும் வகுப்பு
1.5 அலகு/தொனிப்பொருள்/தலைப்பு
பாடத்துடன் தொடர்புடைய அலகு, தொனிப்பொருள் அல்லது தலைப்பு
1.6 கற்றல் பேறு
பாடத்தின் மூலம் மாணவர்கள் அடைய வேண்டிய பரந்த கற்றல் அடைவு
1.7 செயற்றிறன் தரநிலை
மாணவர்கள் வெளிப்படுத்த வேண்டிய எதிர்பார்க்கப்படும் செயற்பாட்டுத் திறன்
1.8 பாட விடயம்
கற்பிக்கப்படும் குறிப்பிட்ட பாடப்பகுதி
கற்றல் பேறும் செயற்றிறன் தரநிலையும் ஒன்றல்ல
இப்பகுதியில் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது 1.6 மற்றும் 1.7 ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடாகும்.
கற்றல் பேறு என்பது மாணவர்கள் கற்றல் செயன்முறையின் மூலம் அடைய வேண்டிய பரந்த எதிர்பார்க்கப்படும் அடைவைக் குறிக்கிறது.
செயற்றிறன் தரநிலை என்பது அந்தக் கற்றல் பேற்றை அடைந்த மாணவர் வெளிப்படுத்த வேண்டிய குறிப்பிட்ட செயற்பாடு அல்லது திறனைச் சுட்டிக்காட்டுகிறது.
தரம் 6 குடியியல் கல்வியின் 6.1 – எமது பாடசாலை என்ற தொனிப்பொருளுக்கான எடுத்துக்காட்டு:
கற்றல் பேறு:
“தமது பாடசாலையின் அடிப்படை மற்றும் பின்னணித் தகவல்களின் மூலம் பாடசாலையின் சுயவிபரத்தினை உருவாக்குவார்.”
செயற்றிறன் தரநிலைகள்:
- ஒரு முறையான ஒழுங்கமைப்பாக பாடசாலையை அமைப்பதன் தனித்துவத்தை விளக்குவார்.
- பாடசாலை பற்றிய அடிப்படைத் தகவல்களைச் சேகரிப்பதற்கு உதவக்கூடிய பிரதான ஆவணங்களுக்கான உதாரணங்களை முன்வைப்பார்.
- பாடசாலை தொடர்பான பின்னணித் தகவல்களைப் பரிசீலனை செய்வதன் நன்மைகளை முன்வைப்பார்.
இவ்வாறு கற்றல் பேறும் செயற்றிறன் தரநிலைகளும் வேறுபட்ட நோக்கங்களைக் கொண்டுள்ளன என்பதை ஆசிரியர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
2.0 விசேட கற்றல் பேறு – கற்றல் எதிர்பார்ப்புகளைத் தெளிவுபடுத்துதல்
1.0 பகுதியில் குறிப்பிடப்படும் கற்றல் பேறு பொதுவான எதிர்பார்க்கப்படும் அடைவைக் குறிக்கிறது. அதனை அடைவதற்கான குறிப்பான, அவதானிக்கக்கூடிய கற்றல் அடைவுகளைத் தெளிவுபடுத்துவதே 2.0 விசேட கற்றல் பேறு பகுதியின் நோக்கமாகும்.
படிவத்தில் விசேட கற்றல் பேறுகளைப் பதிவு செய்வதற்காக i, ii, iii என மூன்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
விசேட கற்றல் பேறுகளை எழுதும்போது அவை:
- மாணவர்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்.
- தெளிவான செயற்பாட்டு வினைச்சொற்களைக் கொண்டிருக்க வேண்டும்.
- அவதானிக்கவும் மதிப்பிடவும் கூடியதாக இருக்க வேண்டும்.
- பாடத்தின் கற்றல் பேற்றுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
- மாணவர்களின் தரம் மற்றும் வயதுநிலைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
ABCD அணுகுமுறையைப் பயன்படுத்துதல்
கற்றல் நோக்கங்களைத் தெளிவாக அமைப்பதற்கு ABCD அணுகுமுறை உதவுகிறது.
A – Audience
யார் கற்கிறார்கள்? – மாணவர்கள்
B – Behaviour
என்ன செய்ய வேண்டும்? – எதிர்பார்க்கப்படும் செயற்பாடு
C – Condition
எந்தச் சூழலில் அல்லது எந்த வளத்தைப் பயன்படுத்தி?
D – Degree
எந்த அளவுக்கு அல்லது எந்தத் தரத்தில்?
இக்கூறுகள் அனைத்தும் கற்றல் நோக்கம் தெளிவாகவும் மதிப்பிடக்கூடியதாகவும் அமைய இவை உதவுகின்றன.
புளூமின் பகுப்பியல்
கற்றல் பேறுகளை எழுதும்போது புளூமின் அறிவுசார் பகுப்பியலையும் கருத்திற்கொள்ளலாம்.
அறிவுசார் நிலைகளும் பொருத்தமான செயற்பாட்டு வினைச்சொற்களும்
நினைவுகூரல்
குறிப்பிடுதல், பட்டியலிடுதல், அடையாளம் காணுதல்
விளங்கிக்கொள்ளல்
விளக்குதல், விவரித்தல், சுருக்குதல்
பயன்படுத்துதல்
பயன்படுத்துதல், செயற்படுத்துதல், உருவாக்குதல்
பகுப்பாய்வு
வேறுபடுத்துதல், ஒப்பிடுதல், பகுப்பாய்வு செய்தல்
மதிப்பீடு
மதிப்பிடுதல், நியாயப்படுத்துதல், தீர்மானித்தல்
படைப்பாக்கம்
வடிவமைத்தல், தயாரித்தல், உருவாக்குதல்
தரம் 6 குடியியல் கல்வி எமது பாடசாலை என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்ட மாதிரி விசேட கற்றல் பேறுகள் (ABCD அணுகுமுறையில்)
- வழங்கப்பட்ட பாடசாலையின் ஒழுங்கமைப்பு வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு (C), மாணவர்கள் (A), ஒரு முறையான ஒழுங்கமைப்பாகப் பாடசாலை அமைவதன் தனித்துவத்தை (B), குறைந்தது மூன்று பொருத்தமான பண்புகளைக் குறிப்பிட்டு விளக்குவர் (D).
- வழங்கப்பட்ட பாடசாலை ஆவண மாதிரிகளைப் பயன்படுத்தி (C), மாணவர்கள் (A), பாடசாலையின் அடிப்படைத் தகவல்களைப் பெறுவதற்குப் பயன்படும் பிரதான ஆவணங்களில் குறைந்தது மூன்றினைச் சரியாக அடையாளம் கண்டு (D), ஒவ்வொரு ஆவணத்திற்கும் பொருத்தமான ஓர் உதாரணத்தை முன்வைப்பர் (B).
- வழங்கப்பட்ட பாடசாலையின் பின்னணித் தகவல்களைப் பரிசீலித்து (C), மாணவர்கள் (A), அவற்றைப் பரிசீலிப்பதன் குறைந்தது இரண்டு நன்மைகளைப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குவர் (B, D).
இவை அதிகாரபூர்வச் செயற்றிறன் தரநிலைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மாதிரி விசேட கற்றல் பேறுகளாகும். ஆசிரியர் பாடத்தின் கால அளவு, மாணவர்களின் நிலை மற்றும் கற்றல் சூழலுக்கு ஏற்ப அவற்றைச் செம்மைப்படுத்தலாம்.
3.0 முன்னறிவை மீட்டல் – புதிய கற்றலுக்கான பாலம்
மாணவர்கள் வெறுமையான மனநிலையுடன் வகுப்பறைக்கு வருவதில்லை. அவர்கள் ஏற்கனவே பெற்ற அனுபவங்கள், அறிவு, திறன்கள் மற்றும் கருத்துகளுடன் கற்றல் செயன்முறையில் ஈடுபடுகின்றனர்.
அந்த முன்னறிவை வெளிக்கொணர்ந்து, புதிய கற்றலுடன் தொடர்புபடுத்துவதே 3.0 முன்னறிவை மீட்டல் பகுதியின் நோக்கமாகும்.
முன்னறிவை மீட்டலின் முக்கியத்துவம்
- மாணவர்களின் ஏற்கனவே உள்ள அறிவை அறிந்துகொள்ள உதவுகிறது.
- புதிய கற்றலுக்கு மாணவர்களைத் தயார்படுத்துகிறது.
- மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
- தவறான புரிதல்களையும் அறிவுக் குறைபாடுகளையும் அடையாளம் காண உதவுகிறது.
- புதிய கற்றலுக்கும் அன்றாட அனுபவங்களுக்கும் இடையில் தொடர்பை உருவாக்குகிறது.
முன்னறிவை மீட்டக பயன்படுத்தக்கூடிய நுட்பங்கள்
வினா–விடை: வழிகாட்டும் வினாக்களை முன்வைத்தல்
பட அவதானிப்பு: பாடத்துடன் தொடர்புடைய படங்களைக் காட்டுதல்
எண்ணக்கரு வரைபடம்: மாணவர்களின் முன் அறிவை வரைபடமாக வெளிப்படுத்துதல்
சிந்தனைக் கிளறல்: ஒரு கருத்துடன் தொடர்புடைய எண்ணங்களை முன்வைக்கச் செய்தல்
கலந்துரையாடல்: மாணவர்களின் அனுபவங்களைப் பகிரச் செய்தல்
குறுங்காணொளி: புதிய பாடத்துடன் தொடர்புடைய காட்சியை அறிமுகப்படுத்துதல்
எடுத்துக்காட்டு: எமது பாடசாலை
ஆசிரியர் பாடசாலையின் படத்தைக் காண்பித்து பின்வரும் வினாக்களை எழுப்பலாம்:
- இந்தப் படத்தில் என்ன காணப்படுகிறது?
- உங்கள் பாடசாலையில் யார் யார் பணியாற்றுகின்றனர்?
- பாடசாலையில் நடைபெறும் முக்கியமான செயற்பாடுகள் யாவை?
- உங்கள் பாடசாலையைப் பற்றிய தகவல்களை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
- உங்கள் பாடசாலையின் வரலாறு அல்லது பின்னணியைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா?
மாணவர்களின் பதில்களை ஆசிரியர் கவனமாகக் கேட்டு, அவற்றை புதிய பாடத்துடன் தொடர்புபடுத்த வேண்டும்.
முன்னறிவை மீட்டல் என்பது மாணவர்களுக்கு புள்ளிகள் அல்லது தரங்களை வழங்கும் பரீட்சை அல்ல. புதிய கற்றலுக்கான அவர்களின் தயார்நிலையை அறிந்துகொள்ளும் ஒரு ஆரம்பநிலை கணிப்பீட்டுச் செயற்பாடாகும்.
4.0 சொற்களஞ்சியம் – பாடக் கருத்துகளைப் புரிந்து கொள்வதற்கான மொழியியல் அடித்தளம்
ஒரு பாடத்தில் இடம்பெறும் முக்கியமான சொற்கள், கலைச்சொற்கள் மற்றும் எண்ணக்கருக்களை மாணவர்கள் புரிந்துகொள்வதற்கான திட்டமிடலே சொற்களஞ்சியம் ஆகும்.
சொற்களஞ்சியம் என்பது சொற்களின் பட்டியலை மட்டும் தயாரிப்பதல்ல. அவற்றின் பொருளைப் புரிந்துகொண்டு, சரியான சூழலில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.
சொற்களைத் தெரிவுசெய்யும்போது கவனிக்க வேண்டியவை
- பாடத்தின் மைய எண்ணக்கருக்களை வெளிப்படுத்தும் சொற்கள்.
- மாணவர்களுக்குப் புதியதாக அமையக்கூடிய சொற்கள்.
- பாடத்தின் செயற்பாடுகளுக்குத் தேவையான கலைச்சொற்கள்.
- மாணவர்கள் மதிப்பீட்டில் பயன்படுத்த வேண்டிய முக்கியச் சொற்கள்.
- மாணவர்களின் வயது மற்றும் மொழித்திறனுக்கு ஏற்ற சொற்கள்.
எடுத்துக்காட்டு: எமது பாடசாலை
பாடசாலை: மாணவர்கள் கல்வி கற்கும் நிறுவனம்
ஒழுங்கமைப்பு: ஒரு நோக்கத்தை அடைவதற்காக உறுப்பினர்களும் பணிகளும் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு
நிர்வாகம்: ஒரு நிறுவனத்தின் பணிகளைத் திட்டமிட்டு வழிநடத்தும் செயல்முறை
வகிபாகம்: ஒருவர் ஒரு அமைப்பில் வகிக்கும் பங்கு
பொறுப்பு: ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட கடமை
ஆவணம்: தகவல்களைப் பதிவு செய்து வைத்திருக்கும் ஆதாரம்
பின்னணித் தகவல்: ஒரு நிறுவனம் தொடர்பான வரலாற்று மற்றும் அடிப்படைத் தகவல்கள்
சுயவிபரம்: ஒரு நிறுவனம் பற்றிய முக்கியத் தகவல்களின் தொகுப்பு
சொற்களஞ்சியத்தைக் கற்பிப்பதற்கான நுட்பங்கள்
- சொல் அட்டைகள் தயாரித்தல்.
- சொல்லையும் பொருளையும் பொருத்துதல்.
- படங்களுடன் சொற்களை இணைத்தல்.
- புதிய சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமைத்தல்.
- எண்ணக்கரு வரைபடங்களை உருவாக்குதல்.
- குழுக்களாகச் சொற்களஞ்சியப் பட்டியலைத் தயாரித்தல்.
மாணவர்கள் சொற்களின் பொருளை மனப்பாடம் செய்வதுடன் நின்றுவிடாமல், பாடச் செயற்பாடுகளில் அவற்றைப் பயன்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.
5.0 கற்றல் கற்பித்தல் முறைகள் – கற்றலைச் செயற்படுத்தும் வழிமுறைகள்
5.0 பகுதியில் ஆசிரியர், பாடத்தின் கற்றல் பேறுகளை அடைவதற்காகப் பயன்படுத்தவுள்ள கற்றல் கற்பித்தல் முறைகளைத் தெரிவுசெய்கிறார்.
ஒரு பாடத்தில் என்ன கற்பிக்கப்பட வேண்டும் என்பதைத் திட்டமிடுவதுடன், மாணவர்கள் அந்த அறிவு, திறன் மற்றும் மனப்பாங்குகளை எவ்வாறு பெற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பதையும் திட்டமிடுவது அவசியமாகும். இதற்காகப் பொருத்தமான கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள், முறைகள் மற்றும் உத்திகளை ஆசிரியர் தெரிவுசெய்ய வேண்டும்.
அணுகுமுறை, முறை, உத்தி மற்றும் நுட்பம்
கற்றல் கற்பித்தல் அணுகுமுறை என்பது கற்றல்–கற்பித்தல் செயற்பாடுகள் எந்த அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கும் பரந்த வழிகாட்டும் திசையாகும். எடுத்துக்காட்டாக, மாணவர் மைய அணுகுமுறை மற்றும் ஆசிரியர் மைய அணுகுமுறை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
கற்றல் கற்பித்தல் முறை என்பது கற்றல் பேறுகளை அடைவதற்காகப் பாடத்தில் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்படும் செயற்பாட்டு வழிமுறையாகும். எடுத்துக்காட்டாக, விரிவுரை, வினா–விடை மற்றும் கலந்துரையாடல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
கற்பித்தல் உத்தி என்பது தெரிவுசெய்யப்பட்ட அணுகுமுறை அல்லது முறையைச் சிறப்பாகச் செயற்படுத்துவதற்காக ஆசிரியர் திட்டமிடும் செயற்பாட்டு ஏற்பாடாகும். எடுத்துக்காட்டாக, குழுக்களை அமைத்தல், பணிகளைப் பகிர்ந்தளித்தல், வழிகாட்டும் வினாக்களை வழங்குதல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
கற்பித்தல் நுட்பம் என்பது ஒரு குறிப்பிட்ட கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிரியர் பயன்படுத்தும் குறிப்பிட்ட செயல்முறையாகும். எடுத்துக்காட்டாக, திறந்தநிலை வினாக்களைக் கேட்டல், படங்களிலுள்ள தகவல்களை ஒப்பிடச் செய்தல், வண்ணக் குறியீடுகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
1. பொதுவாகப் பயன்படுத்தப்படும் கற்றல் கற்பித்தல் முறைகள்
விரிவுரை முறை
புதிய கருத்துகளையும் தகவல்களையும் அறிமுகப்படுத்துதல்
வினா–விடை முறை
மாணவர்களின் சிந்தனையைத் தூண்டுதல்
கலந்துரையாடல் முறை
கருத்துப் பரிமாற்றத்தை வளர்த்தல்
செயல்வழிக் கற்பித்தல் முறை
செயற்பாடுகள் மற்றும் அனுபவங்கள் மூலம் கற்றலை ஏற்படுத்துதல்
விளக்கமளித்தல் முறை
கருத்துகள் மற்றும் செயல்முறைகளைத் தெளிவுபடுத்துதல்
செயல்விளக்க முறை
ஒரு செயல் அல்லது செயல்முறையை நேரடியாகக் காட்டி விளக்குதல்
2. பொதுவாகப் பயன்படுத்தப்படும் கற்றல் கற்பித்தல் உத்திகள்
குழுச் செயற்பாடு
ஒத்துழைப்பையும் பொறுப்புப் பகிர்வையும் வளர்த்தல்
இணைக் கற்றல்
மாணவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கற்றல்
சிந்தனைக் கிளறல்
பல்வேறு கருத்துகளையும் தீர்வுகளையும் உருவாக்குதல்
பாத்திரமேற்று நடித்தல்
சூழ்நிலைகளை அனுபவித்து புரிந்துகொள்ளுதல்
பிரச்சினைத் தீர்வு
பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகளை முன்வைத்தல்
கருத்து வரைபடம் உருவாக்குதல்
கருத்துகளுக்கிடையிலான தொடர்புகளை விளக்குதல்
தகவல் தேடல்
பல்வேறு மூலங்களிலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல்
3. பொதுவாகப் பயன்படுத்தப்படும் கற்பித்தல் நுட்பங்கள்
வழிகாட்டும் வினாக்களைக் கேட்டல்:
மாணவர்களின் சிந்தனையை வழிநடத்துதல்
திறந்தநிலை வினாக்களைப் பயன்படுத்துதல்:
விரிவான சிந்தனையையும் கருத்து வெளிப்பாட்டையும் ஊக்குவித்தல்
படங்களை அவதானிக்கச் செய்தல்:
படங்களிலிருந்து தகவல்களைப் பெறுதல்
ஒப்பிடச் செய்தல்:
ஒற்றுமை, வேற்றுமைகளை அடையாளம் காணுதல்
வகைப்படுத்தச் செய்தல்:
தகவல்களைப் பொருத்தமான பிரிவுகளாகப் பிரித்தல்
வண்ணக் குறியீடுகளைப் பயன்படுத்துதல்:
தகவல்களை எளிதில் அடையாளம் காணுதல்
படிப்படியான வழிகாட்டல் :
சிக்கலான செயற்பாடுகளை எளிய படிகளாகச் செய்து முடித்தல்
முக்கியமான வேறுபாடு: குழுக் கற்றல் என்பது சூழலுக்கு ஏற்ப ஒரு கற்றல் ஏற்பாடாகவோ உத்தியாகவோ பயன்படுத்தப்படலாம்.
6.0 பாட விருத்திச் செயற்பாடுகள்
பாட விருத்திச் செயற்பாடுகளைப் படிகளாக அமைத்தல்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
படி 1 – பாடப் பிரவேசம் (5 நிமிடங்கள்)
கற்றல் கற்பித்தல் செயற்பாடு:
பாடசாலையில் இடம்பெறும் பல்வேறு செயற்பாடுகளையும் பாடசாலை உறுப்பினர்களின் பணிகளையும் வெளிப்படுத்தும் படங்களைக் காண்பித்தல். பாடசாலையில் பணியாற்றும் பல்வேறு உறுப்பினர்கள், அவர்களது பொறுப்புகள் மற்றும் பாடசாலையின் செயற்பாடுகள் தொடர்பாக மாணவர்களிடம் வழிகாட்டும் வினாக்களை எழுப்புதல்.
உதாரண வினாக்கள்:
- பாடசாலையில் யார் யார் பணியாற்றுகின்றனர்?
- அவர்கள் அனைவரும் ஒரே பணியைச் செய்கின்றனரா?
- பாடசாலையின் பல்வேறு செயற்பாடுகள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகின்றன?
- பாடசாலை பற்றிய தகவல்களை எவ்வாறு அறிந்துகொள்ளலாம்?
கற்றல் கற்பித்தல் முறைகள்:
- விளக்கமளித்தல்.
- கலந்துரையாடல்.
- கூட்டுறவுக் கற்றல்.
- விசாரணை அடிப்படையிலான கற்றல்
கற்றல் கற்பித்தல் உத்திகள்:
- பட அவதானிப்பு.
- வினா–விடை.
- முன்னறிவைத் தூண்டுதல்.
கற்றல் வளங்கள்:
- பாடசாலையின் பல்வேறு செயற்பாடுகளைக் காட்டும் படங்கள்.
- பாடசாலை ஒழுங்கமைப்பு வரைபடம்.
- பட அட்டைகள்.
எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறு இல. மற்றும் ஆசிரியர் வழிகாட்டல்:
விசேட கற்றல் பேறுகள் i, ii, iii ஆகியவற்றுடன் தொடர்புடைய முன்னறிவைத் தூண்டுதல்.
பாடசாலையின் உறுப்பினர்கள், அவர்களது பணிகள், பாடசாலையின் ஒழுங்கமைப்பு மற்றும் தகவல் மூலங்கள் தொடர்பாக மாணவர்களின் முன் அனுபவங்களை வெளிக்கொணர்தல். மாணவர்களின் பதில்களைப் பாடத்தின் தொனிப்பொருளுடன் தொடர்புபடுத்தி, கற்றல் செயற்பாட்டிற்கு வழிகாட்டுதல்.
மாணவர் பங்கேற்பு:
படங்களை அவதானித்தல். படங்களில் காணப்படும் பாடசாலை உறுப்பினர்கள், அவர்களது பணிகள் மற்றும் பாடசாலையின் செயற்பாடுகள் தொடர்பாகத் தமது கருத்துகளை முன்வைத்தல். ஆசிரியரின் வினாக்களுக்குப் பதிலளித்து முன்னறிவைப் பகிர்ந்துகொள்ளுதல்.
கணிப்பீடும் பின்னூட்டலும்:
மாணவர்களின் வாய்மொழிப் பதில்கள், பட அவதானிப்புத் திறன் மற்றும் முன்னறிவை வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றை அவதானித்தல். பொருத்தமான பதில்களைப் பாராட்டி ஊக்குவித்தல். தவறான புரிதல்கள் காணப்படின் அவற்றைச் சரிப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல்.
படி 2 – எண்ணக்கரு விருத்தி (7 நிமிடங்கள்)
கற்றல் கற்பித்தல் செயற்பாடு:
பாடசாலை ஒரு முறையான ஒழுங்கமைப்பாகச் செயற்படும் விதத்தை விளக்குதல். பாடசாலையின் ஒழுங்கமைப்புக் கட்டமைப்பு வரைபடத்தைப் பயன்படுத்தி, அதிபர், ஆசிரியர்கள், ஏனைய பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் பொறுப்புகள், கடமைகள் மற்றும் பரஸ்பரத் தொடர்புகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.
பாடசாலையின் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு, பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வழிகாட்டுதல்.
கற்றல் கற்பித்தல் முறைகள்:
- விளக்கமளித்தல் முறை.
- கலந்துரையாடல் முறை.
கற்றல் கற்பித்தல் உத்திகள்:
- ஒழுங்கமைப்பு வரைபடத்தைப் பயன்படுத்தி விளக்கமளித்தல்.
- எடுத்துக்காட்டுகள் மூலம் எண்ணக்கருவைத் தெளிவுபடுத்துதல்.
- வழிகாட்டும் வினா எழுப்புதல்.
கற்றல் வளங்கள்:
- பாடசாலையின் ஒழுங்கமைப்புக் கட்டமைப்பு வரைபடம்.
- பதவிகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல் அட்டைகள்.
- வெள்ளைப்பலகை மற்றும் குறிப்பேடு.
எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறு இல. மற்றும் ஆசிரியர் வழிகாட்டல்:
விசேட கற்றல் பேறு i: பாடசாலை ஒரு முறையான ஒழுங்கமைப்பாக அமைவதன் தனித்துவத்தை விளக்குவதற்கு வழிகாட்டுதல்.
பாடசாலையின் பல்வேறு உறுப்பினர்களின் பொறுப்புகள், கடமைகள், அதிகாரப் பகிர்வு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல். பாடசாலை ஒரு முறையான ஒழுங்கமைப்பாக அமைவதற்கான குறைந்தது மூன்று பொருத்தமான பண்புகளை மாணவர்கள் அடையாளம் கண்டு விளக்குவதற்கு வழிகாட்டுதல்.
மாணவர் பங்கேற்பு:
ஒழுங்கமைப்புக் கட்டமைப்பு வரைபடத்தை அவதானித்தல். பாடசாலையின் பல்வேறு பதவிகள், பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகளை அடையாளம் காணுதல். அவற்றுக்கிடையிலான தொடர்புகள் பற்றிக் கலந்துரையாடி, பாடசாலை ஒரு முறையான ஒழுங்கமைப்பாகச் செயற்படுவதன் தனித்துவத்தை விளக்குதல்.
கணிப்பீடும் பின்னூட்டலும்:
வாய்மொழி வினாக்கள் மூலம் மாணவர்களின் புரிதலைச் சரிபார்த்தல். பாடசாலையின் ஒழுங்கமைப்புத் தனித்துவத்தை விளக்கும் மாணவர்களின் கருத்துகளின் பொருத்தத்தை அவதானித்தல். தேவையான இடங்களில் மேலதிக எடுத்துக்காட்டுகளையும் விளக்கங்களையும் வழங்குதல்.
படி 3 – தகவல் ஆராய்தல் (8 நிமிடங்கள்)
கற்றல் கற்பித்தல் செயற்பாடு:
பாடசாலையின் அடிப்படைத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்குப் பயன்படும் பிரதான ஆவணங்களின் மாதிரிகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல். பாடசாலைப் பதிவேடுகள், ஆண்டு அறிக்கைகள், பாடசாலைச் சுயவிபர ஆவணங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய ஆவணங்களின் மாதிரிகளை வழங்கி, அவற்றிலிருந்து பெறக்கூடிய தகவல்களை ஆராய்வதற்கு வழிகாட்டுதல்.
ஆவணங்களின் தன்மைக்கும் அவற்றிலிருந்து பெறக்கூடிய தகவல்களுக்கும் இடையிலான தொடர்பை மாணவர்கள் கண்டறியச் செய்தல்.
கற்றல் கற்பித்தல் முறைகள்:
- கூட்டுறவுக் கற்றல் முறை.
- விசாரணை அடிப்படையிலான கற்றல் முறை.
கற்றல் கற்பித்தல் உத்திகள்:
- ஆவணங்களை ஆராய்தல்.
- குழுச் செயற்பாடு.
- தகவல்களை வகைப்படுத்துதல்.
- வினா எழுப்புதல்.
கற்றல் வளங்கள்:
- பாடசாலைப் பதிவேடுகளின் மாதிரிகள்.
- பாடசாலை ஆண்டு அறிக்கை.
- பாடசாலைச் சுயவிபர ஆவணம்.
- தகவல் அட்டைகள்.
- ஆவண மாதிரிகள்.
எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறு இல. மற்றும் ஆசிரியர் வழிகாட்டல்:
விசேட கற்றல் பேறு ii: பாடசாலையின் அடிப்படைத் தகவல்களைப் பெறுவதற்குப் பயன்படும் பிரதான ஆவணங்களில் குறைந்தது மூன்றினை அடையாளம் கண்டு, ஒவ்வொரு ஆவணத்திற்கும் பொருத்தமான ஓர் உதாரணத்தை முன்வைப்பதற்கு வழிகாட்டுதல்.
பல்வேறு ஆவணங்களின் பயன்பாடுகளை விளக்கி, அவற்றிலிருந்து பெறக்கூடிய தகவல்களை அடையாளம் காண்பதற்கும் பொருத்தமான உதாரணங்களை முன்வைப்பதற்கும் வழிகாட்டுதல்.
மாணவர் பங்கேற்பு:
வழங்கப்பட்ட ஆவண மாதிரிகளைச் சிறு குழுக்களாக ஆராய்தல். ஒவ்வொரு ஆவணத்திலிருந்தும் பெறக்கூடிய அடிப்படைத் தகவல்களை அடையாளம் காணுதல். ஆவணங்களின் பெயர்களையும் அவற்றின் பயன்பாடுகளையும் வகைப்படுத்தி, தமது கருத்துகளை முன்வைத்தல்.
கணிப்பீடும் பின்னூட்டலும்:
மாணவர்கள் ஆவணங்களையும் அவற்றின் பயன்பாடுகளையும் சரியாக அடையாளம் காண்கிறார்களா என்பதை அவதானித்தல். குறைந்தது மூன்று பிரதான ஆவணங்களைச் சரியாக அடையாளம் காணும் திறனைச் சரிபார்த்தல். பொருத்தமான பதில்களை உறுதிப்படுத்தி, தவறான அடையாளப்படுத்தல்களைச் சரிசெய்தல்.
படி 4 – பின்னணித் தகவல்களை ஆராய்தல் (7 நிமிடங்கள்)
கற்றல் கற்பித்தல் செயற்பாடு:
பாடசாலையின் வரலாறு, தோற்றம், வளர்ச்சி, சாதனைகள், மாணவர் எண்ணிக்கை மற்றும் சமூகத்துடனான தொடர்புகள் போன்ற பின்னணித் தகவல்களை அறிமுகப்படுத்துதல்.
பாடசாலையின் பின்னணித் தகவல்களைப் பரிசீலிப்பதன் நன்மைகள் குறித்து வழிகாட்டும் கலந்துரையாடலை நடத்துதல். இத்தகவல்களை அறிந்துகொள்வதன் மூலம் பாடசாலையின் வளர்ச்சி, தனித்துவம், சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டமிடல் தொடர்பாக எவ்வாறு புரிதலைப் பெறலாம் என்பதை மாணவர்கள் ஆராய்வதற்கு வழிகாட்டுதல்.
கற்றல் கற்பித்தல் முறைகள்:
- கலந்துரையாடல் முறை.
- கூட்டுறவுக் கற்றல் முறை.
கற்றல் கற்பித்தல் உத்திகள்:
- வழிகாட்டும் வினா எழுப்புதல் (Guided Questioning).
- குழுக் கலந்துரையாடல் (Group Discussion).
- கருத்துப் பகிர்வு.
- எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குதல்.
கற்றல் வளங்கள்:
- பாடசாலையின் பின்னணித் தகவல்கள் அடங்கிய ஆவணங்கள்.
- பாடசாலை ஆண்டு அறிக்கை.
- பாடசாலைச் சாதனைகள் தொடர்பான புகைப்படங்கள்.
- தகவல் அட்டைகள்.
- வெள்ளைப்பலகை.
எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறு இல. மற்றும் ஆசிரியர் வழிகாட்டல்:
விசேட கற்றல் பேறு iii: பாடசாலையின் பின்னணித் தகவல்களைப் பரிசீலிப்பதன் குறைந்தது இரண்டு நன்மைகளைப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக விளக்குவதற்கு வழிகாட்டுதல்.
பாடசாலையின் பின்னணித் தகவல்களை அறிந்துகொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை மாணவர்கள் அடையாளம் காண்பதற்கு வழிகாட்டுதல். பாடசாலையின் வளர்ச்சி, சாதனைகள், தனித்துவம் மற்றும் எதிர்கால முன்னேற்றம் போன்றவற்றுடன் தொடர்புபடுத்தி எடுத்துக்காட்டுகளை முன்வைக்கச் செய்தல்.
மாணவர் பங்கேற்பு:
வழங்கப்பட்ட பின்னணித் தகவல்களை ஆராய்தல். குழுக்களாகக் கலந்துரையாடி, பாடசாலையின் பின்னணித் தகவல்களை அறிந்துகொள்வதன் நன்மைகளை அடையாளம் காணுதல். குறைந்தது இரண்டு நன்மைகளைப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி, தமது கருத்துகளை ஏனைய மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்.
கணிப்பீடும் பின்னூட்டலும்:
மாணவர்கள் முன்வைக்கும் கருத்துகளின் பொருத்தம், எடுத்துக்காட்டுகளின் தொடர்புத்தன்மை மற்றும் விளக்கத் திறன் ஆகியவற்றை அவதானித்தல். குறைந்தது இரண்டு நன்மைகளைத் தெளிவாக விளக்குகிறார்களா என்பதைச் சரிபார்த்தல். மாணவர்களின் கருத்துகளை ஒருங்கிணைத்து, தேவையான பின்னூட்டலை வழங்குதல்.
படி 5 – குழுச் செயற்பாடு (8 நிமிடங்கள்)
கற்றல் கற்பித்தல் செயற்பாடு:
மாணவர்களைச் சிறு குழுக்களாகப் பிரித்து, இதற்கு முன்னர் ஆராய்ந்த பாடசாலையின் ஒழுங்கமைப்பு, அடிப்படைத் தகவல்கள் மற்றும் பின்னணித் தகவல்களை ஒருங்கிணைத்து, பாடசாலையின் சுயவிபரத்தைத் தயாரிக்கும் பணியை வழங்குதல்.
ஒவ்வொரு குழுவிற்கும் பாடசாலைச் சுயவிபர மாதிரி அல்லது தயாரிப்பு வடிவத்தை வழங்குதல். சுயவிபரத்தில் இடம்பெற வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பாகத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குதல். குழு உறுப்பினர்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டு கூட்டாகச் செயற்படுவதற்கு ஊக்குவித்தல்.
கற்றல் கற்பித்தல் முறைகள்:
- கூட்டுறவுக் கற்றல் முறை.
- செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல் முறை.
கற்றல் கற்பித்தல் உத்திகள்:
- குழுச் செயற்பாடு.
- வழிகாட்டப்பட்ட செயற்பாடு.
- தகவல்களைத் தொகுத்தல்.
- கூட்டாகப் படைப்பாக்கம் செய்தல்.
- கருத்துப் பகிர்வு.
கற்றல் வளங்கள்:
- பாடசாலைச் சுயவிபர மாதிரி.
- பாடசாலையின் அடிப்படைத் தகவல்கள் அடங்கிய ஆவணங்கள்.
- பாடசாலையின் ஒழுங்கமைப்பு வரைபடம்.
- பின்னணித் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்.
- விளக்கப்படத் தாள்கள்.
- நிறப்பேனைகள் மற்றும் எழுதுகருவிகள்.
எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறு இல. மற்றும் ஆசிரியர் வழிகாட்டல்:
விசேட கற்றல் பேறுகள் i, ii, iii: மூன்று விசேட கற்றல் பேறுகளையும் ஒருங்கிணைத்துப் பாடசாலையின் சுயவிபரத்தைத் தயாரிப்பதற்கு வழிகாட்டுதல்.
பாடசாலையின் ஒழுங்கமைப்புத் தனித்துவம், அடிப்படைத் தகவல்கள் மற்றும் பின்னணித் தகவல்கள் ஆகியவை சுயவிபரத்தில் பொருத்தமான முறையில் இடம்பெறுவதை உறுதிப்படுத்துதல். தகவல்களின் பொருத்தம், ஒழுங்கமைப்பு, நிறைவு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு வழிகாட்டுதல்.
மாணவர் பங்கேற்பு:
குழுக்களாகப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டு செயற்படுதல். வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்களைப் பயன்படுத்தி, பாடசாலையின் ஒழுங்கமைப்பு, அடிப்படைத் தகவல்கள் மற்றும் பின்னணித் தகவல்களைத் தொகுத்தல். வழங்கப்பட்ட மாதிரியின் அடிப்படையில் பாடசாலையின் சுயவிபரத்தின் ஆரம்பநிலைத் தயாரிப்பை உருவாக்குதல்.
கணிப்பீடும் பின்னூட்டலும்:
குழுக்களின் பங்கேற்பு, கூட்டுறவு, தகவல்களின் பொருத்தம் மற்றும் சுயவிபரத் தயாரிப்பின் ஒழுங்கமைப்பு ஆகியவற்றை அவதானித்தல். கணிப்பீட்டு நிபந்தனைகளின் அடிப்படையில் குழுக்களின் தயாரிப்புகளைப் பார்வையிட்டு, மேம்படுத்த வேண்டிய பகுதிகள் தொடர்பாக உடனடி வழிகாட்டுதல்களையும் பின்னூட்டத்தையும் வழங்குதல்.
படி 6 – முழுமையான கணிப்பீடும் பின்னூட்டமும் (5 நிமிடங்கள்)
கற்றல் கற்பித்தல் செயற்பாடு:
குழுக்கள் தயாரித்த பாடசாலைச் சுயவிபரங்களைப் பார்வையிட்டு, ஆசிரியர் வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள கணிப்பீட்டு நிபந்தனைகளின் அடிப்படையில் அவற்றைக் கணிப்பிடுதல். மாணவர்களின் தயாரிப்புகளில் காணப்படும் நிறைகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பகுதிகளைச் சுட்டிக்காட்டி, பொருத்தமான பின்னூட்டத்தை வழங்குதல்.
கற்றல் பேறுகள் அடையப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாய்மொழி வினாக்களை எழுப்புதல். பாடத்தின் முக்கியக் கருத்துகளை ஒருங்கிணைத்து, மாணவர்களின் கற்றலை உறுதிப்படுத்துதல்.
கற்றல் கற்பித்தல் முறைகள்:
- செயற்பாட்டு அடிப்படையிலான கணிப்பீடு.
- தொடர்ச்சியான கணிப்பீடு.
- சுயமதிப்பீடு மற்றும் குழு மதிப்பீடு.
கற்றல் கற்பித்தல் உத்திகள்:
- தயாரிப்புப் பொருள் மதிப்பீடு.
- அவதானித்தல்.
- வாய்மொழி வினா–விடை.
- சுயமதிப்பீடு.
- பின்னூட்டம் வழங்குதல்.
கற்றல் வளங்கள்:
- கணிப்பீட்டு நியதிகள் அடங்கிய கணிப்பீட்டுப் பட்டியல்.
- குழுக்களின் பாடசாலைச் சுயவிபரத் தயாரிப்புகள்.
- கணிப்பீட்டுப் படிவம்.படிவம்.
- வெள்ளைப்பலகை.
எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறு இல. மற்றும் ஆசிரியர் வழிகாட்டல்:
விசேட கற்றல் பேறுகள் i, ii, iii.
மூன்று விசேட கற்றல் பேறுகளும் அடையப்பட்டுள்ளனவா என்பதைப் பின்வரும் அடிப்படைகளில் உறுதிப்படுத்துதல்:
- கற்றல் பேறு i: பாடசாலை ஒரு முறையான ஒழுங்கமைப்பாக அமைவதன் தனித்துவத்தை மாணவர்கள் குறைந்தது மூன்று பொருத்தமான பண்புகளைக் குறிப்பிட்டு விளக்குகின்றனரா என்பதைச் சரிபார்த்தல்.
- கற்றல் பேறு ii: பாடசாலையின் அடிப்படைத் தகவல்களைப் பெறுவதற்குப் பயன்படும் குறைந்தது மூன்று பிரதான ஆவணங்களை மாணவர்கள் சரியாக அடையாளம் கண்டு, ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான உதாரணத்தை முன்வைக்கின்றனரா என்பதைச் சரிபார்த்தல்.
- கற்றல் பேறு iii: பாடசாலையின் பின்னணித் தகவல்களைப் பரிசீலிப்பதன் குறைந்தது இரண்டு நன்மைகளைப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் மாணவர்கள் விளக்குகின்றனரா என்பதைச் சரிபார்த்தல்.
பாடசாலைச் சுயவிபரத் தயாரிப்பில் காணப்படும் நிறைகள் மற்றும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குதல்.
மாணவர் பங்கேற்பு:
தமது குழுக்கள் தயாரித்த பாடசாலைச் சுயவிபரத்தைச் சுருக்கமாக முன்னிலைப்படுத்துதல். ஆசிரியரின் பின்னூட்டத்தைக் கவனித்தல். தமது தயாரிப்பின் நிறைகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காணுதல். வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
கணிப்பீடும் பின்னூட்டலும்:
குழுக்களின் பாடசாலைச் சுயவிபரத் தயாரிப்புகளையும் மாணவர்களின் வாய்மொழிப் பதில்களையும் கணிப்பீடு செய்தல். ஆசிரியர் வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து கணிப்பீட்டு நிபந்தனைகளின் அடிப்படையில் தயாரிப்புகளின் தரத்தை ஆராய்தல். ஒவ்வொரு குழுவினதும் அடைவுகளைத் தெளிவுபடுத்தி, கற்றல் பேறுகளை மேலும் மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான பின்னூட்டத்தையும் வழிகாட்டுதல்களையும் வழங்குதல்.
செயற்றிறன் தரநிலைகளும் கணிப்பீட்டு நியதிகளும்
இங்கு ஆசிரியர்கள் ஒரு முக்கியமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.
செயற்றிறன் தரநிலைகள் மாணவர்கள் வெளிப்படுத்த வேண்டிய எதிர்பார்க்கப்படும் செயற்பாடுகளைக் குறிப்பிடுகின்றன.
கணிப்பீட்டு நியதிகள் மாணவர்கள் தயாரிக்கும் பெறுபேற்றின் தரத்தை கணிப்பிடுவதற்கான அடிப்படைகளைக் குறிப்பிடுகின்றன.
ஆசிரியர் வழிகாட்டியில் “எமது பாடசாலை” பாடத்திற்குரிய அட்டவணை இலக்கம் 08 இல், பாடசாலையின் சுயவிபரத்தைத் தயாரிக்கும் செயற்பாட்டிற்கான கணிப்பீட்டு நியதிகள் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளன:
- முறையான ஒழுங்கமைப்பொன்றின் பண்புகள் பாடசாலையின் மூலம் வெளிப்படுத்தப்படும் முறையை உள்ளடக்குதல்.
- பாடசாலையில் இடம்பெறும் பிரதான செயற்பாடுகளைத் தெளிவாகக் காட்டியிருத்தல்.
- படைப்பாற்றலுடன் முன்னிலைப்படுத்தல்.
- தரவுகள் மற்றும் தகவல்களின் தரமும் நிறைவும்.
- கூட்டாகச் செயற்படுதல்.
இந்த நிபந்தனைகளை மூன்று செயற்பாட்டிறன் தரநிலைகளுடன் ஒன்றாகக் கலக்காமல், அவற்றின் தனித்துவத்தைப் பேணிப் பயன்படுத்த வேண்டும்.
7.0 விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கற்பித்தல் நுட்பங்கள்
அனைத்து மாணவர்களும் பாடத்தின் கற்றல் செயற்பாடுகளில் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்று, எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அடைவதற்கு அவர்களது தனிப்பட்ட கற்றல் தேவைகள், திறன்கள் மற்றும் கற்றல் வேகங்களுக்கு ஏற்ப பின்வரும் கற்பித்தல் நுட்பங்களைப் பயன்படுத்துதல்.
- காட்சிசார் ஆதரவு: பாடசாலையின் ஒழுங்கமைப்புக் கட்டமைப்பு வரைபடத்தை எளிய படங்கள், குறியீடுகள் மற்றும் தெளிவான எழுத்துகளுடன் வழங்குதல்.
- வாய்மொழி விளக்கமளித்தல்: வாசிப்புச் சிரமம் உள்ள மாணவர்களுக்கு ஆவண மாதிரிகளிலுள்ள முக்கியமான தகவல்களை வாய்மொழியாக வாசித்து விளக்குதல்.
- வண்ணக் குறியீடுகளைப் பயன்படுத்துதல்: ஆவண மாதிரிகளில் முக்கியமான பகுதிகள், தலைப்புகள் மற்றும் தகவல்களை வெவ்வேறு வண்ணக் குறியீடுகளால் அடையாளப்படுத்துதல்.
- படிப்படியான வழிகாட்டல்: பாடசாலையின் சுயவிபரத்தைத் தயாரிக்கும் செயற்பாட்டைச் சிறிய படிகளாகப் பிரித்து, தேவையான மாணவர்களுக்கு ஒவ்வொரு படியிலும் தனிப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்குதல்.
- திறனடிப்படையிலான பொறுப்புப் பகிர்வு: குழுச் செயற்பாடுகளில் மாணவர்களின் தனிப்பட்ட திறன்களுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப தகவல் சேகரித்தல், படங்களைத் தெரிவுசெய்தல், எழுதுதல் மற்றும் முன்னிலைப்படுத்துதல் போன்ற பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தல்.
- இணைமாணவர் உதவி: கற்றலில் மேலதிக ஆதரவு தேவைப்படும் மாணவர்களுக்கு சக மாணவர்களின் உதவியையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்துதல்.
- கூடுதல் நேரமும் ஆதரவும்: செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு மேலதிக நேரம் அல்லது தனிப்பட்ட உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு பொருத்தமான ஆதரவை வழங்குதல்.
வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல்
ஒரே கற்றல் பேற்றை அடைவதற்கு மாணவர்களுக்கு வெவ்வேறு கற்றல் வழிகளை வழங்குவதே வேறுபடுத்தப்பட்ட கற்பித்தலின் அடிப்படையாகும்.
இதனை மூன்று வழிகளில் மேற்கொள்ளலாம்:
- உள்ளடக்கத்தை வேறுபடுத்துதல்: மாணவர்களின் புரிதல் நிலைக்கு ஏற்ப தகவல்களை வழங்குதல்.
- கற்றல் செயன்முறையை வேறுபடுத்துதல்: மாணவர்கள் கற்றலில் ஈடுபடும் வழிகளை மாற்றியமைத்தல்.
- கற்றல் அடைவை வெளிப்படுத்தும் முறையை வேறுபடுத்துதல்: எழுதுதல், வாய்மொழி விளக்கமளித்தல், வரைபடம் தயாரித்தல் போன்ற மாற்று வழிகளை வழங்குதல்.
இங்கு மாணவர்களுக்கான கற்றல் எதிர்பார்ப்பைத் தேவையின்றிக் குறைப்பதல்ல நோக்கம். அந்த எதிர்பார்ப்பை அடைவதற்கான பொருத்தமான ஆதரவை வழங்குவதே முக்கியமாகும்.
8.0 மேலதிகக் கற்றல் – வகுப்பறைக்கு அப்பால் கற்றலை விரிவுபடுத்துதல்
வகுப்பறையில் மேற்கொள்ளப்படும் கற்றல் செயற்பாடுகளுடன் கற்றல் முடிவடைந்துவிடுவதில்லை. மாணவர்கள் பெற்ற அறிவு, திறன் மற்றும் அனுபவங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கும் அவற்றை வெவ்வேறு சூழல்களில் பயன்படுத்துவதற்கும் வாய்ப்புகளை வழங்குவது அவசியமாகும்.
இதற்காக ஆசிரியர் பாடத்தின் கற்றல் பேறுகளுடன் தொடர்புடைய மேலதிகச் செயற்பாடுகளைத் திட்டமிட வேண்டும்.
மேலதிகக் கற்றல் செயற்பாடுகளின் வகைகள்
தகவல் சேகரித்தல்
பாடத்துடன் தொடர்புடைய மேலதிகத் தகவல்களைப் பெறுதல்
நேர்காணல்
தொடர்புடைய நபர்களிடம் வினாக்களைக் கேட்டு தகவல்களைப் பெறுதல்
அவதானித்தல்
சுற்றுப்புறத்தில் காணப்படும் நிகழ்வுகள் அல்லது அமைப்புகளை அவதானித்தல்
வாசித்தல்
மேலதிக வாசிப்பு நூல்களைப் பயன்படுத்துதல்
படைப்பாக்கம்
சுவரொட்டி, தகவல் அட்டை, வரைபடம் தயாரித்தல்
சுயகற்றல்
வழங்கப்பட்ட வழிகாட்டலின் அடிப்படையில் தனியாகக் கற்றல்
சமூகத் தொடர்பு
குடும்ப அல்லது சமூக உறுப்பினர்களுடன் கலந்துரையாடுதல்
எடுத்துக்காட்டு: எமது பாடசாலை
மாணவர்கள் பாடசாலையின் சுயவிபரத்தைத் தயாரித்த பின்னர்:
- பாடசாலையின் வரலாறு தொடர்பான தகவல்களைச் சேகரிக்கலாம்.
- பாடசாலை உறுப்பினர்களின் வகிபாகங்களை அறிந்துகொள்ளலாம்.
- பாடசாலைத் தகவல் சுவரொட்டியைத் தயாரிக்கலாம்.
- பாடசாலையின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை முன்வைக்கலாம்.
மேலதிகக் கற்றல் செயற்பாடுகள் மாணவர்களின் வயது, வளங்களின் கிடைப்புத்தன்மை மற்றும் குடும்பச் சூழல் ஆகியவற்றுக்கு ஏற்றதாக அமைய வேண்டும். குறிப்பாக, இணையம் அல்லது கணினி வசதி இல்லாத மாணவர்களுக்கும் மாற்று வழிகளை வழங்க வேண்டும்.
மேலதிகக் கற்றல் என்பது வீட்டுப்பாடத்திற்குச் சமமானதல்ல. வீட்டுப்பாடம் பெரும்பாலும் கற்றவற்றை மீள்பயிற்சி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கலாம். மேலதிகக் கற்றல், கற்றவற்றை விரிவுபடுத்துதல், ஆழப்படுத்துதல் மற்றும் புதிய சூழல்களில் பயன்படுத்துதல் ஆகியவற்றையும் உள்ளடக்குகிறது.
9.0 அனுமதி – பாடத்திட்டமிடலின் பொறுப்புக்கூறல்
புதிய பாடத்திட்டமிடல் படிவத்தில் 9.0 பகுதி அனுமதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கையொப்பம், பெயர், திகதி ஆகிய விவரங்கள் இடம்பெறுகின்றன.
இப்பகுதி பாடத்திட்டமிடல் ஆவணத்தின் அனுமதி தொடர்பான பதிவை உறுதிப்படுத்துகிறது.
கையொப்பம்
உரிய நடைமுறைக்கு ஏற்ப அனுமதி வழங்கும் பொறுப்புடையவரின் கையொப்பம்
பெயர்
கையொப்பமிடும் நபரின் பெயர்
திகதி
அனுமதி வழங்கப்பட்ட திகதி
படிவத்தில் யார் கையொப்பமிட வேண்டும் என்பது தனியாகக் குறிப்பிடப்படாவிட்டால், அதனைப் பாடசாலையின் நடைமுறைகளுக்கு ஏற்ப தீர்மானிக்க வேண்டும்.
ஆசிரியர் தேவையான விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
10.0 ஆசிரியர் பிரதிபலிப்பு – கற்பித்தலை மீளாய்வு செய்து மேம்படுத்துதல்
பாடம் நிறைவடைந்த பின்னர் ஆசிரியர் தனது திட்டமிடலையும் நடைமுறைக் கற்பித்தலையும் ஒப்பிட்டு ஆராய்ந்து, மாணவர்களின் கற்றல் அடைவுகள் தொடர்பாகச் சுயமதிப்பீடு செய்வதே ஆசிரியர் பிரதிபலிப்பின் நோக்கமாகும்.
ஆசிரியர் எதிர்பார்த்த கற்றல் அனுபவங்களுக்கும் வகுப்பறையில் உண்மையில் நிகழ்ந்த செயற்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை ஆராய்ந்து, அவற்றிலிருந்து பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் எதிர்காலக் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும்.
பிரதிபலிப்பை எழுதுவதற்கான நான்கு நிலைகள்
1. எதிர்பார்த்தது (What was expected?)
பாடத்தைத் திட்டமிடும்போது ஆசிரியர் எதிர்பார்த்த கற்றல் பேறுகள், மாணவர் பங்கேற்பு, கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் கணிப்பீட்டு அடைவுகளைப் பதிவு செய்தல்.
- திட்டமிட்ட கற்றல் பேறுகள் யாவை?
- மாணவர்கள் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது?
- பயன்படுத்தத் திட்டமிட்ட முறைகள் மற்றும் வளங்கள் யாவை?
- எதிர்பார்க்கப்பட்ட மாணவர் அடைவுகள் யாவை?
2. நடந்தது (What actually happened?)
வகுப்பறையில் உண்மையில் நடைபெற்ற கற்பித்தல் மற்றும் கற்றல் செயற்பாடுகளை ஆதாரங்களுடன் பதிவு செய்தல்.
- திட்டமிட்ட செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டனவா?
- மாணவர்கள் எவ்வாறு பங்கேற்றனர்?
- பயன்படுத்திய வளங்கள் பயனுள்ளதாக அமைந்தனவா?
- திட்டமிட்ட கற்றல் பேறுகள் எந்த அளவுக்கு அடையப்பட்டன?
- எதிர்கொண்ட சவால்கள் யாவை?
3. கற்றுக்கொண்டவை (What was learned?)
கற்பித்தல் அனுபவத்தின் மூலம் ஆசிரியர் பெற்றுக்கொண்ட புதிய புரிதல்கள், அனுபவங்கள் மற்றும் நுண்ணறிவுகளை ஆராய்தல்.
- மாணவர்களின் கற்றல் தொடர்பாகப் புதியதாக அறிந்துகொண்டவை யாவை?
- எந்தக் கற்பித்தல் உத்திகள் சிறப்பாகச் செயற்பட்டன?
- எதிர்கொண்ட சவால்களிலிருந்து என்ன கற்றுக்கொண்டேன்?
- எனது கற்பித்தல் நடைமுறையில் மாற்றம் தேவைப்படும் அம்சங்கள் எவை?
4. பிரதிபலிப்பு (What will be improved next?)
பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் எதிர்காலக் கற்பித்தலில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களையும் மேம்பாட்டு நடவடிக்கைகளையும் திட்டமிடுதல்.
- அடுத்த பாடத்தில் என்ன மாற்றங்களை மேற்கொள்வேன்?
- எந்தக் கற்றல் வளங்களை மேலதிகமாகப் பயன்படுத்துவேன்?
- மாணவர்களின் பங்கேற்பை எவ்வாறு அதிகரிப்பேன்?
- கற்றல் சிரமங்களை எதிர்கொள்ள என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வேன்?
மாதிரி ஆசிரியர் பிரதிபலிப்புப் பதிவு
தரம் 6 குடியியல் – பாடசாலை ஓர் ஒழுங்கமைப்பாக
1. எதிர்பார்த்தது
மாணவர்கள் பாடசாலையின் ஒழுங்கமைப்புத் தனித்துவத்தை விளக்குதல், அடிப்படைத் தகவல்களைப் பெறுவதற்கான பிரதான ஆவணங்களை அடையாளம் காணுதல், பின்னணித் தகவல்களைப் பரிசீலிப்பதன் நன்மைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல் ஆகிய மூன்று விசேட கற்றல் பேறுகளையும் அடைவார்கள் என எதிர்பார்த்தேன். குழுச் செயற்பாட்டின் மூலம் பாடசாலையின் சுயவிபரத்தைத் தயாரிப்பதிலும் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் எனத் திட்டமிட்டேன்.
2. நடந்தது
மாணவர்கள் பாடசாலையின் ஒழுங்கமைப்பு வரைபடம் மற்றும் ஆவண மாதிரிகளை ஆர்வத்துடன் ஆராய்ந்தனர். பெரும்பாலான மாணவர்கள் பிரதான ஆவணங்களை அடையாளம் கண்டனர். குழுச் செயற்பாட்டில் பாடசாலையின் சுயவிபரத்தைத் தயாரிப்பதில் பங்கேற்றனர். எனினும், சில மாணவர்களால் பின்னணித் தகவல்களைப் பரிசீலிப்பதன் நன்மைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்க முடியவில்லை. மேலும், குழுச் செயற்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நேரம் போதுமானதாக அமையவில்லை.
3. கற்றுக்கொண்டவை
ஒழுங்கமைப்பு வரைபடங்களும் உண்மையான ஆவண மாதிரிகளும் மாணவர்களின் புரிதலை மேம்படுத்த உதவுகின்றன என்பதை உணர்ந்துகொண்டேன். அதேவேளை, தகவல்களை அடையாளம் காண்பதைவிட அவற்றின் முக்கியத்துவத்தை விளக்குவதற்கு மாணவர்களுக்கு மேலதிக எடுத்துக்காட்டுகளும் வழிகாட்டுதல்களும் தேவைப்படுகின்றன என்பதையும் அறிந்துகொண்டேன். குழுச் செயற்பாடுகளில் தெளிவான பொறுப்புப் பகிர்வு அவசியம் என்பதையும் உணர்ந்தேன்.
4. பிரதிபலிப்பு
அடுத்த பாடத்தில் பாடசாலையின் பின்னணித் தகவல்களைப் பரிசீலிப்பதன் நன்மைகளை விளக்குவதற்குக் கூடுதல் நடைமுறை எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்தத் திட்டமிடுகிறேன். குழுச் செயற்பாட்டில் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனிப் பொறுப்புகளை வழங்குவதுடன், செயற்பாடுகளுக்கான நேரத்தைச் சிறப்பாக முகாமைத்துவம் செய்யவும் திட்டமிடுகிறேன். மேலும், கற்றலில் சிரமம் எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தனிப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்குவேன்.
மேற்கண்ட பதிவு விளக்கத்திற்கான மாதிரி மட்டுமே. உண்மையான பிரதிபலிப்பு வகுப்பறையில் அவதானிக்கப்பட்ட நிகழ்வுகள் மற்றும் கணிப்பீட்டுஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும்.
11.0 மேற்பார்வையாளர் குறிப்பு – கற்பித்தல் தரத்தை உறுதிப்படுத்துதல்
புதிய பாடத்திட்டமிடல் மாதிரியின் இறுதிப் பகுதி மேற்பார்வையாளர் குறிப்பு ஆகும்.
மேற்பார்வையாளர் பாடத்திட்டமிடல் ஆவணத்தையும் வகுப்பறைக் கற்பித்தல் நடைமுறையையும் ஆராய்ந்து, ஆசிரியரின் தொழில்சார் மேம்பாட்டிற்குத் தேவையான வழிகாட்டல்களையும் பின்னூட்டத்தையும் வழங்க முடியும்.
மேற்பார்வையாளர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்
பாடத்திட்டமிடல்:
படிவத்தின் பகுதிகள் முழுமையாகவும் பொருத்தமாகவும் திட்டமிடப்பட்டுள்ளனவ?
கற்றல் பேறுகள்:
அவை தெளிவாகவும் அடையக்கூடிய வகையிலும் உள்ளனவா?
கற்றல் கற்பித்தல் முறைகள்:
மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்றவையா?
பாட விருத்திச் செயற்பாடுகள்:
ஆசிரியர் வழிகாட்டலும் மாணவர் பங்கேற்பும் தொடர்புடையவையா?
கற்றல் வளங்கள்:
பொருத்தமாகப் பயன்படுத்தப்படுகின்றனவா?
உள்ளடக்கிய கற்பித்தல்:
பல்வேறு கற்றல் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறதா?
கணிப்பீடு:
மாணவர்களின் கற்றல் அடைவு பொருத்தமாக கணிப்பிடப்படுகிறதா?
மேற்பார்வையை மேற்கொள்ளக்கூடிய முறைகள்
- பாடத்திட்டமிடல் ஆவணப் பரிசீலனை.
- வகுப்பறை அவதானிப்பு.
- ஆசிரியருடனான கலந்துரையாடல்.
- மாணவர் கற்றல் ஆதாரங்களைப் பரிசீலித்தல்.
- பின்னூட்டல் அமர்வு.
- தொடர்ச்சியான கண்காணிப்பு.
ஆக்கபூர்வமான பின்னூட்டல்
மேற்பார்வையாளர் ஆசிரியரின் குறைபாடுகளை மட்டும் சுட்டிக்காட்டாமல், அவரது சிறப்பம்சங்களையும் அடையாளம் கண்டு, மேம்படுத்த வேண்டிய அம்சங்களுக்கு நடைமுறைப் பரிந்துரைகளை வழங்க வேண்டும்.
உதாரணமாக, “மாணவர்கள் குழுச் செயற்பாட்டில் முழுமையாகப் பங்கேற்கவில்லை” என்று மட்டும் குறிப்பிடுவதற்குப் பதிலாக, “குழு உறுப்பினர்களுக்குத் தனித்தனியான பொறுப்புகளை வழங்கினால் அனைத்து மாணவர்களினதும் பங்கேற்பை அதிகரிக்க முடியும்” என்று பரிந்துரைப்பது பயனுள்ளதாகும்.
மேற்பார்வை என்பது ஆசிரியரைத் தண்டிப்பதற்கான செயற்பாடாக அல்லாமல், அவரது தொழில்சார் வளர்ச்சிக்கும் மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்துவதற்குமான ஆதரவுச் செயன்முறையாக அமைய வேண்டும்
புதிய பாடத்திட்டமிடல் மாதிரியின் பதினொரு பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு தொடர்புபடுகின்றன?
மேற்கண்ட பதினொரு பகுதிகளையும் தனித்தனியாகப் புரிந்துகொள்வது அவசியமானது. அதைவிட முக்கியமானது, அவற்றுக்கிடையிலான தொடர்பைப் புரிந்துகொள்வதாகும்.
1.0 அடிப்படைத் தகவல்
பாடத்திற்கான அடித்தளத் தகவல்களைப் பதிவு செய்தல்
2.0 விசேட கற்றல் பேறு
அடைய வேண்டிய குறிப்பிட்ட கற்றல் அடைவுகளைத் தெளிவுபடுத்துதல்
3.0 முன்னறிவை மீட்டல்
புதிய கற்றலுக்கான முன் அறிவை வெளிக்கொணர்தல்
4.0 சொற்களஞ்சியம்
பாடக் கருத்துகளைப் புரிந்துகொள்வதற்கான சொற்களை அறிமுகப்படுத்துதல்
5.0 கற்றல் கற்பித்தல் முறைகள்
கற்றலைச் செயற்படுத்தும் அணுகுமுறைகளைத் தெரிவுசெய்தல்
6.0 பாட விருத்திச் செயற்பாடுகள்
ஆசிரியர் மற்றும் மாணவர்களின் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல்
7.0 விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கற்பித்தல் நுட்பங்கள்
அனைவருக்கும் கற்றல் வாய்ப்பை உறுதிப்படுத்துதல்
8.0 மேலதிகக் கற்றல்
வகுப்பறைக் கற்றலை விரிவுபடுத்துதல்
9.0 அனுமதி
ஆவணத்தின் அனுமதி தொடர்பான பதிவை உறுதிப்படுத்துதல்
10.0 ஆசிரியர் பிரதிபலிப்பு
கற்பித்தலை மீளாய்வு செய்து மேம்படுத்துதல்
11.0 மேற்பார்வையாளர் குறிப்பு
கற்பித்தல் தரத்தை ஆராய்ந்து வழிகாட்டுதல்
இந்தப் பகுதிகள் அனைத்தும் ஒரு பொதுவான நோக்கத்தை நோக்கி நகர்கின்றன: மாணவர்கள் எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அடைவதற்கு ஏற்ற, திட்டமிட்ட, உள்ளடக்கிய மற்றும் மதிப்பீட்டுடன் இணைந்த கற்றல் அனுபவத்தை உருவாக்குதல்.
ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய வழிகாட்டல்கள்
புதிய பாடத்திட்டமிடல் மாதிரியை நடைமுறைப்படுத்தும் ஆசிரியர்கள் பின்வரும் அம்சங்களை முன்னுரிமைப்படுத்த வேண்டும்.
1. கற்றல் பேற்றிலிருந்து திட்டமிடலைத் தொடங்குங்கள்.
பாடத்தில் என்ன கற்பிக்க வேண்டும் என்பதை மட்டும் சிந்திக்காமல், மாணவர்கள் இறுதியில் எதை அடைய வேண்டும் என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள்.
2. கற்றல் பேறு, விசேட கற்றல் பேறு, செயற்றிறன் தரநிலை ஆகியவற்றை வேறுபடுத்திப் புரிந்துகொள்ளுங்கள்.
இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருந்தாலும், அவற்றின் நோக்கங்கள் வேறுபட்டவை.
3. மாணவர் பங்கேற்பை மையப்படுத்துங்கள்.
மாணவர்கள் கேட்பவர்களாக மட்டும் இல்லாமல், சிந்திப்பவர்களாகவும், ஆராய்பவர்களாகவும், கலந்துரையாடுபவர்களாகவும், படைப்புகளை உருவாக்குபவர்களாகவும் இருக்க வேண்டும்.
4. கற்றல் மற்றும் கணிப்பீட்டை இணைத்துத் திட்டமிடுங்கள்.
கணிப்பீடு என்பது பாடத்தின் இறுதியில் மட்டும் இடம்பெறும் செயற்பாடு அல்ல. கற்றல் நடைபெறும் ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்களின் முன்னேற்றத்தை அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
5. பிரதிபலிப்பின் மூலம் கற்பித்தலை மேம்படுத்துங்கள்.
ஒரு பாடத்தின் அனுபவம் அடுத்த பாடத்திற்கான மேம்பாட்டுத் திட்டமாக மாற வேண்டும்.
முடிவுரை
2027ஆம் ஆண்டில் தரம் 6 இற்கான புதிய கலைத்திட்ட அறிமுகம், இலங்கையின் கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையில் ஆசிரியர்களுக்குப் புதிய பொறுப்புகளையும் தொழில்சார் வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.
புதிய பாடத்திட்டமிடல் மாதிரியின் பதினொரு பகுதிகளும் ஆசிரியர் ஒரு பாடத்தை எவ்வாறு திட்டமிட வேண்டும், மாணவர்களை எவ்வாறு கற்றலில் ஈடுபடுத்த வேண்டும், அவர்களின் கற்றல் அடைவை எவ்வாறு மதிப்பிட வேண்டும், தனது கற்பித்தலை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பவற்றை ஒழுங்குபடுத்துகின்றன.
எனவே, புதிய பாடத்திட்டமிடல் படிவத்தை வெறுமனே நிரப்ப வேண்டிய நிர்வாக ஆவணமாகக் கருதாமல், கற்றல்–கற்பித்தல் செயன்முறையைத் தரமான முறையில் வடிவமைப்பதற்கான கல்வியியல் வழிகாட்டியாகப் பயன்படுத்த வேண்டும்.
ஆசிரியர் மையக் கற்பித்தலிலிருந்து மாணவர் பங்கேற்பை மையப்படுத்திய கற்றல் அனுபவத்தை நோக்கி நகர்வதும், கற்றல் பேறுகளையும் மதிப்பீட்டையும் ஒருங்கிணைப்பதும், ஒவ்வொரு மாணவருக்கும் கற்றல் வாய்ப்பை உறுதிப்படுத்துவதும் இப்புதிய அணுகுமுறையின் நடைமுறை வெற்றிக்கு முக்கியமானவை.
ஒரு சிறந்த பாடத்திட்டமிடல் என்பது ஒரு பாடத்தை எவ்வாறு கற்பிப்பது என்பதை மட்டும் தீர்மானிப்பதல்ல; ஒவ்வொரு மாணவரும் எவ்வாறு கற்றுக்கொண்டு, எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அடைய முடியும் என்பதை முன்கூட்டியே திட்டமிடுவதாகும்.
ஆசிரியர்களுக்கும் ஆசிரிய கல்வியியலாளர்களுக்கும் இந்தக் கட்டுரை புதிய பாடத்திட்டமிடல் மாதிரியைப் புரிந்துகொண்டு வகுப்பறையில் நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உசாத்துணைகள்
1. Felder, R. M., & Brent, R. (1996). Navigating the bumpy road to student-centered instruction. College Teaching, 44(2), 43–47. https://doi.org/10.1080/87567555.1996.9933425
2. Kolb, D. A. (1984). Experiential learning: Experience as the source of learning and development. Prentice-Hall.
3. Loyens, S. M. M., Wijnia, L., & Rikers, R. M. J. P. (2022). Student-centered instruction: Inquiry-, problem-, project-, and case-based learning. In International encyclopedia of education (4th ed., pp. 701–711). Elsevier. https://doi.org/10.1016/B978-0-12-818630-5.14080-1
4. National Research Council. (2000). How people learn: Brain, mind, experience, and school: Expanded edition. National Academy Press. https://doi.org/10.17226/9853
5. Prince, M. J., & Felder, R. M. (2006). Inductive teaching and learning methods: Definitions, comparisons, and research bases. Journal of Engineering Education, 95(2), 123–138. https://doi.org/10.1002/j.2168-9830.2006.tb00884.x


Join the discussion
Leave a comment or reply to another reader. Your email address will not be displayed.