
சி. லோகராஜா
கல்வியியல் எழுத்தாளர் | விரிவுரையாளர் | ஆசிரிய கல்வியியலாளர்
மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரி
அறிமுகம்
கற்பித்தல் என்பது பாடப்புத்தகத்தில் உள்ள உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு எடுத்துரைப்பது மட்டுமல்ல. மாணவர்கள் எதை அடைய வேண்டும், அதனை அடைவதற்கு எத்தகைய கற்றல் கற்பித்தல் அனுபவங்களை வழங்க வேண்டும், அவர்களின் கற்றல் அடைவை எவ்வாறு கணிப்பிட வேண்டும் என்பவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் நோக்கமுடைய செயற்பாடாகும்.
இந்த நோக்கத்தை அடைவதற்கு ஆசிரியர் தயாரிக்கும் பாடத்திட்டம் (Lesson Plan) முக்கியமான கருவியாக விளங்குகிறது. ஒரு பாடத்திட்டம் ஆசிரியரின் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு வழிகாட்டுவதுடன், மாணவர்களின் பங்கேற்பு, கற்றல் அடைவு, கணிப்பீடு மற்றும் பின்னூட்டம் ஆகியவற்றையும் ஒருங்கிணைக்கிறது.
இலங்கையின் பழைய பாடத்திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிலுநர்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட பாடத்திட்ட மாதிரிப் படிவம், பாடத்திட்டத் திட்டமிடலைப் பல்வேறு கூறுகளாக ஒழுங்குபடுத்தியுள்ளது. இக்கூறுகள் ஒவ்வொன்றும் தனித்தனியான பதிவுப் பகுதிகளாகத் தோன்றினாலும், அவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.
இக்கட்டுரையின் நோக்கம், பழைய பாடத்திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படும் பாடத்திட்ட மாதிரியின் ஒவ்வொரு பகுதியையும் விளக்குவதுடன், அவற்றை எவ்வாறு பொருத்தமாகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தலாம் என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் தெளிவுபடுத்துவதாகும்.
1.0 அடிப்படைத் தகவல்கள் (Basic Information)
பாடத்திட்டத்தின் முதலாவது பகுதி அடிப்படைத் தகவல்களைக் கொண்டுள்ளது. இது கற்பிக்கப்படவுள்ள பாடம் தொடர்பான அடையாளத் தகவல்களைச் சுருக்கமாகப் பதிவு செய்யும் பகுதியாகும்.
பழைய பாடத்திட்ட மாதிரியில் பின்வரும் எட்டு கூறுகள் இடம்பெறுகின்றன:
1.1 திகதி: பாடம் கற்பிக்கப்படும் திகதி
1.2 பாடம்: கற்பிக்கப்படும் பாடத்தின் பெயர்
1.3 தரம்: மாணவர்கள் கற்கும் வகுப்பு அல்லது தரம்
1.4 காலம்: பாடத்திற்காக ஒதுக்கப்பட்ட நேரம்
1.5 தேர்ச்சி : பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்புடைய தேர்ச்சி
1.6 தேர்ச்சி மட்டம்: குறித்த தேர்ச்சியை அடைவதற்கான குறிப்பிட்ட மட்டம்
1.7 அலகு / தலைப்பு / தொனிப்பொருள்: கற்பிக்கப்படும் உள்ளடக்கப் பகுதி
1.8 பாட விடயம்: குறிப்பிட்ட பாடப்பகுதி
இந்தப் பகுதியில் தகவல்களைப் பதிவு செய்யும்போது பாடத்திட்ட வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்ச்சி மற்றும் தேர்ச்சி மட்டம் ஆகியவற்றைச் சரியாகத் தெரிவுசெய்வது அவசியமாகும்.
கவனிக்க வேண்டியது: தேர்ச்சி என்பது மாணவர்கள் அடைய வேண்டிய பரந்த கல்விசார் ஆற்றலைக் குறிக்கிறது. தேர்ச்சி மட்டம் என்பது அந்தத் தேர்ச்சியை அடைவதற்கான குறிப்பிட்ட எதிர்பார்க்கப்படும் மட்டத்தைக் குறிக்கிறது. எனவே, இவை இரண்டையும் ஒன்றாகக் கருதக்கூடாது.
2.0 விசேட கற்றல் பேறுகள் (Specific Learning Outcomes)
பாடத்திட்டத்தின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று விசேட கற்றல் பேறுகளைத் தீர்மானிப்பதாகும்.
ஒரு பாடத்தை முடித்த பின்னர் மாணவர்கள் என்ன அறிந்திருப்பார்கள், என்ன செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள், எத்தகைய கருத்துகளை விளக்கக்கூடியவர்களாக இருப்பார்கள் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுவதே விசேட கற்றல் பேறுகளை எழுதுவதன் நோக்கமாகும்.
விசேட கற்றல் பேறுகள் ஆசிரியரின் கற்பித்தல் செயற்பாடுகளையும் மாணவர்களின் கற்றல் அனுபவங்களையும் கணிப்பீட்டு முறைகளையும் ஒரே திசையில் வழிநடத்துகின்றன.
ABCD முறையில் விசேட கற்றல் பேறுகளை எழுதுதல்
விசேட கற்றல் பேறுகளை எழுதுவதற்கு ABCD முறை பயனுள்ள கA –
A- Audience : யார் கற்கின்றனர்?
B – Behavior : மாணவர் என்ன செய்வார்?
C – Condition: எதன் மூலம் அல்லது எந்தச் சூழலில் செய்வார்?
D – Degree: எந்த அளவிற்கு அல்லது எத்தனை சரியாகச் செய்வார்?
எடுத்துக்காட்டு:
இப்பாடத்தின் முடிவில்,
1. மாணவர்கள் (A), தமது பிரதேசத்தில் காணப்படும் சமூக நிறுவனங்கள் தொடர்பான உரையாடல் மற்றும் கலந்துரையாடலின் மூலம் (C), குறைந்தது மூன்று சமூக நிறுவனங்களைச் சரியாகப் பெயரிட்டுக் கூறுவர் (B + D).
2. மாணவர்கள் (A), ஆசிரியர் வழங்கும் செயற்பாட்டுத் தாளின் அடிப்படையில் (C), தெரிவுசெய்யப்பட்ட சமூக நிறுவனமொன்றின் கடமை, பொறுப்பு, தனிநபருக்குக் கிடைக்கும் நன்மை, சமூகத்திற்குக் கிடைக்கும் நன்மை ஆகிய நான்கு கூறுகளையும் பொருத்தமாகப் பதிவு செய்வர் (B + D).
3. மாணவர்கள் (A), குழுக் கலந்துரையாடல் மற்றும் முன்வைப்பின் மூலம் (C), சமூக நிறுவனங்கள் தனிநபருக்கும் சமூகத்திற்கும் வழங்கும் நன்மைகளை குறைந்தது இரண்டு பொருத்தமான கருத்துகள் அல்லது எடுத்துக்காட்டுகளுடன் விளக்குவர் (B + D).
4. மாணவர்கள் (A), குழுவில் தமக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்பின் அடிப்படையில் (C), தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றி, குறைந்தது ஒரு பொருத்தமான கருத்தைப் பகிர்ந்து ஆக்கபூர்வமாகப் பங்கேற்பர் (B + D).
குறிப்பு: இவை ஆசிரியர் வழிகாட்டியின் தேர்ச்சி மட்டம், செயற்பாடுகள் மற்றும் கணிப்பீட்டு நியமங்களை அடிப்படையாகக் கொண்டு ABCD முறையில் வடிவமைக்கப்பட்ட விசேட கற்றல் பேறுகள். எண்ணிக்கை சார்ந்த அடைவு நியமங்கள் பாடத்திட்ட வடிவமைப்புக்காக முன்மொழியப்பட்டவை.
விசேட கற்றல் பேறுகளை எழுதும்போது கவனிக்க வேண்டியவை
- மாணவரை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்.
- அவதானிக்கக்கூடிய அல்லது கணிப்பிடக்கூடிய செயற்பாட்டு வினைச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
- கற்பித்தல் உள்ளடக்கத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
- பாடவேளைக்குள் அடையக்கூடியதாக இருக்க வேண்டும்.
- கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுடனும் கணிப்பீட்டுடனும் பொருந்த வேண்டும்.
- தேவையான இடங்களில் அடைவு நியமத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
“மாணவர்கள் சமூகத்தைப் புரிந்துகொள்வர்” என்பது பொதுவான கூற்றாகும். அதற்குப் பதிலாக “மாணவர்கள் சமூக நிறுவனங்களின் மூன்று நன்மைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குவர்” என எழுதுவது கணிப்பீட்டுக்கு ஏற்றதாகும்.
3.0 முன்னறிவை மீட்டல் (Prior Knowledge)
மாணவர்கள் புதிய விடயங்களைக் கற்பதற்கு முன்னர், அதனுடன் தொடர்புடைய சில அனுபவங்களையும் அறிவையும் கொண்டிருப்பார்கள். அந்த முன்னறிவை வெளிக்கொணர்ந்து புதிய கற்றலுடன் தொடர்புபடுத்துவதே முன்னறிவை மீட்டலின் நோக்கமாகும்.
முன்னறிவை மீட்டல் என்பது மாணவர்களிடம் ஏற்கனவே தெரிந்தவற்றைக் கேட்டு முடிப்பதல்ல. மாறாக, புதிய பாடத்தைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான அடிப்படை அறிவு, அனுபவம், கருத்து ஆகியவற்றைச் செயல்படுத்துவதாகும்.
முன்னறிவை மீட்டுவதற்கான உத்திகள்
- வினா–விடை
- பட அவதானிப்பு
- குறுகிய உரையாடல்
- அனுபவப் பகிர்வு
- கருத்து வரைபடம்
- பொருத்துதல் அல்லது வகைப்படுத்துதல்
- அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களை முன்வைத்தல்
எடுத்துக்காட்டு – குடியுரிமைக் கல்வி:
தரம் 7 மாணவர்களுக்கு “எமது சமூகம்” என்ற பாடத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர்,
- உங்கள் பிரதேசத்தில் காணப்படும் அமைப்புகள் எவை?
- நீங்கள் அங்கத்தவர்களாக உள்ள அமைப்புகள் எவை?
- மக்கள் ஏன் இத்தகைய அமைப்புகளில் இணைகின்றனர்?
என வினாக்களை எழுப்பலாம்.
இவ்வாறு மாணவர்களின் அன்றாட அனுபவங்களிலிருந்து புதிய பாடத்திற்கான அடித்தளத்தை உருவாக்கலாம்.
4.0 சொற்களஞ்சியம் (Key Words / Vocabulary)
ஒரு பாடத்தில் பயன்படுத்தப்படுகின்ற முக்கியமான சொற்களையும் கலைச்சொற்களையும் முன்கூட்டியே அடையாளம் கண்டு பதிவு செய்வதே இப்பகுதியின் நோக்கமாகும்.
புதிய சொற்கள் அல்லது பாடத்துடன் தொடர்புடைய கலைச்சொற்கள் மாணவர்களுக்குப் புரியாவிட்டால், பாடத்தின் கருத்துகளைப் புரிந்துகொள்வதில் சிரமங்கள் ஏற்படலாம். எனவே, பாட உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு அவசியமான சொற்களைத் தெரிவுசெய்து அவற்றை அறிமுகப்படுத்த வேண்டும்.
சொற்களஞ்சியத்தைத் தெரிவுசெய்யும்போது கவனிக்க வேண்டியவை
- பாடத்தின் மையக் கருத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
- மாணவர்களின் வயது மற்றும் மொழித்திறனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
- புதிய அல்லது விளக்கம் தேவைப்படும் சொற்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
- தேவைக்கேற்ப படங்கள், எடுத்துக்காட்டுகள் மற்றும் செயற்பாடுகள் மூலம் விளக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு – “எமது சமூகம்”
சமூகம், சமூக நிறுவனம், அங்கத்தவர், இடைத்தொடர்பு, கடமை, பொறுப்பு, ஒத்துழைப்பு.
சொற்களைப் பட்டியலிடுவது மட்டும் போதாது. அவற்றின் பொருளை மாணவர்கள் புரிந்துகொண்டு பாடச் செயற்பாடுகளில் பயன்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.
5.0 கற்றல் கற்பித்தல் முறைகள், உத்திகள் மற்றும் நுட்பங்கள் (Learning–Teaching Methods, Strategies and Techniques)
கற்றல் கற்பித்தல் முறைகளைத் தெரிவுசெய்வது மட்டுமன்றி, அவற்றை வகுப்பறையில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதையும் ஆசிரியர் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். இதற்காகக் கற்றல் கற்பித்தல் முறைகள், உத்திகள் மற்றும் நுட்பங்கள் ஆகியவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியமாகும்.
5.1 கற்றல் கற்பித்தல் முறைகள் (Methods)
கற்றல் கற்பித்தல் முறைகள் என்பது கற்றல் பேறுகளை அடைவதற்காக ஆசிரியர் பாடத்தை ஒழுங்கமைத்து முன்னெடுக்கும் பொதுவான வழிமுறைகளாகும்.
பயன்படுத்தக்கூடிய முறைகள்:
- விரிவுரை முறை (Lecture Method)
- உரையாடல் முறை (Discussion Method)
- வினா–விடை முறை (Question and Answer Method)
- செய்முறை முறை (Demonstration Method)
- குழுக் கற்றல் முறை (Group Learning Method)
- செயற்பாட்டு முறை (Activity-based Learning Method)
- பிரச்சினைத் தீர்வு முறை (Problem-solving Method)
- கண்டறிதல் முறை (Discovery Method)
- செயற்றிட்டப்பணி முறை (Project Method)
- பாத்திரமேற்று நடித்தல் முறை (Role-play Method)
5.2 கற்றல் கற்பித்தல் உத்திகள் (Strategies)
கற்றல் கற்பித்தல் உத்திகள் என்பது குறிப்பிட்ட கற்றல் பேறுகளை அடைவதற்காக ஆசிரியர் திட்டமிட்டு ஒழுங்கமைக்கும் செயற்பாட்டு அணுகுமுறைகளாகும். ஒரு முறையைப் பயனுள்ளதாக நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான உத்திகளை ஆசிரியர் பயன்படுத்துகிறார்.
பயன்படுத்தக்கூடிய உத்திகள்:
- மாணவர்களைச் சிறு குழுக்களாகப் பிரித்தல்.
- இணைந்து கற்றல் (Cooperative Learning).
- சகமாணவர் கற்றல் (Peer Learning).
- பிரச்சினை அடிப்படையிலான கற்றல் (Problem-based Learning).
- திட்ட அடிப்படையிலான கற்றல் (Project-based Learning).
- சிந்தித்தல்–இணைதல்–பகிர்தல் (Think–Pair–Share).
- முன் அறிவைத் தூண்டும் வினாக்களைப் பயன்படுத்துதல்.
- படிப்படியான வழிகாட்டலை வழங்குதல் (Scaffolding).
- வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல் (Differentiated Instruction).
- கற்றல் நிலையங்களை அமைத்தல் (Learning Stations).
5.3 கற்றல் கற்பித்தல் நுட்பங்கள் (Techniques)
கற்றல் கற்பித்தல் நுட்பங்கள் என்பது ஆசிரியர் தெரிவுசெய்த முறையையும் உத்தியையும் வகுப்பறையில் நடைமுறைப்படுத்துவதற்குப் பயன்படுத்தும் குறிப்பிட்ட செய்முறைகள் அல்லது சிறிய செயல்முறைகளாகும்.
பயன்படுத்தக்கூடிய நுட்பங்கள்:
- சிந்தனைக் கிளறல் (Brainstorming).
- சிந்திக்கத் தூண்டும் வினாக்களை எழுப்புதல் (Probing Questions).
- படங்களை அவதானித்து விளக்குதல் (Picture Interpretation).
- கருத்து வரைபடம் உருவாக்குதல் (Concept Mapping).
- கருத்துப் பகிர்வு (Idea Sharing).
- அட்டைகளைப் பொருத்துதல் (Card Matching).
- தகவல்களை வகைப்படுத்துதல் (Classification).
- பாத்திரமேற்று நடித்தல் (Role Play).
- வினாடி வினா (Quiz).
- ஒரு நிமிடப் பதிவு (One-minute Paper).
- வெளியேறும் சீட்டு (Exit Ticket).
- குறுகிய எழுத்துப் பதிவு (Short Written Response).
5.4 கற்றல் கற்பித்தல் முறை, உத்தி, நுட்பம் – வேறுபாட்டை எடுத்துக்காட்டுடன் புரிந்துகொள்ளுதல்
முறை : கற்பித்தலை முன்னெடுக்கும் பொதுவான வழிமுறை
எடுத்துக்காட்டு: கலந்துரையாடல் முறை
உத்தி: கற்றல் நோக்கத்தை அடையச் செயற்பாடுகளைத் திட்டமிட்டு ஒழுங்கமைத்தல்
எடுத்துக்காட்டு: நான்கு குழுக்களாகப் பிரித்து ஆராயச் செய்தல்
நுட்பம்: செயற்பாட்டை நடைமுறைப்படுத்தப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட செய்முறை
எடுத்துக்காட்டு: கருத்து அட்டைகளைப் பயன்படுத்தி தகவல்களை வகைப்படுத்துதல்
5.5 ஒரு பாடத்தில் முறை, உத்தி, நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்தல்
எடுத்துக்காட்டு – தரம் 7 குடியுரிமைக் கல்வி: அலகு 7.2 – எமது சமூகம்
கற்றல் கற்பித்தல் முறை : கலந்துரையாடல் முறை
கற்றல் கற்பித்தல் உத்தி : குழு அடிப்படையிலான இணைந்து கற்றல்
கற்றல் கற்பித்தல் நுட்பம் : தகவல் அட்டைகளை வகைப்படுத்தி அட்டவணையைப் பூர்த்தி செய்தல்
இங்கு ஆசிரியர் கலந்துரையாடல் முறையைப் பயன்படுத்துகிறார். மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்து இணைந்து கற்கும் உத்தியைப் பின்பற்றுகிறார். ஒவ்வொரு குழுவிற்கும் தகவல் அட்டைகளை வழங்கி அவற்றை வகைப்படுத்தச் செய்வது குறிப்பிட்ட கற்றல் நுட்பமாக அமைகிறது.
5.6 பொருத்தமான முறைகள், உத்திகள், நுட்பங்களைத் தெரிவுசெய்வது எப்படி?
ஆசிரியர் இவற்றைத் தெரிவுசெய்யும்போது பின்வரும் அம்சங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும்:
- பாடத்தின் தேர்ச்சி மற்றும் தேர்ச்சி மட்டம்.
- அடைய வேண்டிய விசேட கற்றல் பேறுகள்.
- பாட உள்ளடக்கத்தின் தன்மை.
- மாணவர்களின் வயது, முன்னறிவு மற்றும் கற்றல் தேவைகள்.
- பாடவேளைக்காக ஒதுக்கப்பட்ட நேரம்.
- கிடைக்கக்கூடிய கற்றல் வளங்கள்.
- மாணவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை.
- கற்றல் பேறுகளை மதிப்பிடுவதற்கான வழிமுறைகள்.
முக்கியமாகக் கவனிக்க வேண்டியது: எல்லாப் பாடங்களுக்கும் ஒரே முறை, உத்தி அல்லது நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. கற்றல் பேறுகளுக்கு ஏற்றவாறு இவற்றைத் தெரிவுசெய்து ஒருங்கிணைப்பதே சிறந்த பாடத்திட்டத் திட்டமிடலாகும்.
6.0 பாட விருத்திச் செயற்பாடுகள் (Lesson Development)
பாடத்திட்டத்தின் மையப் பகுதி பாட விருத்திச் செயற்பாடுகளாகும். முன்னைய பகுதிகளில் திட்டமிடப்பட்ட கற்றல் பேறுகளை அடைவதற்கான ஆசிரியர் செயற்பாடுகளும் மாணவர் கற்றல் அனுபவங்களும் இப்பகுதியில் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.
பழைய பாடத்திட்ட மாதிரியின் அடிப்படையில் பாட விருத்தி பின்வரும் ஐந்து படிகளாக அமைக்கப்படுகிறது:
- படி 1 – பாடப் பிரவேசம்
- படி 2
- படி 3
- படி 4 – மீளாய்வு
- படி 5 – முழுமையான கணிப்பீடும் பின்னூட்டலும்
பாட விருத்தி அட்டவணையில் ஐந்து முக்கிய நிரல்கள் இடம்பெறுகின்றன.
- படி மற்றும் நேரம் : ஒவ்வொரு படிக்கும் ஒதுக்கப்படும் நேரம்
- கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், கற்பித்தல் உத்தி, கற்றல் வளம் : ஆசிரியர் மேற்கொள்ளும் செயற்பாடுகள், பயன்படுத்தும் உத்திகள் மற்றும் வளங்கள்
- எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறு இல., ஆசிரியர் வழிகாட்டல் : எந்த விசேட கற்றல் பேற்றை அடைவதற்காக அந்தச் செயற்பாடு மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் ஆசிரியரின் வழிகாட்டலையும் குறிப்பிடுதல்
- மாணவர் பங்கேற்பு: மாணவர்கள் மேற்கொள்ளும் கற்றல் செயற்பாடுகள்
- கணிப்பீடும் பின்னூட்டலும் : மாணவர்களின் கற்றல் அடைவைச் சரிபார்க்கும் முறைகளும் வழங்கப்படும் பின்னூட்டலும்
இந்த நிரல்கள் தனித்தனியாக நிரப்பப்பட வேண்டிய பகுதிகளாக இருந்தாலும், அவற்றுக்கிடையே நேரடித் தொடர்பு இருக்க வேண்டும் இந்த நிரல்கள் தனித்தனியாக நிரப்பப்பட வேண்டிய பகுதிகளாக இருந்தாலும், அவற்றுக்கிடையே நேரடித் தொடர்பு இருக்க வேண்டும்.
படி 1 – பாடப் பிரவேசம் (10 நிமிடங்கள்)
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், கற்பித்தல் உத்தி மற்றும் கற்றல் வளம் :
ஆசிரியர் வழிகாட்டி இணைப்பு 7.2.1.1 இல் உள்ள உரையாடலை வகுப்பில் முன்வைத்தல். இரு மாணவர்களை உரையாடலை வாசிக்க அல்லது பாத்திரமேற்று நடிக்கச் செய்தல். தொடர்ந்து உரையாடலை அடிப்படையாகக் கொண்டு கலந்துரையாடலை வழிநடத்தல். கற்றல் வளம்: ஆசிரியர் வழிகாட்டி இணைப்பு 7.2.1.1.
விசேட கற்றல் பேறு இல. மற்றும் ஆசிரியர் வழிகாட்டல்:
கற்றல் பேறு 1. பல்வேறு மனிதத் தேவைகளுக்கேற்ப சமூக நிறுவனங்கள் உருவாகின்றன; அவை சமூகத்தில் காணப்படுகின்றன; அவற்றின் ஒன்றிணைப்பினால் சமூகம் உருவாகின்றது; ஒருவர் ஒரு நிறுவனத்திலோ பல நிறுவனங்களிலோ அங்கத்தவராக இருக்கலாம் என்ற கருத்துகளை வெளிக்கொணர்தல்.
மாணவர் பங்கேற்பு: உரையாடலை வாசித்தல் அல்லது நடித்தல்; உரையாடலில் குறிப்பிடப்படும் சமூக நிறுவனங்களை அடையாளம் காணுதல்; தமது கருத்துகளைப் பகிர்தல்.
கணிப்பீடும் பின்னூட்டலும்: உரையாடலில் குறிப்பிடப்படும் சமூக நிறுவனங்களை மாணவர்கள் இனங்காண்கிறார்களா, அவை உருவாகும் தேவைகள் தொடர்பாகக் கருத்துகளை முன்வைக்கிறார்களா என்பதை வாய்மொழி வினாக்கள் மூலம் அவதானித்தல். சரியான விடைகளைப் பாராட்டுதல்; சிரமப்படும் மாணவர்களுக்கு உரையாடலில் இடம்பெற்ற சம்பவங்களை மீண்டும் சுட்டிக்காட்டி வழிகாட்டுதல்; சமூக நிறுவனங்கள் மனிதர்களின் பல்வேறு தேவைகளுக்கேற்ப உருவாகின்றன என்பதை எடுத்துக்காட்டுகளுடன் தெளிவுபடுத்துதல்.
படி 2 (12 நிமிடங்கள்)
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், கற்பித்தல் உத்தி மற்றும் கற்றல் வளம்:
மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்தல். ஆசிரியர் வழிகாட்டி இணைப்பு 7.2.1.2 இல் உள்ள செயற்பாட்டுத் தாளின் பிரதிகளை வழங்குதல். அட்டவணையைப் பூர்த்தி செய்ய வழிகாட்டுதல். கற்றல் வளம்: இணைப்பு 7.2.1.2 செயற்பாட்டுத் தாள்.
விசேட கற்றல் பேறு இல. மற்றும் ஆசிரியர் வழிகாட்டல்:
கற்றல் பேறு 2. சமூக நிறுவனத்தின் பெயர், அதன் கடமை, பொறுப்பு, தனிமனிதருக்குக் கிடைக்கும் நன்மை, சமூகத்திற்குக் கிடைக்கும் நன்மை ஆகிய கூறுகளை அடையாளம் காணவும் பதிவு செய்யவும் வழிகாட்டுதல்.
மாணவர் பங்கேற்பு:
குழுக்களாக இணைந்து செயற்பாட்டுத் தாளை ஆராய்தல்; சமூக நிறுவனங்களை அடையாளம் காணுதல்; அவற்றின் கடமைகள், பொறுப்புகள் மற்றும் நன்மைகளை அட்டவணையில் பதிவு செய்தல்.
கணிப்பீடும் பின்னூட்டலும்:
அட்டவணையின் கூறுகளைச் சரியாகப் புரிந்து பதிவு செய்கிறார்களா, கடமை, பொறுப்பு, நன்மை ஆகியவற்றை வேறுபடுத்துகிறார்களா, குழுச் செயற்பாட்டில் பங்கேற்கிறார்களா என்பதை அவதானித்தல். சரியான பதிவுகளைப் பாராட்டுதல்; தவறான பதிவுகளை எடுத்துக்காட்டுகளுடன் தெளிவுபடுத்துதல்; கடமைக்கும் பொறுப்புக்கும் இடையிலான வேறுபாட்டை மீண்டும் விளக்குதல்; குறைவாகப் பங்கேற்கும் மாணவர்களை ஊக்குவித்தல்.
படி 3 (8 நிமிடங்கள்)
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், கற்பித்தல் உத்தி மற்றும் கற்றல் வளம்:
ஒவ்வொரு குழுவும் தமது குழுச் செயற்பாட்டின் முடிவுகளை வகுப்பில் சுருக்கமாக முன்வைக்க வழிவகுத்தல். கற்றல் வளம்: பூர்த்தி செய்யப்பட்ட செயற்பாட்டுத் தாள்கள்.
விசேட கற்றல் பேறு இல. மற்றும் ஆசிரியர் வழிகாட்டல்:
கற்றல் பேறுகள் 2, 3. குழுக்களின் முன்வைப்புகளைக் கவனித்து, சமூக நிறுவனங்களின் கடமைகள், பொறுப்புகள் மற்றும் நன்மைகள் தொடர்பான கருத்துகளைத் தெளிவுபடுத்துதல்.
மாணவர் பங்கேற்பு:
குழுவின் முடிவுகளை முன்வைத்தல்; ஏனைய குழுக்களின் கருத்துகளைக் கேட்டறிதல்.
கணிப்பீடும் பின்னூட்டலும்:
சமூக நிறுவனங்களின் கடமைகள், பொறுப்புகள் மற்றும் நன்மைகளை மாணவர்கள் பொருத்தமாக விளக்குகிறார்களா, கருத்துகளைத் தெளிவாகவும் ஒழுங்காகவும் முன்வைக்கிறார்களா என்பதை அவதானித்தல். சரியான விளக்கங்களைப் பாராட்டுதல்; கருத்துகளில் காணப்படும் குழப்பங்களைப் பொருத்தமான எடுத்துக்காட்டுகள் மூலம் தெளிவுபடுத்துதல்; கருத்துகளை முழுமையாக முன்வைக்கச் சிரமப்படும் மாணவர்களுக்கு வழிகாட்டும் துணை வினாக்களை எழுப்பி ஊக்குவித்தல்.
படி 4 – மீளாய்வு (5 நிமிடங்கள்)
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், கற்பித்தல் உத்தி மற்றும் கற்றல் வளம்:
குழுக்களுக்கிடையில் கருத்துப் பரிமாற்றத்தை ஏற்படுத்துதல். ஒரு குழுவின் முன்வைப்பு தொடர்பாக ஏனைய குழுக்களின் கருத்துகளைக் கேட்டறிதல். ஆசிரியர் முக்கியக் கருத்துகளைத் தொகுத்து வழங்குதல். வளம்: குழுக்களின் செயற்பாட்டு அட்டவணைகள்
விசேட கற்றல் பேறு இல. மற்றும் ஆசிரியர் வழிகாட்டல்:
கற்றல் பேறுகள் 3, 4. சமூக நிறுவனங்கள் பலவற்றின் ஒன்றிணைப்பினால் சமூகம் உருவாகின்றது; அவற்றின் அங்கத்தவர்களுக்குக் கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன; அவற்றை நிறைவேற்றுவதால் தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் நன்மைகள் ஏற்படுகின்றன என்ற கருத்துகளை உறுதிப்படுத்துதல்.
மாணவர் பங்கேற்பு:
கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுதல்; ஏனைய குழுக்களின் கருத்துகளைக் கேட்டல்; தமது கருத்துகளை முன்வைத்தல்.
கணிப்பீடும் பின்னூட்டலும்:
மாணவர்கள் பொருத்தமான கருத்துகளையும் எடுத்துக்காட்டுகளையும் முன்வைக்கிறார்களா, குழுக்களுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றத்தில் ஆக்கபூர்வமாக ஈடுபடுகிறார்களா என்பதை அவதானித்தல். பொருத்தமான கருத்துகளையும் எடுத்துக்காட்டுகளையும் முன்வைக்கும் மாணவர்களைப் பாராட்டுதல்; கருத்துகளில் காணப்படும் தெளிவின்மைகளை வழிகாட்டும் துணை வினாக்கள் மற்றும் பொருத்தமான எடுத்துக்காட்டுகள் மூலம் தெளிவுபடுத்துதல். குழுக்களுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றத்தில் பங்கேற்கத் தயங்கும் மாணவர்களை ஊக்குவித்து, அனைவருக்கும் கருத்துகளைப் பகிர்வதற்கான வாய்ப்பை வழங்குதல்.
படி 5 – முழுமையான கணிப்பீடும் பின்னூட்டலும் (5 நிமிடங்கள்)
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், கற்பித்தல் உத்தி மற்றும் கற்றல் வளம்:
பாடத்தின் முக்கியக் கருத்துகளை மீள நினைவூட்டுதல். குறுகிய வாய்மொழி வினாக்களையும் செயற்பாட்டுத் தாள் அவதானிப்புகளையும் பயன்படுத்தி கற்றல் அடைவைச் சரிபார்த்தல். தேவையான பின்னூட்டத்தை வழங்குதல்.
வளம்: செயற்பாட்டுத் தாள்.
விசேட கற்றல் பேறு இல. மற்றும் ஆசிரியர் வழிகாட்டல்:
கற்றல் பேறுகள் 1, 2, 3, 4. ஆசிரியர் வழிகாட்டியின் கணிப்பீட்டு நியமங்களை அடிப்படையாகக் கொண்டு கற்றல் அடைவை உறுதிப்படுத்துதல்.
மாணவர் பங்கேற்பு:
வினாக்களுக்கு விடையளித்தல்; சமூக நிறுவனங்கள் தொடர்பான கருத்துகளைத் தொகுத்துக் கூறுதல்; தமது கற்றலை வெளிப்படுத்துதல்.
கணிப்பீடும் பின்னூட்டலும்:
சமூக நிறுவனங்கள் தொடர்பான முக்கியக் கருத்துகளை மாணவர்கள் நினைவுகூர்ந்து சரியாக விளக்குகிறார்களா, வாய்மொழி வினாக்களுக்குப் பொருத்தமான பதில்களை வழங்குகிறார்களா, செயற்பாட்டுத் தாளில் கடமை, பொறுப்பு, தனிநபர் நன்மை, சமூக நன்மை ஆகியவற்றைச் சரியாகப் பதிவு செய்துள்ளார்களா என்பதைச் சரிபார்த்தல். சரியான பதில்களைப் பாராட்டுதல்; தவறான அல்லது முழுமையற்ற பதில்களைப் பொருத்தமான எடுத்துக்காட்டுகள் மூலம் தெளிவுபடுத்தி, தேவையான திருத்த வழிகாட்டலை வழங்குதல்.
7.0 விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கற்பித்தல் உத்திகள் (Strategies for Students with Special Needs)
- வாசிப்பதில் சிரமமுள்ள மாணவர்களுக்கு உரையாடலை ஆசிரியர் வாசித்துக் காட்டுதல் அல்லது சகமாணவர் உதவியை வழங்குதல்.
- சமூக நிறுவனங்களை விளக்கும் காட்சிப் படங்கள் மற்றும் எளிய எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்துதல்.
- எழுதுவதில் சிரமமுள்ள மாணவர்களுக்கு வாய்மொழியாகக் கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பளித்தல்.
- குழுச் செயற்பாட்டில் ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் ஆற்றலுக்கேற்ப பங்களிப்புச் செய்யும் பொறுப்புகளை வழங்குதல்.
- தேவைக்கேற்ப கூடுதல் நேரமும் தனிப்பட்ட வழிகாட்டலும் வழங்குதல்.
8.0 மேலதிகக் கற்றல் (Further Learning)
பாடவேளையில் பெற்ற கற்றல் அனுபவங்களை மேலும் விரிவாக்குவதற்கும் வகுப்பறைக்கு வெளியே மாணவர்கள் தமது அறிவைப் பயன்படுத்துவதற்கும் மேலதிகக் கற்றல் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
மேலதிகக் கற்றல் செயற்பாடுகள் அடுத்த பாடத்திற்கான முன்னேற்பாடாகவும், கற்ற கருத்துகளை நடைமுறை வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தும் வாய்ப்பாகவும் அமையலாம்.
மேலதிகக் கற்றல் செயற்பாடுகளுக்கான எடுத்துக்காட்டுகள்:
- பாடத்துடன் தொடர்புடைய தகவல்களைச் சேகரித்தல்
- அன்றாட வாழ்க்கையில் காணப்படும் எடுத்துக்காட்டுகளைப் பதிவு செய்தல்
- குறுகிய அறிக்கை தயாரித்தல்
- படங்கள் அல்லது செய்தித் துணுக்குகளைச் சேகரித்தல்
- குடும்பத்தினர் அல்லது சமூக உறுப்பினர்களிடம் தகவல் கேட்டறிதல்
- அடுத்த பாடத்திற்கான முன் வாசிப்பு மேற்கொள்ளுதல்
எடுத்துக்காட்டு – மாணவர்கள் தமது பிரதேசத்தில் காணப்படும் ஒரு சமூக நிறுவனத்தைத் தெரிவுசெய்து, பின்வரும் தகவல்களைச் சேகரித்து அடுத்த பாடவேளையில் முன்வைத்தல்.
- சமூக நிறுவனத்தின் பெயர்
- அதன் முக்கிய நோக்கம்
- அதன் அங்கத்தவர்களின் கடமைகள்
- அதன் அங்கத்தவர்களின் பொறுப்புகள்
- தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் அது வழங்கும் நன்மைகள்
9.0 அனுமதி (Approval)
பாடத்திட்ட மாதிரியில் அனுமதி வழங்குவதற்கான பகுதி இடம்பெற்றுள்ளது.
இந்தப் பகுதியில் பாடத்திட்டத்தைத் தயாரித்த ஆசிரியர் அல்லது ஆசிரியர் பயிலுநரின் பாடத்திட்டம் உரிய பொறுப்புடைய நபரால் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவதற்கான கையொப்பம், பெயர் மற்றும் திகதி ஆகியவை பதிவு செய்யப்படுகின்றன.
கையொப்பம் ........................................
பெயர் ........................................
திகதி ........................................
அனுமதி என்பது வெறும் கையொப்பமிடும் நடைமுறை மட்டுமல்ல. பாடத்திட்டத்தின் நோக்கம், உள்ளடக்கம், கற்றல் பேறுகள், செயற்பாடுகள், நேர ஒதுக்கீடு மற்றும் கணிப்பீடு ஆகியவை பொருத்தமாக உள்ளனவா என்பதைப் பரிசீலிக்கும் வாய்ப்பாகவும் அமைகிறது.
10.0 ஆசிரியர் பிரதிபலிப்பு (Reflection Notes)
பாடம் கற்பிக்கப்பட்ட பின்னர் ஆசிரியர் தமது கற்பித்தல் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான பகுதியாக ஆசிரியர் பிரதிபலிப்பு அமைகிறது.
பாடம் திட்டமிட்டபடி நடைபெற்றதா, மாணவர்கள் எதிர்பார்த்த கற்றல் பேறுகளை அடைந்தார்களா, எந்தச் செயற்பாடுகள் பயனுள்ளதாக அமைந்தன, எத்தகைய சவால்கள் ஏற்பட்டன, அடுத்த முறை என்ன மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பவற்றை ஆசிரியர் ஆராய வேண்டும்.
பிரதிபலிப்பு என்பது பாடத்தின் வெற்றி, தோல்வி அல்லது குறைபாடுகளை மட்டும் பட்டியலிடுவது அல்ல. எதிர்பார்த்தவற்றையும் உண்மையில் நடந்தவற்றையும் ஒப்பிட்டு, கற்றுக்கொண்டவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலக் கற்பித்தலை மேம்படுத்தும் செயற்பாடாகும்.
ஆசிரியர் பிரதிபலிப்பின் நான்கு கூறுகள்
- எதிர்பார்த்தவை : பாடத்தின் மூலம் மாணவர்கள் அடைய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட கற்றல் பேறுகள் மற்றும் பங்கேற்பு
- நடந்தவை: உண்மையில் நடைபெற்ற கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், மாணவர் பங்கேற்பு, கற்றல் அடைவு மற்றும் எதிர்கொண்ட சவால்கள்
- கற்றுக்கொண்டவை: கற்பித்தல் அனுபவத்தின் மூலம் ஆசிரியர் பெற்ற புதிய புரிதல்கள், அனுபவங்கள் மற்றும் கண்டறிதல்கள்
- பிரதிபலிப்பு: எதிர்பார்த்தவற்றுக்கும் நடந்தவற்றுக்கும் இடையிலான வேறுபாடுகள், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள்
மாதிரிப் பாடத்திற்கான நிரப்பப்பட்ட பிரதிபலிப்பு
எதிர்பார்த்தவை: மாணவர்கள் தமது பிரதேசத்தில் காணப்படும் சமூக நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றின் கடமைகள், பொறுப்புகள் மற்றும் தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் கிடைக்கும் நன்மைகளை விளக்குவர் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், குழுச் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்பட்டது.
நடந்தவை: பெரும்பாலான மாணவர்கள் சமூக நிறுவனங்களை அடையாளம் கண்டு பெயரிட்டனர். குழுச் செயற்பாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சில மாணவர்களால் கடமை மற்றும் பொறுப்பு ஆகியவற்றைத் தெளிவாக வேறுபடுத்த முடியவில்லை. குழுக்களின் முன்வைப்புகளிலும் பங்கேற்பு மட்டங்களில் வேறுபாடுகள் காணப்பட்டன.
கற்றுக்கொண்டவை: மாணவர்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களுடன் தொடர்புபடுத்திய உரையாடல்கள் கற்றலை எளிதாக்கின. செயற்பாட்டுத் தாள் குழுக் கலந்துரையாடலுக்கு உதவியது. எனினும், அனைத்து மாணவர்களும் சமமாகப் பங்கேற்பதை உறுதிப்படுத்துவதற்கு தனிப்பட்ட பொறுப்புகளை வழங்குவது அவசியம் என்பதை உணர்ந்துகொண்டேன்.
பிரதிபலிப்பு : எதிர்பார்த்த கற்றல் பேறுகளில் பெரும்பாலானவை அடையப்பட்டாலும், கடமை மற்றும் பொறுப்பு ஆகியவற்றை வேறுபடுத்துவதில் சில மாணவர்களுக்கு மேலதிக வழிகாட்டல் தேவைப்பட்டது. அடுத்த பாடத்தில் கூடுதல் எடுத்துக்காட்டுகள், காட்சிவளங்கள் மற்றும் தனிப்பட்ட மாணவர் பங்கேற்பை உறுதிப்படுத்தும் குழுப் பொறுப்புப் பகிர்வு ஆகியவற்றைப் பயன்படுத்தத் தீர்மானிக்கிறேன்.
குறிப்பு: இது மாதிரிப் பதிவு மட்டுமே. உண்மையான பாடம் நடத்தப்பட்ட பின்னர் கிடைக்கும் அவதானிப்புகள் மற்றும் மாணவர் அடைவுகளின் அடிப்படையில் ஆசிரியர் அதனை மாற்றிப் பதிவு செய்ய வேண்டும்.
11.0 மேற்பார்வையாளர் குறிப்பு (Supervision Notes)
பாடத்திட்ட மாதிரியின் இறுதிப் பகுதி மேற்பார்வையாளரின் அவதானிப்புகளையும் குறிப்புகளையும் பதிவு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்பார்வையாளர் பாடம் கற்பிக்கப்படும் முறையை அவதானித்து, ஆசிரியரின் திட்டமிடல், கற்பித்தல் செயற்பாடுகள், மாணவர் பங்கேற்பு, கற்றல் வளங்களின் பயன்பாடு, வகுப்பறை முகாமைத்துவம், கணிப்பீடு மற்றும் பின்னூட்டல் ஆகியவற்றை மீளாய்வு செய்யலாம்.
மேற்பார்வையாளர் கவனிக்கக்கூடிய அம்சங்கள்
- பாடத்திட்டத்திற்கும் நடைமுறைக் கற்பித்தலுக்கும் இடையிலான பொருத்தம்.
- விசேட கற்றல் பேறுகளின் தெளிவு.
- கற்றல் கற்பித்தல் முறைகளின் பொருத்தம்.
- மாணவர் மையச் செயற்பாடுகளின் பயன்பாடு.
- அனைத்து மாணவர்களினதும் பங்கேற்பு.
- கற்றல் வளங்களின் பயனுள்ள பயன்பாடு.
- பாடவேளைக்கான நேர முகாமைத்துவம்.
- கணிப்பீடும் பின்னூட்டலும்.
- விசேட தேவையுடைய மாணவர்களுக்கான ஆதரவு.
- ஆசிரியரின் பிரதிபலிப்பு மற்றும் மேம்பாட்டு முயற்சிகள்.
மேற்பார்வையாளர் குறிப்புகள் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதுடன் முடிவடையக்கூடாது. ஆசிரியரின் சிறப்பம்சங்களை அடையாளம் கண்டு, மேம்படுத்த வேண்டிய பகுதிகளுக்கு நடைமுறைக்கு ஏற்ற ஆக்கபூர்வமான வழிகாட்டலையும் வழங்க வேண்டும்.
இதன் மூலம் மேற்பார்வை என்பது கண்காணிப்பு நடவடிக்கையாக மட்டுமன்றி, ஆசிரியரின் வாண்மைத்துவ வளர்ச்சிக்கு உதவும் தொடர்ச்சியான கற்றல் செயற்பாடாகவும் அமைகிறது.
முடிவுரை
பாடத்திட்டம் என்பது ஆசிரியர் வகுப்பறைக்குள் எடுத்துச் செல்லும் ஒரு ஆவணம் மட்டுமல்ல. அது கற்றல் பேறுகளை அடைவதற்கான திட்டமிட்ட வழிகாட்டியாகும்.
ஒரு சிறந்த பாடத்திட்டத்தில் அடிப்படைத் தகவல்கள், விசேட கற்றல் பேறுகள், முன்னறிவை மீட்டல், சொற்களஞ்சியம், கற்றல் கற்பித்தல் முறைகள், பாட விருத்திச் செயற்பாடுகள், விசேட தேவையுடைய மாணவர்களுக்கான உத்திகள், மேலதிகக் கற்றல், அனுமதி, ஆசிரியர் பிரதிபலிப்பு மற்றும் மேற்பார்வையாளர் குறிப்பு ஆகிய அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புபட்டிருக்க வேண்டும்.
குறிப்பாக, கற்றல் பேறுகளுக்கும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கும் கணிப்பீட்டுக்கும் இடையில் தெளிவான ஒத்திசைவு காணப்பட வேண்டும். மாணவர்கள் எதை அடைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறதோ, அதனை அடைவதற்கான செயற்பாடுகள் திட்டமிடப்பட வேண்டும்; பின்னர் அந்த அடைவு பொருத்தமான கணிப்பீட்டு முறைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மேலும், ஆசிரியர் பிரதிபலிப்பின் மூலம் தமது கற்பித்தல் அனுபவங்களை ஆராய்ந்து, எதிர்காலப் பாடங்களை மேம்படுத்த வேண்டும். மேற்பார்வையாளர் வழங்கும் ஆக்கபூர்வமான பின்னூட்டமும் இந்த மேம்பாட்டுச் செயல்முறைக்கு வலுசேர்க்கிறது.
எனவே, பாடத்திட்டம் தயாரித்தல் என்பது ஒரு படிவத்தை நிரப்பும் செயற்பாடு அல்ல; கற்றல் பேறுகளை அடைவதற்கான திட்டமிடல், நடைமுறைப்படுத்தல், கணிப்பீடு, பிரதிபலிப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய தொடர்ச்சியான வாண்மைத்துவச் செயற்பாடாகும்.
ஒரு சிறந்த பாடத்திட்டம் என்பது ஆசிரியர் என்ன கற்பிக்கப் போகிறார் என்பதைக் காட்டும் ஆவணம் மட்டுமல்ல; மாணவர்கள் எவ்வாறு கற்பார்கள், எதை அடைவார்கள், அந்த அடைவு எவ்வாறு உறுதிப்படுத்தப்படும் என்பதையும் தெளிவுபடுத்தும் வழிகாட்டியாகும்.
உசாத்துணைகள்
Anderson, L. W., & Krathwohl, D. R. (Eds.). (2001). A taxonomy for learning, teaching, and assessing: A revision of Bloom’s taxonomy of educational objectives. Longman.
Black, P., & Wiliam, D. (1998). Assessment and classroom learning. Assessment in Education: Principles, Policy & Practice, 5(1), 7–74. https://doi.org/10.1080/0969595980050102
CAST. (2024). Universal design for learning guidelines version 3.0 [Graphic organizer]. https://udlguidelines.cast.org/
Hattie, J., & Timperley, H. (2007). The power of feedback. Review of Educational Research, 77(1), 81–112. https://doi.org/10.3102/003465430298487
Killen, R. (2016). Effective teaching strategies: Lessons from research and practice (7th ed.). Cengage Learning.
தேசிய கல்வி நிறுவகம். (2015). தரம் 7 குடியுரிமைக் கல்வி ஆசிரியர் வழிகாட்டி.
தேசிய கல்வி நிறுவகம். (2026). பழைய பாடத்திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிலுநர்களுக்கான தேசிய பாடத்திட்ட மாதிரிப் படிவம் – தமிழ்.
Organization for Economic Co-operation and Development. (2025). Unlocking high-quality teaching. OECD Publishing. https://doi.org/10.1787/f5b82176-en


Join the discussion
Leave a comment or reply to another reader. Your email address will not be displayed.